என்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான்-அட்லீ நெகிழ்ச்சி

16-11-2023

தன்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

 

ஷாருக்கான்.  நயந்தாரா   விஜய் சேதுபதி நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்தி திரையுலகில்  இயக்குநர்  அட்லீ அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்ததை அடுத்து அவருக்கு அங்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்த நேரத்தில், ‘நண்பன்’படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தது குறித்த அனுபவங்களை அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

அதில் அட்லீ கூறியது: “விஜய்யுடன் பணிபுரியும்போது அவரது தனிப்பட்ட மனிதத் தன்மை எனக்கு மிகவும் பிடித்தது. ‘நண்பன்’ படப்பிடிப்பின்போது நான் பார்க்க மிகவும் சுமாராக இருப்பேன், புத்திசாலித்தனமாக பேசமாட்டேன். ஆனாலும், என்னுடைய வேலை பிடித்து அவர் என்னை அவருடைய கேரவனுக்கு அழைத்தார். என்னை அவரது அருகில் அமரச் செய்து, ’உங்களுடைய வேலைகளை பார்த்தேன். மிகவும் பிடித்துள்ளது. எனக்காக ஒரு கதையை தயார் செய்துவிட்டு வாருங்கள். சேர்ந்து படம் பண்ணலாம்’ என்று சொன்னார். அந்த தருணத்தில் என்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் அவர்தான். அன்றிலிருந்து நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அன்றுவரை விஜய் சார் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த நான், அன்று முதல் விஜய் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.