சுமந்திரனின் தோல்வி

27-01-2024

0

0

கடந்த ஞாயிறன்று (ஜனவரி 21) நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யாழ் மாவட்டத்தின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான  மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். வெற்றி பெற்றவர் சிறிதரன் என்றிருக்கும்  நிலையிலும்  இக்கட்டுரை, சுமந்திரனின் தோல்வி பற்றியே அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளது. போட்டியிட்ட இருவரில் தலைமைத்துவத்துக்கு மிகப் பொருத்தமானவராக சுமந்திரனே இருந்தார் என்பதும், தமிழ் மக்களின் அரசியலை இலங்கைத் தீவின் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் முகாமின் முக்கிய புள்ளியாக அவர் இருந்தார் என்பதும்  அவரது தோல்வி பற்றி  மேலும் ஆராய வேண்டிய அவசியத்தை  ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை  இலங்கை தமிழரசுக்கட்சிக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவில் செயற்படும் ஏனைய அரசியற் கட்சிகளுக்கு பரீட்சியமில்லாத ஒரு நடைமுறையே.  அதே சமயத்தில் தமிழரசுக் கட்சியில் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றமையால் அக்கட்சி உட்கட்சி சனநாயகத்தில் அக்கறை கொண்டுள்ளதாக நாம் கருதிவிட முடியாது.  அக்கட்சியில் தலை தூக்கியிருக்கும் குழு வாத நிலையை மேவிச் செயற்படக் கூடிய ஆளுமை அக்கட்சியின் தலைமைத்துவத்தில் காணப்படாத நிலையிலேயே தேர்தல் முறையை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் அக்கட்சி தள்ளப்பட்டது.  

தமிழரசுக் கட்சிக்கு  குழுநிலை மோதல்கள் புதியவை அல்ல.  தந்தை செல்வநாயகத்தின் காலத்திலிருந்து இவை தொடர்ந்து வந்துள்ளன. செல்வநாயகம் உத்தியோக பூர்வமான தலைவராக  இருந்து வந்துள்ள போதிலும், நடைமுறையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமே கட்சியில் தீர்மானம் எடுக்கும் அதிகாரங் கொண்டவர்களின் தலைவராக இருந்தார். இது பற்றி தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராகவிருந்து, பின்னாளில் அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தை நிறுவிய வ. நவரத்தினம் அவரது The Fall and Rise of Tamil Nation என்ற நூலில் விபரமாக எழுதியுள்ளார்.

இவ்விடயத்தில் தலையிட்டு போட்டித் தரப்புகளிடையே சமரசம் செய்யக் கூடிய வல்லமை கொண்ட ஆளுமையாக இரா. சம்பந்தன் இருந்து வந்தார் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால்

முதுமை காரணமாகவும் கடந்த பதினைந்து வருடங்களில் அவரால் எதனையும் சாதிக்க முடியாத நிலமையும் அவரது ஆளுமையைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. இன்று அவர் கூறுவதனைச் செவிமடுப்பதற்குக் கட்சியில் யாருமற்ற நிலையே காணப்படுகிறது. இதுவரை தலைவராகவிருந்த மாவை சேனாதிராசா அரை நூற்றாண்டு காலம் தமிழரசு கட்சியிலிருக்கிறார். ஆனால் அவரது ஆளுமை 2020 தேர்தல் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டது.  தேர்தலில் தோற்றுப் போன அவரைத் தேசியப் பட்டியலில் நியமிப்பது பற்றியோ, வேறொருவரை நியமிப்பது பற்றியோ அவருடன் கட்சியினர் ஆலோசிக்கவில்லை என்பதிலிருந்து அவரது தலைமைத்துவம் எத்தகையது என்பது மக்களுக்குத் தெரிய வந்தது.  மீதி நான்கு வருடத்தில் அவரது தலைமைத்துவம்  மேலும் தேய்வடைந்து விட்டது.

தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற சிறீதரன் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்துப் போட்டியிட்டார்.  தமிழரசுக் கட்சியின் கடந்த  பதினைந்து வருடகாலத் தவறுகளுக்கு அதன் முன்னைய தலைமையின் மீது, குறிப்பாக தலைமைக்கு மிக நெருக்கமாகச் செயற்பட்ட சுமந்திரன் மீது பழியினைப் போட்ட அவர், தான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். தலைமைக்குப் போட்டியிட விண்ணப்பித்து விட்டுப் பின்னர் விலகிச் சிறீதரனை வெளிப்படையாக ஆதரித்த  மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஊடக சந்திப்பினை நடத்தி சுமந்திரன் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர் என அறிவித்தார். ஆகவே சிறீதரனுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளாகக் கருத இடமுண்டு. அதே சமயத்தில், சுமந்திரன் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து இத்தேர்தலை எதிர்கொள்ளவில்லை.   ஆகவே அவருக்குக் கிடைத்த வாக்குகளை நாம் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளாகக் கணிக்க முடியாது. ஒரு ஜனாதிபதிச் சட்டத்தரணி, மும்மொழி ஆளுமை கொண்டவர், தலைமைத்துவப் பண்புகள் உடையவர் என்ற எந்தவொரு தகமையும் அவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

சுமந்திரனின் தோல்வி என்பது, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் கடந்த பதினைந்து வருடமாகக் காய் நகர்த்திய தமிழ்த் தேசிய அரசியல் நீக்க முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வி என்றே கூற வேண்டும். மேற்குலக அரசுகளின் அனுசரணையுடன் இரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட 'நல்லிணக்க' அரசியல் படுதோல்வியடைந்து விட்டது என்பதனையே இது வெளிக்காட்டுகிறது. ஏலவே 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவை பெரும்பான்மையால் வெல்ல வைத்து  சிங்கள மக்கள் இதனை வெளிப்படுத்தியிருந்தார்கள். இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள தேசங்கள் இன்னமும் பிரிந்தே இருக்கின்றன என்பதனை நிரூபிப்பதற்கு தமக்குக் கிடைத்தவொரு வாய்ப்பினைத்  தமிழரசுக்கட்சியின் பொதுக் குழுவின் உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சுமந்திரன். மேற்கத்தைய தரப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்டார்.  இரணில் - மைத்திரியின் 'நல்லிணக்க' அரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுமந்திரன் பரப்புரை செய்தபோது அதில் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த அரசாங்கத்தின் தோல்வி சுமந்திரன் மீதான  தமிழ் மக்களின் அதிருப்தியை அதிகரித்தது.  2020 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு லட்சம் விருப்பு வாக்குகளைப் பெறுவேன் என எகத்தாளமிட்ட சுமந்திரன் ஈற்றில் அரும்பொட்டில் வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெறவில்லை எனக் கருதுபவர்களும் உண்டு.

புலம்பெயர் தேசங்களிலிருந்து, மேற்கத்தைய,
இந்திய அரசுகளின் முகவர்களாகச் செயற்படும் அமைப்புகளுக்கும், தனிநபர்களுக்கும் சுமந்திரன் பெற்ற தோல்வி உவப்பானதாக இருக்கப் போவதில்லை. 'இமாலயப் பிரகடனம்' செய்தவர்களுக்கும் இது பெருத்த பின்னடைவாகவே இருக்கும். புதிய வியூகத்தை அமைக்க வேண்டிய தேவை அவர்களுக்குண்டு.

சுமந்திரனின் தோல்வி மூலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அரசியல் பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும், அதனை தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனக் கருத முடியாது. இத்தோல்வியைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினால் தமிழ்த் தேசிய அரசியலை முன்நகர்த்த முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. தலைமைத்துவத்தினைக் கைப்பற்றுவதற்கு மாத்திரம் தமிழ்த் தேசியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற நியாயமான ஐயப்பாடும் மக்களிடையே உண்டு.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தமது கட்சியில்  தலையெடுத்திருக்கும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களைக் களையெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பாரா என்பதனை அறிய மக்கள் காத்திருக்கிறார்கள். சிறீதரனுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் மக்கள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமிருப்பார்கள்.