இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சீனாவின் கப்பலுக்கு இலங்கை அனுமதி

27-10-2023

ஆராய்ச்சி குறித்த எந்த தகவலும் வெளியில் செல்லாது என அறிவிப்பு

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கப்பலான 'ஷி யாங் 6'  கடந்த 25ம் திகதி இலங்கைக்குப் பயணம் செய்து, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. குறித்த ‘ஷி யான் 6' ஆராய்ச்சிக் கப்பல், பல நூறு கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக் கோள் உதவியுடன் உளவுப் பார்க்கும் திறன் உடையது எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இந்தியா எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து அக்கப்பலுக்கு அனுமதி வழங்காமல் இலங்கை அரசு காலத்தாமதம் செய்து வந்தது.  இந்நிலையில், ஷி யான் 6 கப்பல்  இலங்கைக்குப் பயணம் செய்து கொழும்பு துறைமுகத்தில் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் இந்த செயலுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கவலை வெளியிட்டுள்ளன.

 

இந்த சூழலில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் கடலுக்கு அடியில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் நாரா அமைப்பின் விஞ்ஞானியான கே. அருளானந்தன் கூறுகையில், ‘சீனாவின் ஷி யான் 6 கப்பலுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காக வெளிவிவகார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கும் நாரா அமைப்பு, இந்திய பெருங்கடலில் நீர்நிலையை மையமாகக் கொண்டு வான் கடல் ஆராய்ச்சிக்கு இணங்கியுள்ளது. எனினும் பாதுகாப்பு விடயங்கள் காரணமாக கடலுக்கு அடியில் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. கடலில் வெப்பநிலையும் குளிர்ச்சியும் காலநிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே இவ்வாறான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.   இதன் மூலம் எதிர்காலத்தில் வறட்சி மற்றும் மழை குறித்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கண்டறிய முடியும்.  இது எங்கள் விவசாயத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். விவசாயிகள் காலநிலை குறித்து முன்கூட்டியே அறிய முடியும்’ என்றார்.

 

மேலும் உலகில் குறைந்தளவு ஆராயப்பட்ட பகுதி இந்து சமுத்திரம் எனக் குறிப்பிட்டுள்ள கே. அருளானந்தன், ‘நாங்கள் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம், இதன் காரணமாக எங்கள் விஞ்ஞானிகள் கப்பலில் ஏறி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். நாங்கள் எவரும் தரவுகளை எடுத்துக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை நாங்களே அதனை வைத்துக்கொள்வோம்’ தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு கடலுக்கு அடியில் எந்த ஆராய்ச்சிக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

உதாரணமாக கனிமங்கள் மற்றும் எரிவாயுகளை கண்டறிய இத்தகைய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன - இந்த விடயத்தில் பாதுகாப்பு கரிசனைகள் உள்ளதால் நாங்கள் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக சீன கடற்படைக் கப்பலான HAI YANG 24 உள்ளிட்ட இரு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது கப்பலாக 'ஷி யாங் 6' என்ற கப்பலுக்கும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி அனுமதி வழங்கியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது அதிகளவில் சீனா இலங்கைக்கு செய்த உதவிகளுக்கு மாற்றாக இலங்கை சீனாவின் கப்பல்களை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அனுமதிப்பதாகவும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

கடலுக்கு அடியிலான ஆராய்ச்சி என்ற போர்வையில் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இது போன்ற ஆராய்ச்சிக் கப்பல்களை சீனா உருவாக்கி வருவதாக இராணுவ வல்லுநர்கள் கருதுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது..