இஸ்ரேலைச் சூழும் வினைகள்

24-05-2024

0

0

2023 ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது நடந்த தாக்குதல் போல் இனியொரு தாக்குதல் நடக்கக் கூடாது என மார்தட்டிக் கொண்டு பலஸ்த்தீனிய போராளிகளின் அமைப்பு செயற்படும் காசா நிலப்பரப்பின் மீது தனது போரை ஆரம்பித்தது. தனது தரப்பில் படையினரின் உயிரிழப்பு பெருமளவு இல்லாமல் காச நிலப்பரப்பை கற்குவியல்களாக இஸ்ரேலியப் படையினர் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒக்டோபர் தாக்குதல் போல் இனி ஒரு தாக்குதல் நடக்காது என்ற நிலையை இஸ்ரேலியப் படைகளால் ஏற்படுத்தவில்லை. மாறாக அடிபட்ட பாம்புகளாக பல்லாயிரம் பலஸ்த்தீனியர்கள் சுருண்டு கிடக்கின்றனர். அவர்கள் சீறத் தொடங்கினால் இஸ்ரேல் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

வாஸ்த்து சரியில்லாத இஸ்ரேல்

இஸ்ரேலின் தென் மேற்குப் பகுதியில் ஹமாஸ் போராளிகள், அதன் வட மேற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா, வட பக்கமாக சிரியாவில் பல்வேறு படைக்குழுக்கள், இஸ்ரேலின் கிழக்குப் பகுதியில் மேற்குக் கரை வாழ் பலஸ்த்தீனிய மக்களின் எதிர்ப்பு போராட்டம், இஸ்ரேலின் தென் புறமாகவும் தொலைவாகவும் யேமனில் இருந்து செயற்படும் செங்கடலைக் கலக்கும் அன்சர் அல்லா படையினர். இவ்வளவும் போதாது என்று இஸ்ரேலின் கிழக்குப் பக்கமாக என்றும் கொதிக்கும் சூடான். மற்ற அரபு நாட்டு இளையோர், இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் செய்யும் இனவழிப்புப் போரைப் பார்த்து கொதித்துப் போயிருக்கின்றார்கள். அச்சு அணி எதிர்ப்பியக்கங்கள் (Axis of Resistance) எனப்படும் இந்த அமைப்புக்களுக்கு ஈரானும் பல அரபுச் செல்வந்தர்களும் இரகசியாமாக உதவி வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரேலுக்கு ஒரு தீராத தலையிடியாக என்றும் இருப்பவை இந்த அமைப்புக்களாகும்.

அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் பாடம்

பிரித்தானியாவில் வாழும் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிற் கட்சியை ஆதரிப்பவர்கள். காசாவில் நடக்கும் அழிவிற்கு எதிராக தொழிற்கட்சி குரல் கொடுக்காதபடியால் அவர்கள் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து தராணமைவாதக் கட்சியின ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். இதனால் பிரித்தானியா உள்ளூராட்சித் தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியிலும் பார்க்க லிபரல் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த அலை அமெரிக்காவில் 2024 நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலிலும் அடிக்கலாம். அதனால் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்கலாம். இவை அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் கொள்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆளும் கூட்டணியில் முறுகல்

காசா நிலப்பரப்பின் மீதான போரை ஆரம்பிப்பதற்கு இஸ்ரேலில் எல்லாத் தரப்பினரும் ஆதரவு வழங்கினர். ஆனால் போரை எப்படி முடிப்பது என்பதில் கட்சிகளுக்கு இடையில் மட்டுமல்ல படைத்துறை உயர் அதிகாரிகளிடையேயும் கடும் முரண்பாடு நிலவுகின்றது. இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவையின் உறுப்பினரான முன்னாள் படைத்துறைத் தளபதி பெனி கந்த்ஸ் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாகூவின் தலைமையில் இஸ்ரேல் ஒரு மூலைக்குள் முடக்கப்படுகின்றது என்றதுடன் காசா நிலப்பரப்பின் மீதான தாக்குதல் முடிந்த பின்னர் என்ன செய்வது என்பது பற்றி  தெளிவான ஒரு கொள்கை அவசியம் எனவும் வலியுறுத்தினார். 2024 மே மாதம் 19-ம் திகதி இஸ்ரேலிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் நடுவில் உரையாற்றும்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

சங்கடத்தில் மன்னர்கள்

முன்பு அமெரிக்காவின் கொள்கை இஸ்ரேலின் இருப்பு, எரிபொருள் விநியோகம், பயங்கரவாதம் ஆகியவைதான் முக்கியத்துவம் பெற்றன. இப்போது அவற்றுடன் ஈரானைத் தனிமைப்படுத்தல், சீனாவின் ஆதிக்கத்தை தடுத்தல் ஆகிய இரு பெரும் பிரச்சனைகள் சேர்ந்துள்ளன. இஸ்ரேல் செய்யும் இனவழிப்புப் போருக்கு எதிராக அரபு மக்களிடையே சினம் வளர்வது அமெரிக்காவின் பங்காளர்களான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் ஆட்சியாளர்களுக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. வளைகுடா ஒத்துழைப்புச் சபை உறுப்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன், சவுதி அரேபியா, ஓமான், கத்தார், குவைத் ஆகியவற்றையும் இஸ்ரேலையும் இணைத்து ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு செய்ய அமெரிக்கா விரும்புகின்றது. இஸ்ரேல் காசாவில் செய்யும் கொலைகள் அதற்கு தடையாக உள்ளது.

பலஸ்த்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின், அயர்லாந்து போன்றவை பலஸ்த்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன. நோர்வே, சிலோவியா, மோல்டா, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் அதே நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றன. ஏற்கனவே 44 நாடுகள் பலஸ்த்தீனத்தின் மேற்குக் கரையில் செயற்படும் அரசை ஏற்றுக் கொண்டுள்ளன.

ஈரானின் அணுகுண்டு

2024 ஏப்ரல் 13-14 திகதிகளில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளும் ஆளிலி விமானங்களும் இஸ்ரேலைத் தாக்கியதன் மூலம் ஈரான் தன்னால் இஸ்ரேலின் எப்பகுதியிலும் தாக்குதல் செய்ய முடியும் எனக் காட்டியுள்ளது. அதில் பாவிக்கப்பட்ட படைக்கலன்களிலும் பார்க்க அதிக வலிமையுள்ள அதிக தூரம் பாயக் கூடிய படைக்கலங்கள் ஈரானிடம் உள்ளன. உக்ரேன் போரின் பின்னர் ஈரானுக்கும் இரசியாவிற்கும் இடையில் உருவாகியுள்ள நெருக்கம் ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்யும் வலிமையை அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன.  

பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியர்கள்

இஸ்ரேல் மீது பன்னாட்டு நீதி மன்றம், பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றம் ஆகிய இரண்டிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் 29-ம் திகதி தென் ஆபிரிக்கா தொடுத்த பன்னாட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கில் இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் படை நடவடிக்கைகள் செய்யும் விதம் இனக்கொலை தடுத்தலும் தண்டித்தலும் மரபொழுங்கை மீறுவதாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் மனு 84 பக்கங்களைக் கொண்டது. தென் ஆபிரிக்கா இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இனக்கொலை மரபொழுங்கில் கையொப்பமிட்டுள்ளன. 2024 ஜனவரி 11-ம் திகதி பநீம விசாரணையை ஆரம்பித்தது. தென் ஆபிரிக்காவிற்கு பல இஸ்லாமிய நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. இஸ்லாமியர்களைக் கொண்டிராத பொலிவியாவும் பிரேசிலும் கூட ஆதரவு வழங்கியுள்ளன. இஸ்லாமிய நாடுகளாகிய பங்களாதேசமும் ஜோர்தானும் இடைபுகு மனு தாக்குதல் செய்துள்ளன. அந்த இரண்டு நாடுகளும் இனக்கொலை தொடர்பான தங்களது கரிசனைகள் வியாக்கியானங்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாகூ உட்பட அமைச்சர்கள், படைத்துறையினர் போன்றோருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கின்றது. இனக்கொலைக் குற்றச்சாட்டின் முக்கியமானதும் நிரூபிக்க கடினமானதுமான ஒன்று இனத்தை அழிக்கும் எண்ணம் குற்றவாளிக்கு இருந்தது என்பதாகும். அதாவது intent to commit genocide. இஸ்ரேல் தமக்கு அப்படி ஓர் எண்ணம் இருக்கவில்லை என்பதைக் காட்டுவதற்கு தமது பல இரகசிய ஆவணங்களை பன்னாட்டு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

இஸ்ரேலின் வலிமை மிக்க உளவுத்துறையும் திறன் மிக்க வான் படையும் இஸ்ரேலுக்கான மேற்கு நாடுகளின் ஆதரவும் இஸ்ரேலை இன்னும் எத்தனை ஆண்டுகள் பாதுகாக்கும்?