ஞாபகம் வருதே-“மாட்டுக் கொட்டில்”

27-01-2024

0

1

பல மாடுகளை பராமரிப்பவர்கள் அவற்றை பட்டியில் அடைப்பார்கள். இவர்களில் அனேகமானோர் விவசாயிகள். வன்னி பிரதேசத்தில் மாட்டுப் பட்டிகள் அனேகம். ஓரிரு மாடுகளை தம் பால் தேவைக்காக வைத்திருப்போர் கொட்டில்களில் அவற்றை வளர்ப்பர். யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் அந்த நாட்களில் வீடுகள் பல மாட்டுக்கொட்டிலை கொண்டிருந்தன. விவசாயிக்கு உழவுக்கும் வீட்டுத் தேவையான பாலுக்கும் பட்டிகளும் கொட்டில்களும் தாயக பூமியில் பரவியிருந்தன. ஆங்கு ஈங்காக இன்றும் இருக்கின்றன. மாடுகளின் தேவையும் பயனும் தமிழரின் வாழ்வியலோடு ஒன்றி இருந்ததால்தான் மாட்டுப் பொங்கல், பொங்கல் மறுநாள் கொண்டாட்டமாக வழமை பெற்றது. என் சிறுபராயத்தில் எங்கள் வீட்டிலிலும் முன்புற மூலையில் மாட்டுக்கொட்டில் இருந்தது.

அம்மம்மாவின் பராபரிப்பில் இருந்த ஆடுகள், மாடு, கன்றுகள் அந்த கொட்டிலில்தான் வாசம் செய்தன. நீள அகலமான கொட்டில், கொட்டில் ஓரமாக மாட்டு தொட்டில், நடுவில் மாட்டு உணவு தொட்டில் கொண்டதாக அதன் வடிவமைப்பு. கப்பில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். தொட்டி, மாட்டு தீனியான வைக்கல், கிழித்த பனை வடலி இலை கீற்றுக்கள், இலைகுழைகளை கொண்டிருக்கும். பசிக்கு தொட்டியில் புசிப்பதும் தரையில் படுப்பதுமாக மாட்டின் வாழ்க்கை ஓடும். பகலில் வளவு புல்லை மேய கட்டுவதும் தவிடு, புண்ணாக்கு தண்ணீர் என்று குடிக்க கொடுப்பதும் நடக்கும். இருந்த இரண்டு செவியன் ஆடுகள், குட்டிகளோடு படுப்பதும் அந்த கொட்டிலில்தான். எங்கள் தோட்டக்காணியை பராமரித்த மாமா விதை வெங்காய பிடிகளை நிரைக்கு கட்டி தொங்கவிடுவதும் அந்த கொட்டில் கூரை சட்டங்களில்தான்.

இரவில் கோழியும் குஞ்சுகளும் கூட்டுக்குள் படுக்க வைக்கப்படுவதற்கும் அந்த கொட்டில் பயன்பட்டது. பெரிய கோழிகளும் சேவல்களும் கொல்லைப்புற நாரத்தை மரத்தில் படுக்கும். கொட்டிலுக்குள் இருக்கும் மாட்டின் புண்ணாக்கு தண்ணி வாளியில் கோழிகள் புண்ணாக்கை கொத்தி உண்ண போவதும் மாடு கொம்பை ஆட்டி மூசி கலைப்பதும் ரசனை தரும் காட்சிகள். மாட்டுக்கொட்டிலின் பெரும் பகுதி தென்னோலை தட்டிகளால் சுவர் போல மூடப்பட்டிருந்தது. மாட்டுக்கொட்டிலின் கூரை தென்னோலை கிடுகால் வேயப்பட்டிருந்தது. ஓலை ஓரிரு வருடங்களில் உக்கினால் மீள வேய தேவையான ஓலைகளை வளவு தென்னைகளே தரும்.

காய்ந்து விழுந்த தென்னோலைகளை தண்ணீரில் நனையவிட்டு மறுநாள் பாதி பாதியாக கிழித்து கிடுகு பின்னுவது  சனி, ஞாயிறு காலைகளில் எங்கள் வேலை. வளவு கமுகுகள் பட்டுவிட்டால் அவற்றை கிழித்து எடுத்த வரிச்சுக்களை கட்டி கிடுகை அவற்றில் அடுக்கி தொடுத்து கட்டி கூரை மேய்வது என் அண்ணன்மார் வேலை. சிக்கனம், சேமிப்பு, சம்பாத்தியம், சீதனம் முதிசம் என்றெல்லாம் வழக்கத்தில் இருந்த யாழ்ப்பாண கிராமங்களின் வாழ்க்கை முறையில் சிக்கனமான தாமே தம் உணவுபிற தேவைகளை வளவுக்குள் தோட்டத்தில் விளைவித்து கொள்கிற வழமை ஒவ்வொரு குடும்பங்களிலும் ஊறியிருந்தது.

வீட்டை கூட்ட விளக்குமாறும் வளவு தென்னோலை ஈக்கில் தயாரிக்கப்படும். வளவுக்குள் குளிக்கும் நீர் ஓடி  வழிந்து வளரக்கூடியதாக பசளி, வல்லாரை, பொன்னாங்காணி என்பன பயிரிடப்பட்டிருக்கும். வீட்டு தேவைக்கும் விற்று வருமானம் பெறவும் கோழி வளர்ப்பு முறை இருந்தது. கறி தேவைக்கு முருங்கைக்காய் ஆய்ந்து எடுக்க முருங்கை மரங்கள் வளவுக்குள் இருந்தன. மா, பலா, வாழை, கமுகு, மாதுளை, தோடை, எலுமிச்சை, மாதுளை, கொய்யா என வீட்டு வளவை நிறப்பி நின்றன. தென்னந்தோப்பு, பனந்தோப்பு, வேம்பு, விளாத்தி காணிகளும் பரம்பரை பரம்பரையாக கை மாறி வந்தன.

மாட்டுக்கொட்டில் மாடுகளுக்கும் பொங்கல் வருடாந்தம் நடக்கும். சாணத்தால் தரையை மெழுகி கோலம் போட்டு முற்றத்து பொங்கல் போல சிறப்பாக அது நடக்கும். மாட்டுக்கு குளிப்பாட்டி திருநீறு சந்தனம் குங்குமம் பூசி பூமாலை சூடி அலங்கரித்து வயிறு நிறைய குழை கொடுத்து மாட்டை விசேடமாக மகிழ்விக்கும் வகையில் மாட்டுப் பொங்கல், பொங்கலுக்கு மறுநாள் மாலை மாட்டுக்கொட்டிலில் நடப்பது வருடாந்த வழமை. அம்மம்மா வயோதிபத்தால் வருந்த பராமரிப்பார் இன்றி மாடுகள் விற்கப்பட்டதும் வீட்டை நவீனப்படுத்தி சித்தி முன்புறம் வரவேற்பு கூடம் அமைத்ததும் மாட்டுக்கொட்டில் வளவில் காணாமல் போக காரணமாயின.

புலம் பெயர்வு, வெளிநாட்டுப் பணம் என ஊர்தோறும் வீடுகள் இன்று மாளிகைகளாக மாறிவிட்டன. மாளிகைகள் ஆள்ஆரவாரம் இன்றி ஒர் இரு வயோதிபர்களை மட்டும் கொண்டதாக சந்தடியற்று காணப்படுகின்றன. வீடு, மாட்டுக்கொட்டில், சித்தியும் அம்மாவும் நாங்களும் அம்மம்மாவுமாக பதினொருபேர் வாழ்ந்த யோக வாசம் என பெயர்கொண்டு தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி வீதியில் அமைந்ததிருந்த அந்த நாற்சார் வீட்டை நினைக்க ஏக்கத்தான் மிஞ்சும்.