ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்யாது

27-11-2023

0

42

1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரின் பின்னர் சூடான் தலைநகர் Khartoumஇல் கூடிய அரபு நாடுகள் Khartoum Resolution என்னும் பெயரில் முடிவுகள் எடுத்தன. அதில் முக்கியமானவை மூன்று இல்லைகள்: இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதில்லை, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை, இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. எல்லா அரபுநாடுகளும் அதை மீறிவிட்டன. அரபு நாடல்லாத ஈரான் மட்டும் அதன்படி நடக்கின்றது.

 

இஸ்ரேல் அழிக! அமெரிக்கா அழிக!

 

1979-ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க ஆதரவு மன்னரை விரட்டி மதவாத மக்களாட்சியை நிறுவும் புரட்சி நடைபெற்றதில் இருந்து அமெரிக்கா அழிக, இஸ்ரேல் அழிக என்ற குரல் ஈரானில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தக் குரல் லெபனான், ஈராக், ஆப்கானிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளுக்கும் பரவினது மட்டுமல்ல பாகிஸ்த்தானிலும் பல தீவிரவாத அமைப்புக்களினது குரலாகவும் ஒலிக்கின்றது. 2023 ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் தாக்குதல் செய்ததை ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் அழிக என்ற வாசகத்தை நாடாளுமன்றத்திலேயே உரக்க ஒலித்தனர். ஈரானிய உச்சத் தலைவர் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலைக் கேள்விப்பட்டவுடன் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறேன் என்றார்.

 

முரண்பட்ட செய்திகள்

 

அமெரிக்காவின் Wall Street Journal நாளிதழ் ஈரானுக்கு ஹமாஸின் தாக்குதலில் தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதற்கான ஆதரங்கள் இல்லை என்றது. இஸ்ரேலின் கருத்தும் அதை ஒத்துப் போனது. பின்னர் அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சி ஹமாஸ் அமைப்பினர் தமது ஒக்டோபர்-7 தாக்குதலை முன் கூட்டியே ஈரானுக்கு அறிவிக்காத படியால் ஹமாஸிற்கு இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் நேரடியாக உதவி செய்ய மாட்டாது என ஹமாஸ் தலைவர்களிடம் ஈரான் உச்சத் தலைவர் கமெய்னி தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது. ஈரானை இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபடச் சொல்லி ஹமாஸ் அமைப்பினர் பகிரங்கமாக கோரிக்கை விடுப்பதைத் தடுக்கும் படி ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுக்கு கமெய்னி உத்தரவிட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

 

கட்ஸ் படைத்தளபதி ஹமாஸிற்கு ஆதரவு

 

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவான கட்ஸ் படையணி ஈரானுக்கு ஆதரவான படைக்குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றது. கட்ஸ் படையின் கட்டளைத் தளபதி எஸ்மாயில் கானி எஜ்ஜடீன் அல் கசாம் படையணியின் தலைவர் Deifஇற்கு ஆதரவு தெரிவித்து எழுதிய கடிதத்தில் முக்கியமானவை:

 

1. உங்கள் தாக்குதலின் வெற்றிக்கு எனது பாராட்டு

 

2. சியோனிசத் தனியுரு(இஸ்ரேல்) அழிக்கப்படும்வரை எதிர்ப்பியக்கங்களுக்கான ஈரானின் ஆதரவு தொடரும்

 

3. எதிர்ப்பியக்க அமைபுக்களின் உடன்பிறப்புக்கள் ஹமாஸின் பின்னால் ஒன்று பட்டு நிற்பார்கள்.

 

4. எல்லாச் செயல்களுக்கும் அல்லாவே எசமான் ஆவார்.

 

எஸ்மாயின் கானி சொல்லிய எதிர்ப்பியக்கங்களுள் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா, யேமனில் இருந்து செயற்படும் ஹூதிகளின் அமைப்பு, ஈராகிலும் சிரியாவிலும் இருந்து செயற்படும் பல்வேறு ஈரான் ஆதரவு அமைப்புக்கள் அடங்கும்.

 

ஈரானிய ஆதரவுக் குழுக்களின் தாக்குதல்கள்.

 

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள அமெரிக்கப் படைநிலைகளில் 55 தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் செய்யவில்லை. ஹிஸ்புல்லா அமைப்பு காத்திரமான தாக்குதல்கள் எதையும் செய்யவில்லை. யேமனில் இருந்து செயற்படும் ஈரான் ஆதரவு வழங்கும் ஹூதிகளின் அமைப்பு இஸ்ரேல் மீது பல ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் தொலைதூர ஏவூர்தித் தாக்குதல்களையும் செய்துள்ளது. இஸ்ரேலுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செங்கடலில் வைத்து யூதர் ஒருவருக்கு சொந்தமான பாரிய கப்பல் ஒன்றையும் அதில் பணிபுரிபவர்களையும் ஹூதிகள் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கப்பலுக்கு காப்புறுதி செய்த லொயிட்ஸ் நிறுவனம் அதில் மகிழூர்ந்திகள் இருப்பதாகச் சொல்கின்றது. இனி இஸ்ரேலுக்குச் சென்று வரும் கப்பல்களுக்கு காப்புறுதிக் கட்டணம் அதிகரிக்கப்படும். ஈரானின் ஆதரவுடன் செயற்படும் அமைப்புக்களில் ஹுதிகளின் அமைப்பு மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவு தொலைவில் (2200கிமீ) உள்ளது.

 

வலிமை குறைந்த ஈரானின் வான்படை

 

ஈரானின் வான்படையில் பெரும்பாலானவை பழையவையாகும். F-4இல் 63 விமானங்கள், Su-24இல் 23 விமானங்கள், Mig-29இல் 19விமானங்கள் ஈரானிடம் உள்ளன. இஸ்ரேலிடம் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் முன்னணி விமானமான F-16 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களில் முதன்மையானதாக கருதப்படும் F-35 ஆகியவை இருக்கின்றன. 2022-ம் ஆண்டு இஸ்ரேலின் F-35 ஒரு மாதகாலமாக ஈரானின் வான்பரப்பில் ஈரானுக்குத் தெரியாமல் பறப்புக்களை மேற்கொண்டு ஈரானின் படை நிலைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி வைத்துள்ளது. F-35 வந்தது போனது எல்லாம் ஈரானிய வான்படைக்குத் தெரியாமலே நடந்தது. அத்தகவல்களை வைத்து இஸ்ரேல் ஈரான் கட்டளையகம் என்னும் ஒரு தனிப்படைப்பிரிவை ஆரம்பித்து தேவை ஏற்படின் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானில் எங்கு குண்டுகளை வீச வேண்டும் என்ற திட்டத்தை தயாரித்துள்ளது. போதிய போர் அனுபவம் இல்லாத ஈரானிய வான்படையால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியாது.

 

இஸ்ரேலுடன் தரைத்தொடர்பில்லா ஈரான்

 

ஈரான் இஸ்ரேல் மீது தரைப்படைத் தாக்குதல் செய்வதாயின் அது ஈராக்கினூடாக அல்லது துருக்கியினூடாக தனது படைகளை சிரியாவிற்கு கொண்டு சென்று தாக்குதல் செய்ய வேண்டும். தற்போது உள்ள நிலையில் அது முடியாத ஒன்று. ஈராக்கிலும் துருக்கியிலும் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளன. சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளின் எப்பாகத்திலும் அமெரிக்காவால் தாக்கக் கூடியவகையில் அமெரிக்கக் கடற்படையின் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் மதிய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் நிலை கொண்டுள்ளன. தேவை ஏற்படின் பாஹ்ரேன், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க கடற்படையினர் இஸ்ரேலைப் பாதுகாக்க களமிறங்குவர்.

 

ஈரானின் கடற்படைத் தாக்குதலும் ஏவுகணைத் தாக்குதலும்

 

ஈரான் தனது கடற்படையை இஸ்ரேலைத் தாக்க அனுப்புவதாயின் அரபுக்கடல் வழியே சென்று ஏடன் வளைகுடாவைக் கடந்து செங்கடல் செல்ல வேண்டும். ஆனால் செங்கடலில் அமெரிக்கப் படையின நாசகாரிக் கப்பல்கள் நிலை கொண்டுள்ளன. அதுவும் இயலாத செயல். ஈரானிடம் தொலைதூரம் பாயக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேல் வரை பாயக் கூடியவை என ஈரான் சொல்கின்றது. அவற்றை வீசினால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுக்கும். இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் சிறந்த வழி படைக் குழுக்கள் மூலம் தாக்குதல் செய்வது மட்டுமே.