மட்டக்களப்பு மேச்சல் தரைப் பகுதியில் சிங்கள விவசாயிகள் தொடர்ந்து அட்டூழியம்
18-11-2023
0
22
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள விவசாயிகள் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரைப் பகுதியில் சிங்கள விவசாயிகள் அத்துமீறி குடியேறி பல்வேறு அட்டூழியங்களை தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றி வருகின்றனர்.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்களை சிங்கள விவசாயிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.
அதேவேளை, பொறி வைத்து பிடித்து கால்நடைகளை கொலை செய்யும் செயற்பாட்டையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மேச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன.
மேலும், மாடுகளை கட்டிவைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்து அங்குள்ள பொருட்களை எரித்து விட்டு செல்வதாகவும் அதுகுள்ள மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த மேச்சல் தரை விவகாரத்திற்கு தீர்வுகோரி பண்ணையாளர்கள் தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தும் இது வரையில் அம் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ஆனால் குறித்த மேச்சல் நில பகுதியில் சிங்கள விவசாயிகள் தமிழர்களின் பெருமளவிலான நிலப்பகுதியை அபகரித்துள்ளனர். அத்தோடு நூற்றுக்கும் அதிகமான மாடுகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாட்சரம் என்பவருடைய 4 வயது மதிக்கத்தக்க பசுவே மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் சிங்கள விவசாயிகள் வைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.