தமிழீழம், பலஸ்தீனம், இன்ன பிறதேசங்களும் சர்வதேச நீதியும்

02-05-2024

1

0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடைபெற்று பதினைந்து வருடங்கள் கடந்து விட்டன. இவ்வருடமும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ் அரசியற் தரப்புகள் தயாராகிக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். சமகாலத்தில் காசா நிலப்பரப்பில் பலஸ்தீனர்களின் இனப்படுகொலையினை எதிர்கொண்டு வருகிறார்கள். இஸ்ரேலிய அரசு தனது விருப்பம் போல் மக்களின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உலகின் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டங்களோ, அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களோ இஸ்ரேலிய அரசைக் கட்டுப்படுத்த உதவவில்லை. தென்னாபிரிக்க அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) இஸ்ரேலுக்கு எதிராகத் தொடுத்த இனப்படுகொலை வழக்கும் பலஸ்தீன மக்களுக்கு நீதியை இதுவரை பெற்றுத் தரவில்லை. இத்தகைய பின்னணியிற்தான் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்தேறிய தமிழினப் படுகொலை தொடர்பில் எம்மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

சர்வதேச அபிப்பிராயம், சர்வதேச நீதி, சர்வதேச நீதிக் கட்டமைப்புகள், ஐ.நா. அமைப்புகள் என்பவை பற்றிய எங்களது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் பற்றிய மறுவாசிப்பினைச் செய்ய வேண்டியிருக்கிறது. நிகழ்காலத்தில் நடைபெறும் சம்பவங்களை கணக்கிலெடுக்காது நாம் கனவுலகில் சஞ்சரிக்க முடியாது.

 

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில், 2009ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அவ்வாண்டு மே 18ம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இக்கணிப்பீடுகள் தொடர்பில் இறுதிப்படுத்தப்பட்ட உறுதியான தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் அங்கு பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதனை உறுதிப்படுத்தக் கூடிய கண்கண்ட சாட்சிகள் உள்ளனர். அவர்கள் தமது சாட்சியங்களை ஐ.நா. மனிதவுரிமைச் சபை உட்பட பல்வேறு பொது அமைப்புகளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.  சிறிலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கும் வழங்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கம் சொல்வதுபோல் அங்கு பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதனை யாரும் நம்புவதில்லை. இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்களுக்குத்  தண்டனை பெற்றுக் கொடுக்காவிட்டாலும் மீள இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது அல்லவா? இந்த இடத்திற்தான் 'சர்வதேச நீதி' பற்றி நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

பொதுவில் சர்வதேச சமூகம், சர்வதேச அபிப்பிராயம், சர்வதேச நீதி என்ற சொல்லாடல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு மயக்கநிலை தொடர்ந்து நிலவுகிறது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கருத்துத் திணிப்பு. இவற்றை மையப்படுத்தி, அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற பல மில்லியன் டொலர்கள் வருடாந்தம் செலவிடப்படும் ஒரு துறையாக இது வளர்ந்திருக்கிறது. உலகில் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் இச்சொல்லாடல்கள் கனதியானவை என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்  கடவுளின் நீதியில் (வடமொழியில் தர்மம்) அல்லது இயற்கையின் நீதியில் (பாளி மொழியில் தம்ம) நம்பிக்கை கொண்டிருப்பதுபோல் சர்வதேச நீதியிலும் நம்பிக்கை வைப்பதற்கு மக்களுக்கு கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. கடவுளின் நீதி அல்லது இயற்கையின் நீதி செயற்படுகிறதா இல்லையா என்பதனை அறிவது வெளிப்படையானதொன்றல்ல. அது உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டியது. ஆனால் 'சர்வதேச நீதி' செயற்படுகிறதா? அல்லது அவ்வாறான தோற்றப்பாடு மட்டும் உள்ளதா? என்பதனை அறிவதற்கு நாம் அத்தனை சிரமப்பட வேண்டியதில்லை. பலஸ்தீனத்திலும் ஏனைய தேசங்களிலும் நடைபெறும் விடயங்களை அவதானித்தாலே போதுமானது. 

 

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு எந்தச் சர்வதேச நீதி மன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் அணுக முடியும்? ஐநாவின் அமைப்புகளான, மனிதவுரிமைச் சபை, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஆகியவற்றின் மூலமாகவே பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோர முடியும். அதுவும் அவர்கள் நேரடியாக அல்லாமல் நாடுகளின் மூலமாகவே இவற்றை அணுக முடியும். அங்கத்துவ நாடுகள் குறித்த விடயத்தில் அக்கறை காட்டாதவிடத்து அவை உதவப் போவதில்லை. உலகின் பலம் பொருந்திய நாடுகள் ஆதரவு தராவிட்டால் இவ்விடயத்தில் ஒரு விசாரணை கூட நடைபெறப் போவதில்லை. பலம் பொருந்திய நாடுகள் தங்கள் நலனுக்குப் புறம்பாக எந்த நீதிக்கும் கட்டுப்படுவதில்லை. இவை நாம் அண்மைய நாட்களில் உணர்ந்து கொண்ட சங்கதிகள் அல்ல இவை காலங்காலமாக நிலவி வரும் நடைமுறை.

 

கடந்த வருடம் ஒக்ரோபர் 7ம் திகதி இஸ்ரேலில், ஹமாஸ் நடாத்திய தாக்குதலுக்கு பின்னர் இன்றுவரை  ஏறத்தாழ முப்பத்தைந்தாயிரம் மக்கள் காசா நிலப்பரப்பில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு நடப்பு இனப்படுகொலையா அல்லது மோதல்களுக்குள் அகப்பட்டு தவிர்க்க முடியாத சூழலில் இம்மக்கள் கொல்லப்பட்டார்களா என அறிவியற் சமூகத்தினர் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.  நடந்துவரும் சம்பவங்களுக்கு, சர்வதேச நாட்டு அரசாங்கங்கள், அமைப்புகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் அவரவர் நிலைப்பாட்டிலிருந்து  வழங்கும் வியாக்கியானங்கள், எதிர்வினை என்பன எமக்கு இதுவரை புகட்டிய கருத்துகளையும் அதன்மூலம் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் புரட்டிப் போடுவதாக அமைந்திருக்கின்றன.



முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய சம்பவங்களுக்கு சாட்சியமில்லை என்று கூறப்பட்டது. வழங்கப்பட்ட ஒரு சில ஆதாரங்கள் கூட போரில் ஈடுபட்ட ஒருதரப்பிற்கு பக்கச்சார்பானவை எனக் கூறப்பட்டது. இப்போது அனைத்துலக ஊடகங்களினது அதிநவீன ஒளிபடக் கருவிகளிலிருந்து வெளிவரும் ஆதாரங்களைக் கூட அதிகார மையங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இஸ்ரேலைக் காப்பாற்றும் முயற்சியில், காசாவில் மரணிக்கும் மக்கள் மோதலுக்குள் அகப்பட்டுக் கொல்லப்படுவதாகவே மேற்குலக அரசுகள் கூறுகின்றன. அங்கு இனப்படுகொலை நடைபெறுவதனை மறுக்கின்றன.  இதிலிருந்து, 'சாட்சியமில்லாத யுத்தம்' நடைபெற்ற முள்ளிவாய்காலில் இனப்படுகொலை நடைபெறவில்லை என மேற்குலக இராஜதந்திரிகள் மறுப்பதன் அரசியலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக இனப்படுகொலை நடந்ததை நிரூபிக்க ஆதாரமில்லை என்று கிளிப்பிள்ளை போல் மீள ஒப்புவிப்பதனை அல்லது வாதிடுவதனை தமிழ் அரசியற் தரப்புகள் கைவிட வேண்டும். அவ்வாறு வாதிடும் அரசியல்வாதிகளை மக்கள் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும்.

 

"இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத் தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிலை நிர்ணயிக்கிறது. சர்வதேச அரசியலும் சரி, ராஜதந்திர உறவுகளும் சரி இந்த அடிப்படையில் தான் செயற்படுகிறது. இந்த நிலையில் எமது போராட்டத்தின் தார்மீக நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்து விடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரவேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும்; ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்கும் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எமது பக்கம் திரும்பும். உண்மையில் எமது போராட்டம் உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது, எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது."

 

மேற்காணும் கூற்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1993ம் ஆண்டு மாவீர் தின உரையில் குறிப்பிட்டவை. அவர் எச்சந்தர்ப்பத்திலும், சர்வதேச நீதி பற்றி நம்பிக்கை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாமோ, சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும், சர்வதேச அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகவும் இதுவரை மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட்டிருக்கிறோம். தொடர்ந்து செலவிடுகிறோம். சர்வதேச மட்டத்தில் தோழமைச் சக்திகளை வளர்ப்பது, ஆதரவுத் தளத்தை ஏற்படுத்துவது  என்பதும் கண்ணை மூடிக் கொண்டு 'சர்வதேச நீதியில்' நம்பிக்கை வைப்பதும் வேறு வேறான விடயங்கள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த ஆறுமாத காலமாக காசா நிலப்பரப்பில் நடந்தேறும் சம்பவங்களை இதனையே எமக்கு வலியுறுத்துகின்றன.

 

காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை மறுதலிப்பவன் எங்களது மேடையில் வந்து தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுதரப் போவதாகக் கூறினால் அவனை நிராகரிக்க வேண்டும் என்பதனையாவது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து இத்தகையவர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது வெறும் சடங்காகவே முடிந்துவிடும்.