தற்போதும் பெருமளவிலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்
02-11-2023

வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
“முன்னதாக திருகோணமலையில் முதலாம் இடத்தில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இது மூன்றாம் இடத்திற்கு செல்லும் அபாயத்திலும் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் திருகோணமலையிலிருந்து குறைந்தது 10 குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். இவ்வாறு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுவது மாவட்ட இருப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.” என்றார்.
தமிழர்தாயகமான வடக்கு கிழக்கில் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பெருமளவிலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். போர் முடிவுக்கு வந்த பின்பும் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நின்றபாடில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.