இஸ்ரேல் -கமாஸ்-பலஸ்தீனம்

31-10-2023

0

23

 2023-10-10 இஸ்ரேல்மீது தாக்குதல்

 

ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவை சீராக சீனா முயல்கின்றது. இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கின்றது. இவற்றால் உலகின் புவிசார் அரசியல் வரைபடம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது. இதனால் பலஸ்த்தீனியர்களின் விடுதலையும் தமிழீழ விடுதலையும் கவனிப்பாரற்றுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் தலைவர் வருகின்றார் அவர் மகள் வந்துவிட்டார் என தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் பலஸ்த்தீனியர்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய தாக்குதல் ஒன்றைச் செய்துள்ளனர். 

 

33,000இற்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 150,000 பலஸ்த்தீனியர்களை இதுவரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. இஸ்ரேல், மேற்குக் கரை, காசா நிலப்பரப்பு என மூன்று பிரதேசங்கள் உள்ளன. மேற்குக் கரையிலும் காசா நிலப்பரப்பிலும் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேல் யூதர்களுக்கான வலுவான நாடாக இருக்கின்றது. காசா நிலப்பரப்பு இஸ்ரேலுக்கும் எகிப்த்திற்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள 365 சதுர கிமீ நிலமாகும். அங்கு 2.3மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 

 

ஈர் அரசுத் தீர்வும் 13-ம் திருத்தமும்

 

மேற்குக் கரையில் வாழ்கின்ற பலஸ்த்தீனியர்கள் ஒஸ்லோ உடன்படிக்கை என்னும் பெயரில் ஏமாற்றப்பட்டனர். அதனால் இஸ்ரேலால் அடக்கப்பட்டவர்களாக கையறு நிலையில் ஈழத்தமிழர்கள் போல் இருக்க காசா நிலப்பரப்பு கமாஸ் என்னும் தீவிர போர்க்குணம் கொண்ட அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஈழத்தமிழர்களை 13-ம் திருத்தம் என்னும் மாயையைக் கொண்டு ஏமாற்றுவது போல் பலஸ்த்தீனியர்கள் ஈர அரசுத் தீர்வு என்பதை வைத்து ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். கமாஸ் அமைப்பு ஈரானிடமிருந்து கிடைக்கும் ஏவுகணைகளையும் தமது சொந்த உற்பத்தி எறிகணைகளையும் கொண்டு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் செய்வார்கள்.

 

வெற்றி விழாவிற்கு மறுநாள் படுதோல்வி

 

1973-ம் ஆண்டு நடந்த அரபு – இஸ்ரேல் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற நாளை இஸ்ரேல் 2023 ஒக்டோபர் 6-ம் திகதி கொண்டாடியது. ஆனால் கமாஸ் அமைப்பு Operation Al Aqsha Storm என்னும் பெயரில் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் இஸ்ரேல் மீது 2023 ஒக்டோபர் 7-ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் மேற்கொண்டது. இஸ்லாமியர்களின் மூன்று மிகவும் புனிதமான இடங்களுள் அல் அக்ஷாவும் ஒன்று. அதன் பெயரில் தாக்குதல் செய்யப்பட்டது. 5000 ஏவுகணைகளை கமாஸ் அமைப்பு வீசியதுடன் இஸ்ரேலின் தென் பகுதியில் உள்ள படைநிலைகள் மீது அதிரடித்தாக்குதலை நடத்தியது. இரண்டு சோதனைச் சாவடிகளை கைப்பற்றிய பின்னர் கமாஸ் அமைப்பினரின் முன்னேற்றம் இலகுவானதாக்கியது. இஸ்ரேலின் 22 நகரங்களுக்குள் கமாஸ் அமைப்பினர் முன்னேறிப் போய் இஸ்ரேலியப் படையினரையும் பொதுமக்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். அவர்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைக் கைது செய்துள்ளனர். இஸ்ரேலியர்கள் கடத்திச் செல்லப்பட்டதை ஒத்துக் கொண்ட இஸ்ரேல் எண்ணிக்கையை வெளிவிடவில்லை. 150 இஸ்ரேலியர்கள் கடத்தைப்பட்டுள்ளனர்.  

 

அமெரிக்கர் ஒன்பது பேரும் கடத்தப்பட்டுள்ளார்கள். கமாஸ் அமைப்புடன் Palestinian Islamic Jihad (PIJ) உட்பட வேறு சில பலஸ்தீனியப் போராளிகளும் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு இஸ்ரேலியப் படைத்தளத்தின் தொடர்பாடல்கள் யாவும் துண்டிக்கப்பட்டன. பல படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. கமால் செய்த தாக்குதல் இஸ்ரேலின் மூன்று வலிமைப் புள்ளிகள் கேள்விக்குள்ளாகி உள்ளன.

 

முதலாவது இஸ்ரேலினுடைய உளவுத்துறையின் திறமை. இஸ்ரேலின் உளவுத்துறை. கமாஸ் அமைப்பின் தாக்குதல் இஸ்ரேல் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. இரண்டாவது இஸ்ரேலின் இரும்புக்கூரை (Iron Dome) என்னும் வான் பாதுகாப்பு முறைமை. காசா நிலப்பரப்பில் இருந்து வீசப்படும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியன. அவற்றையும் மீறி இஸ்ரேலின் பல இடங்களில் கமாஸ் வீசியஏவுகணைகள் தாக்கியுள்ளன. 

 

மூன்றாவது இஸ்ரேலின் எல்லைப் பாதுகாப்பு. இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதன் எல்லை அதன் அயல்நாடுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது இஸ்ரேலியபடைத்துறையினரின் கொள்கை. இஸ்ரேல் அவ்வப்போது லெபனான், சிரியா போன்ற நாடுகளுக்குள் தாக்குதல் நடத்தும். ஈரான் தனது விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக குற்றம் சாட்டுகின்றது. 

 

கைதிகள் பரிமாற்றம்?

 

இஸ்ரேல் சிறைகளில் 170சிறுவர்கள் 33 பெண்கள் உட்பட 5200 பலஸ்த்தீனியர்கள் உள்ளனர். பலஸ்த்தீனியர்கள் கைப்பற்றிய இஸ்ரேலியர்களை வைத்து அவர்களை விடுவிக்கும் பேரத்தை பலஸ்த்தீனியர்கள் செய்யலாம். பலஸ்த்தீனியர்கள் ஆயிரம் பேரை விடுவித்தால் ஒரு இஸ்ரேலியரை பலஸ்த்தீனியர்கள் விடுதலை செய்வது வழமை. இஸ்ரேலின் உள் நாட்டு அரசியல் பெரும் குழப்ப நிலையில் தற்போது உள்ளது. தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூவிற்கு எதிரான வழக்குகளில் இருந்து அவர் தப்புவதற்காக அவர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதை திசை திருப்புவதற்காக கமாஸ் அமைப்பின் தாக்குதல் பற்றி இஸ்ரேலுக்கு தெரிந்து இருந்தும் அதை நடக்க அனுமதித்தது என ஒரு சதிக் கோட்பாடு உள்ளது. அது பற்றிய உண்மை வெளிவர சில நாட்கள் எடுக்கலாம். 

 

வழமை போல் இஸ்ரேல் கமாஸின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுத்தது. கமாஸ் தலைவர் Yehya Al-Sinwar அவர்களின் இல்லத்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகள் வீசின. அங்கு யாரும் கொல்லப்படவில்லை. பொதுவாக பத்து இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலடியாக நூற்றுக் கணக்கான பலஸ்த்தீனியர்களைக் கொல்லக் கூடிய குண்டுத்தாக்குதலை இஸ்ரேல் செய்யும். 800இற்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டமைக்க்கு அதே விகிதாசாரப் பழிவாங்கலை இம்முறை இஸ்ரேல் செய்ய முடியாமல் போகலாம். காசா நிலப்பரப்பில் கமாஸ் அமைப்பினர் பல நிலத்தடிச் சுரங்கங்களை அமைத்துள்ளனர். அதனால் தரைப்படை நகர்வு பல உயிர்ப்பலிகளை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும். 

 

பின்னணியில் ஈரான்

 

ஈரான் தொடர்ச்சியாக பலஸ்த்தீனியர்களுக்கு உதவி செய்து வருகின்றது. அதன் ஏவுகணை உற்பத்தி தொழில்நுட்பம் மேம்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஈரானின் புதிய ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பாதுகாப்பிற்கு எதிராக தேர்வுக்கு உள்ளாக்கப் பட்ட களமாகபலஸ்த்தீனியர்களின் தாக்குதல் பாவிக்கப்பட்டிருக்கலாம். தாக்குதலுக்கு முன்னர் சில மாதங்களாக தமக்கு இஸ்ரேலுடன் போரிட விரும்பவில்லை என்ற தோற்றப்பட்டை பலஸ்த்தீனியப் போராளி அமைப்புக்கள் ஏற்படுத்தின. பலஸ்த்தீனியர்கள் பலர் கீழ்ப்படிவு மிக்க ஊழியர்களாக இஸ்ரேலில் பணியாற்றினர். ஈரானியப் படை நிபுணர்கள் மூன்று மாதங்களாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து பலஸ்த்தீனியப் போராளிகளுக்கும் ஹிஸ்புல்லாப் போராளிகளுக்கும் தீவிர பயிற்ச்சி வழங்கினார்கள். ஈரானின் உச்ச தளபதி காசிம் சுலைமானை அமெரிக்கா கொலை செய்தமைக்கான பழிவாங்கல் மூன்று ஆண்டுகள்பிந்தங்கி விட்டது. இப்போது ஒன்பது அமெரிக்கர்கள் பலஸ்த்தீனியரகள் கையில்.

Orupaper ISSUE 271