இதுவரையில் 30,000 தொன் வெடி குண்டுகளை காசாவில் பயன்படுத்திய இஸ்ரேல்

12-11-2023

0

18

70 விகிதமான மக்கள் இடம்பெயர்வு

இஸ்ரேல் ராணுவத்துக்கும், கமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போர் 36-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. 

 

காசாவில் இடம்பெறும்   இந்த  போரில் பொதுமக்களின் இழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அங்கு இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும் 26000 பேர் காயமடைந்துள்ளதுடன், 2300 பேர் காணாமல்போயுள்ளனர்.

 

இதுவரையில் 48 ஊடகவியலாளர்களும், 493 மருத்துவத்துறை ஊழியர்களும் 18 அவசரநிலை பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வான் தாக்குதல்களினால் 70 விகிதமான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

 

இதுவரையில் இஸ்ரேல் 30,000 தொன் வெடிமருந்துகளை பயன்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சதுர.கி.மீற்றரக்கு 82 தொன் வெடிமருந்துகள். 50 விகிதமான வைத்திசாலைகளும்  62 விகிதமான சுகாதார நிலையங்களும் சேதமடைந்த நிலையில் மூடப்பட்டுள்ளன.

 

ஏறத்தாள 220,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 10 விகிதமானவை மனிதர்கள் மீண்டும் வாழமுடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 40,000 வீடுகளும், 88 அரச திணைக்கண கட்டிடங்களும் முற்றாக அழிந்துள்ளன. 60 பாடசாலைகள் முற்றாக அழிவடைந்ததுடன், 222 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. மாணவர்களின் கல்வி முற்றாக தடைப்பட்டுள்ளது. 56 மசூதிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 192 மசூதிகளும், 3 தேவலையங்களும் சேதமடைந்துள்ளன.

 

இந்த நிலையில், காசாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எங்களுக்கு அல்ல என்று பிரான்ஸ் அதிபரின் அறிவுரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவே மேக்ரான்  "காசாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்  அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும். குண்டு வீசுதலுக்கு எந்த நீதியும் கற்பிக்க முடியாது. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு ஆதாயம் தரும். ஹமாஸ் தீவிரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதேவேளையில் இஸ்ரேல் தற்காப்புக்காக நடத்தும் தாக்குதலை ஆதரித்தாலும் காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது. போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளின் தலைவர்களும் இதையே வலியுறுத்துவார்கள் என நான் நம்புகிறேன்" என்று முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.