மண்ணில் மறைந்தாலும் மனதில் மறையாத மாவீரர்கள் மகத்தானவர்கள்!--பா.அரியநேத்திரன்.
25-11-2023
0
26

எதிர்வரும் 2023, நவம்பர் 27 மாவீரர் நாளாகும். மாவீரர்களை ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை 27ம் நாளில் நினைவுகூரும் வழமை கடந்த 1989, நவம்பர் 27ம் திகதி முதல் முதலாக தமிழீழ தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 1960, யூன் 19ல் கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணத்தில் பிறந்து 1978ல் விடுதலைப்புலிகளில் இணைந்து போராடிய செ.சத்தியநாதன் என்ற இயற்பெயரை கொண்ட சங்கர், ஈழப்போராட்டத்தில் இருந்த போது 1982ம் ஆண்டு கார்த்திகை 27ல் வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் தமிழீழ விடுதலைக்காக மடிந்த மாவீரர்களை நினைவு கூருகின்றோம்.
முதலாவது மாவீரர் தினம் அன்றே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் முதலாவது மாவீரர் தின உரையும் உத்தியோகபூர்வமாக நிகழ்த்தப்பட்டது. ஆனால் கடந்த 2008 கார்த்திகை 27 வரை இருபது வருடங்கள் மாவீரர் தினம் வடக்கு கிழக்கில் உள்ள சகல துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்றதுடன் தலைவர் பிரபாகரனால் 20 மாவீரர் தின உரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
2009, மே18ல் முள்ளிவாய்க்கால் போர் மௌனித்த பின்னர் 2009, நவம்பர் 27 தொடக்கம் எதிர்வரும் 2023, நவம்பர் 27 வரை 15 வருடங்கள் மாவீரர் தினம் நினைவு கூரப்படாவிட்டாலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும், புலம்பெயர் உறவுகளும், தமிழ் நாட்டு மக்களும் தொடர்ச்சியாக அந்த நினைவு நிகழ்வை உணர்வுபூர்வமாக செய்து வருகின்றனர் என்பது உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமும், மட்டக்களப்பு, அம்பாறையில் 18 சதவீதமும்,வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 சதவீதமும் 2009,மே 18க்கு முன்னர் இருந்தன.
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணி ஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009, மே18ல் முள்ளிவாய்க்கால் போரில் மௌனித்த பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
இதுவரை வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் மொத்தமாக 33 மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்தன. 2008, நவம்பர் 27க்கு முன்னர் 27 துயிலும் இல்லங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2008, நவம்பர் 27 தொடக்கம் 2009, மே 18வரையும் உக்கிரமான போர் வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்டபோது மேலதிகமாக 06 துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டன.
மாவீரர் துயிலுமில்லங்கள் விபரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 துயிலுமில்லங்கள்:
அவை சாட்டி தீவகம் மாவீரர் துயிலுமில்லம், கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்,எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஆகும்.
கிளிநொச்சி மாவட்டம்:
(3 துயிலும் இல்லங்கள்) கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், விசுவமடு மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
முல்லைத்தீவு மாவட்டம் (5 துயிலுமில்லங்கள்)
முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், களிக்காடு (நெடுங்கேணி) மாவீரர் துயிலுமில்லம்.
மன்னார் மாவட்டம். (2 துயிலுமில்லங்கள் )
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் ஆகியன.
வவுனியா மாவட்டம். (1 துயிலுமில்லம்)
ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
மணலாறு பிரதேசம். (2துயிலுமில்லங்கள்)
உதயபீடம் (டடி முகாம்) மாவீரர் துயிலுமில்லம், இதயபீடம் (ஜீவன் முகாம்) மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இரண்டு மட்டும்.
திருகோணமலை மாவட்டம்-(4 துயிலுமில்லங்கள்)
ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம், உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் ஆகியன.
மட்டக்களப்பு மாவட்டம்: (4 துயிலுமில்லங்கள்) தரவை, தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம், வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம், மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.
அம்பாறை மாவட்டம்:(1துயிலுமில்லம்)
கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம் என மொத்தம் 27 துயிலுமில்லங்கள் மட்டுமே 2008 இறுதிவரை இருந்தன. ஆனால் போர் உக்கிரமான போது அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் (6 துயிலுமில்லங்கள்) விபரம் வருமாறு :
தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம், சுதந்திரபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாளை மாவீரர் துயிலுமில்லம், பச்சைப்புல்வெளி மாவீரர் துயிலுமில்லம், கரையா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், வெள்ளா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் ஆகிய ஆறு துயிலுமில்லங்கள் இறுதிப்போர் 2009, மே18 வரை அமைக்கப்பட்டன. எல்லாமாக மொத்தம் 33 துயிலுமில்லங்கள் இதுவரை ஏறக்குறைய ஐம்பதாயிரம் மாவீரர்களின் வித்துடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. அதேவேளை வடக்கு கிழக்கிற்கு வெளிமாவட்டங்களிலும், கடல் சமர்களில், கரும்புலிகள் என மரணித்தவர்களின் நினைவு கற்களும் இந்த துயிலுமில்லங்களில் அவர்களின் பெயர் குறிப்பிட்டு நடப்பட்டிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த 27/11/1982 தொடக்கம் 30/09/2001 வரை உயிர்நீத்த மாவீரர்கள் 17648 பேர் என விடுதலைப்புலிகளால் கடந்த 2001- செப்டம்பர் 30ல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009, மே18 வரை உத்தியோகபூர்வமாக உயிர் நீத்தவர்களின் விபரம் வெளியிடப்படாதபோதும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இளைஞர்கள் மட்டுமன்றி முஸ்லிம் இளைஞர்களும் 1990க்கு முன்னம் 45 பேர் அப்போது விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகளில் இணைந்து போராடியதை சகித்துக்கொள்ளாத அரசு தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரமாகவே 1990ல் முஸ்லிம் ஊர்காவல் படையினரை உருவாக்கி தமிழர்களுக்கு எதிராக பல கொலைகளை அரங்கேற்றியது. கிழக்கில் முஸ்லிம் தமிழ் உறவை பிரித்த வரலாறு சிங்கள ஆட்சியாளர்களாலேயே அரங்கேற்றப்பட்டது என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
27/11/2009 தொடக்கம் துயிலுமில்லங்களை இராணுவத்தினர் தன்னகப்படுத்தியதால் வடக்கு கிழக்கு தாயகத்தில் சில வருடங்கள் துயிலுமில்லங்களில் விளக்கேற்றாதபோதும், மாவீரர்தின உரை இடம் பெறாவிட்டாலும் தமிழ்மக்கள் ஏதோ ஒருவகையில் வணக்கம் செலுத்திவந்துள்ளனர். இராணுவத்தடைகளை மீறியும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், முன்னாள் போராளிகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தாமல் விடவில்லை. புலம்பெயர் தேசமெங்கும் எமது அயல்நாடான தமிழ்நாட்டிலும் மிகவும் எழுச்சியாக
நினைவுகூரப்பட்டு வருகின்றது. எதிர்வரும் நவம்பர் 27திங்கள் கிழமை வழமை போன்று வடக்கு கிழக்கில் சிறப்பாக மாவீரர் நாள் வணக்கம் இடம்பெரும்.
-பா.அரியநேத்திரன்-