இனவாதத்தை விதைக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யக்கோரிக்கை

28-10-2023

சமூகத்தில் இனவாதத்தை விதைத்து - அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்,கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

மேலும்ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர்நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களைகொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைதுசெய்யாதா என கேட்க விரும்புகிறேன். எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும்கடந்து போக முயற்சிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்  அம்பிட்டிய சுமணரத்னதேரரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவரின் பின்புலத்தில் பாரியதொரு வலையமைப்பு இருக்கக்கூடும் என்றஅச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், மகாநாயக்க தேரர்களும் உடன் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்னதேரர், அவ்வப்போது இவ்வாறு தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் மீது அரசு இது வரையில் ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.