தாய் நிலமும்! இடப்பெயர்வும்!

08-12-2023

0

58

 

“இடப்பெயர்வு” இச்சொல் மானுட வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு மாபெரும் மர்மம். ஆதி மனித இனம் தனது வாழ்க்கையைப் பாதுகாக்க பூமிப்பந்தின் எல்லாகண்டங்களிலும் அமைந்த செழுமையான நிலப் பரப்புகளில் குடியேறத் தொடங்கியது. பல்வேறு வகையான புவியியல் அமைப்பைக் கொண்ட வேறுபட்ட கால சூழ்நிலைகள் மனிதனின் அகம் மற்றும் புற வாழ்க்கையைப் பல்வேறு வகையில் பிரித்தது. அவை நிறங்கள் மொழிகள் கலாசாரங்கள் எனப் பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த பரிமாணம் மனிதனை ஒருநிலையான இடத்தில் தங்க வைத்து தங்களுக்கு என குடும்பம், சமூகம், ஊர், அறநெறி என காரணிகளை உள்ளடக்கிய பகுதிகளில் அவர்களை வாழ வைத்தது அவைதாய் நிலங்களாக மாறியது.

 

முறையே இம் மனித இனம் வணிகம், நாடுகள், அதிகாரங்கள், எல்லைப் பரப்புகளின் விரிவாக்கங்கள், இறையாண்மை, தன்னுரிமை  மற்றும் போர் என அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியது.

 

14 ஆம் நூற்றாண்டு வரை சர்வதேச வணிகம் என்பது சீனர்கள் தமிழர்கள் அரேபியர்கள் எகிப்தியர்கள் என ஆசியவணிகர்களாலே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் உலக அளவில் அரசியல் மற்றும் வணிகக் காரணங்களுக்காக மக்களின் இடப்பெயர்வு என்பது குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அதன் பிறகு மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட வணிக போட்டியின் காரணமாக ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா என மிகப்பெரிய கண்டங்களில் உள்ள பகுதிகளில் மேற்கத்திய நாடுகளின் வணிகத் தளங்கள் உருவாகி பின்பு அவை நாடுபிடிப்பு கொள்கையாகத் தீவிரமடைந்தது. அதன் விளைவு, நிறைய மேற்கத்திய காலணிகள் உருவாகின.  இச்சூழ்நிலையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வணிகர்களாகவும் வேலை ஆட்களாகவும், அடிமைகளாகவும் மக்கள் புலம்பெயர்ந்தனர் அல்லது புலம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். 

 

தெற்காசியப் பகுதிகளில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசியப் பகுதிகளுக்கும் ஐரோப்பாவிலிருந்து வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்காவிற்கும்  மக்கள் தங்களின் தாய் நிலங்களை விட்டுப் புலம்பெயர்ந்தனர்.

 

மேற்கத்திய நாடுகளின் இத்தகைய வணிக போட்டி நாடு பிடிப்பு போட்டியாக பரிமாணமடைந்து, 18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய போர்களை மேற்கத்திய நாடுகளில் உருவாக்கியது. அதன் தொடர்ச்சி என்பது ஆசியா ஆப்பிரிக்கா அமெரிக்கா கண்டங்களில் நீண்டது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் தங்களின் நாடுகளில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். தற்கால அகதி என்னும் பதம் இவ்விடத்திலிருந்து அதிகமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.

 

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் அதனை உலகளவில் மிகப்பெரிய பேசுபொருளாகவும் சர்வதேச அரசியலாகவும் மாற்றியது. இரண்டாம் உலகப்போரின் முடிவு என்பது பல்வேறு புதிய நாடுகளை உருவாக்கியது, வெவ்வேறான இனக்குழுக்கள் ஒன்றிணைந்து நாடுகளாக மாறியது. சிலநாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன, சில நாடுகள் விடுதலை ஆக்கப்பட்டன. அதன் விளைவு சில நாடுகளில் தேசிய இன உரிமை மற்றும் சில நாடுகளில் கொள்கைகள் என சர்வதேச அரசியல் போக்கின் காரணிகள் பல்வேறு போர்களை உலக அளவில் வழி நடத்தியது. இவை போர் நடந்த நாடுகளில் வாழ்ந்து வந்த மக்களின் தாய் நிலங்கள் பறிக்கப்பட்டு அகதி சமூகங்கள் உருவாக காரணமாகவும் இருந்தது. அதன்தொடர்ச்சி இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது.

 

யூதர்கள், பாலஸ்தீனியர்கள் என தொடங்கி இன்று தமிழர்கள்,  ரோஹிங்கியாக்கள்,

திபெத்தியர்கள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள் சூடானியர்கள், உக்ரேனியர்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வந்த தாய் நிலங்களையும், கலாசாரங்களையும், பண்பாட்டு வழக்கங்களையும் விடுத்து உயிர் பாதுகாப்பிற்காக ஓடத் தொடங்கிய மனிதர்களை தனது சக மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பொழுது சட்ட விரோதக் குடியேறி எனவும் அகதியெனவும் தற்கால அரசியல் முத்திரை குத்தியது. 

 

இவ்வாறான மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையரகம் போன்ற மனித உரிமை அமைப்புக்கள் அவர்களுக்கான வாழ்வியலை உறுதிப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் இவர்களின் பணி என்பது ஏட்டு அறிக்கையாகவே இருந்து வருகிறது. 1951ல் ஆரம்பித்த அகதிகள் நலச் சட்டங்கள் இன்றளவிலும் பல்வேறுநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே உள்ளது. 

 

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாதக்கணக்கில் கடல்கள், மலைகள், பாலைவனங்கள், காடுகள் எனப் பல்வேறு இயற்கைச் சூழல்களையும் மனிதனால் உருவாக்கப்பட்டக் கொடூரமான எல்லைகளையும் தாண்டி அகதியென வேறு நாட்டிற்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையானது இன்று 2023ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் படி 110 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்.  அவர்களின் 36.4 மில்லியன் மக்கள் அகதிகளாகவும்,6.1 மில்லியன் மக்கள் தஞ்சக் கோரிக்கை விடுத்தவர்களாகவும், 5.3 மில்லியன் மக்கள் சர்வதேசப் பாதுகாப்பைக் கோருபவர்களாகவும்  உள்ளனர். 

 

இந்த மக்களுக்கு அரசியல் ரீதியான புலம்பெயர்ந்த நாடுகளிலும் தாய் நாட்டிலும் பல்வேறு வகையான இடர்பாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாட்டின் வாழ்வியல் சூழல், மொழி, கலாசாரம், பொருளாதார நிலை, மதம், நிறமென பல்வேறு காரணிகள் இந்த மக்களின் வாழ்வியலில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

 

சர்வதேச அளவில் அகதிகள் நலச் சட்டங்களை ஏற்றுக்கொண்ட நாடுகள் பலவும் இன்று அகதி மக்களை இனம், மொழி, நிறம் எனும் பல்வேறு காரணங்களை வைத்துப் பிரித்து ஆள்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஆசியாவைச் சார்ந்த அகதிகள் தங்களின் உரிமைகளைப் பெறுவது என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. வெள்ளையின ஐரோப்பிய மக்களின் அகதிக் கோரிக்கை என்பது ஒருவகையாகவும் பிற மக்களின் அகதிகோரிக்கை என்பது வேறுவொரு வகையாகவும், கையாளப்படுவது சர்வதேச சட்டத்தின் இயலாமையைக் காட்டுகிறது.

 

குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, அவுஸ்திரேலியா,ஸ்வீடன் போன்ற நாடுகள் இதில் அடங்கும். இந்தியா போன்ற நாடுகளோ இந்த மக்களை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கான தனி சட்டங்களையோ அல்லது குடியுரிமை உட்பட எந்த ஒரு அடிப்படை உரிமைகளையோ கொடுக்காமல் அவர்களை சட்டவிரோதக் குடியேறி என கூறி ஒரு வேற்று கிரகவாசியைப் போல் முகாம்கள் எனும் திறந்த சிறையில் வாழ வைக்கிறது. 

 

இதில் இலங்கையில் போர் நடந்த காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கடல் வழிப்பயணம் மேற்கொண்டு தஞ்சம் கோரி தமிழகம் வந்த ஈழ தஞ்சக்கோரிக்கையாளர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்களே தவிர அவர்கள் இதுவரையில் அகதிகளாக அடையாளப்படுத்தப்படவில்லை.

 

இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் சூழல்களிலிருந்துவரும் அகதி மக்கள் உளவியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தோடு பொருளாதார வீழ்ச்சி வறுமை காரணமாகவும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெருமளவிலான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டமுரணான பயணங்களை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த கடல் வழிப்பயணங்களால் அதிகளவில் உயிரிழப்புக்களையும் அம் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 

குறிப்பாகத் தங்களுக்கு நடந்த அவலத்தை நினைத்தும் தங்களின் இழப்புகளைக் குறித்தும் அவர்கள் ஒரு மனஅழுத்தத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். குடியேறியநாடுகளில் கல்வி பெறவும் வாழ்க்கை அமைத்துக்கொள்ளவும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும், இவர்கள் படும் இன்னல்கள் மேலும் அவர்களை ஒருவித உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது என்றால் அதுமிகையாகாது.

 

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு வேண்டி சர்வதேச சமூகத்தை இம்மக்கள் நாடும் பொழுது அவர்களுக்கு இன்னல்களை விளைவித்த நாடுகள் சர்வதேச நாடுகளிடம் இம்மக்கள் பிரிவினைவாதிகள் என்னும் முத்திரை குத்துகின்றது. இவைகளைத் தாண்டி ஏதாவது ஒரு நாள் தங்களின் சொந்த நிலம் தங்களுக்குக் கிடைக்காதா? அப்பொழுது அங்கு வாழமாட்டோமா?  என்னும் ஆசை ஒருபுறமும், மறுபுறம் இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் குடியேறிய நாட்டில் குடியுரிமை கிடைக்காதா? அந்த நாட்டில் தனது குடும்பத்துடன் அமைதியான ஒரு வாழ்வியலை தொடங்கமுடியாதா? என்னும் ஏக்கத்துடன் பல்வேறு நாடுகளைச் சார்ந்த இலட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

 

சர்வதேச அரசியலைப் பொருத்தமட்டில் அகதி மக்களின் வாழ்வியல் என்பது தற்பொழுது மிகப்பெரிய கேள்விக்குறியின் மத்தியில் உள்ளது. இம் மக்களைப் பிரித்துப் பார்ப்பதும் மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் மிகப்பெரியப் பாராபட்சமும் சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவிக் கொண்டு வருகிறது. இதனை ஐ.நா. சபையின் அகதிகள் நல ஆணையரகமும் ஐ.நா. மனித உரிமை ஆணையமும் தடுத்து நிறுத்தி இம்மக்களுக்கான உரிமைகளை நிலை நாட்ட வேண்டிய தருணம் தற்பொழுது எழுந்துள்ளது.

 

மேலும் குடியேறிய நாடுகளில் இருந்து ஒரு சில மக்கள் தங்களுடைய தாய் நிலங்களுக்குத் திரும்ப எண்ணும் பொழுது அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கென உரிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். அதுவும் பல்வேறு நாடுகளில் நடப்பதில்லை. அப்படி உறுதிப்படுத்தாமல் ஆண்டுகளுக்கான ஏட்டு தரவுகளில் இத்தனை மக்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம் என கூறிக்கொள்வதில் எந்த ஒரு பெருமையும் இல்லை.

 

மனித இனத்தின் அதிகார வெறி ஆட்டத்தில் அப்பாவி மக்கள் இனம், மொழி, நிறம் மற்றும் மதம் என பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல் தீர்வுகளுக்குப் பல காலங்கள் தேவைப்படலாம் ஆனால் அகதி மக்களின் இடர்களைச் சீர்படுத்த அவ்வளவு நேரம் தேவையில்லை. சட்டங்களை அமல்படுத்தினாலே போதும்.

 

ஒவ்வொரு நாடும் முதலில் உள் நாட்டுக்குள்ளையோ வெளி நாடுகளிலோ தனது மக்களை அகதிகளாக அலைய விடாது தனது உள் நாட்டு பிராந்திய அரசியலை ஓரளவேனும் மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு செயற்படுவதும் முக்கியம். அகதியின் குழந்தையும் அகதி என்னும் நிலை தொடராமல் இருக்கட்டும்!