இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது ICC

11-11-2023

0

22

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இடைநிறுத்தியுள்ளது.  ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான முறையில் விளையாடியிருந்தது. அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

 

இந்நிலையில்,  இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இலங்கை முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை  கிரிக்கெட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த நிலையிலேயே, இலங்கை  கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது.

 

அதாவது   சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று கூடியிருந்த நிலையில்,  இலங்கை கிரிக்கெட் தமது உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக மீறுகிறது என்று  தெரிவித்திருந்தது. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் அதன் விவகாரங்களை சுயமான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதுடன், நிர்வாகம், ஒழுங்குமுறையில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக தனியார் சட்டத்தரணிகள் குழுவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிர்வாக சபையை அமைத்திருந்தார். ஆனால் அதற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால நிர்வாக சபைக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.