இலங்கையில் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்-ஐ.நா பிரதிநிதி
21-11-2023
0
33

சுற்றுச்சூழல் பேரழிவுகள் உள்ளிட்ட ஆபத்துக்களால் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவான வேகத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிரிஸ்டின் ஸ்கூக் மேலும் கூறுகையில்,
சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் ஆண்டுநிறைவு 34 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 20ஆம் திகதி உலகத் தலைவர்கள் அனைவரும் உலகில் உள்ள சிறுவர்களின் ஒற்றுமைக்கான அருமையான தருணத்தில் ஒன்றிணைந்தனர்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் சமவாயமானது ஒவ்வொரு சிறுவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கவும்,நிறைவுசெய்வதற்குமான உறுதிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர் பராயம் அல்லது 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பது வாழ்க்கையில் பௌதீக வளர்ச்சி, விளையாட்டு, கற்றல் மற்றும் உளரீதியான முன்னேற்றம் என்பவற்றுக்கான விசேட தருணம் என இந்த சமவாயம் அங்கீகரிக்கிறது.
மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களின் வரலாற்றில் இந்த சமவாயமே மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டதொன்று என்பதுடன், இது பல ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் சிறுவர்களின் உரிமைகைளை மாற்றியமைத்தது.
மேலும் இலங்கை முழுவதிலும் 10,000ற்கும் அதிகமான சிறுவர்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பு நிலையங்களிலும், தடுப்புக் காவல் நிலையங்களிலும், தரக்குறைவான வாழ்க்கை நிலைமைகளில் முழு அபிவிருத்தியை அடைய முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களில் 90% க்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுடைய குடும்பங்களிடம் போதிய ஆதரவை வழங்கி அனுப்பிவைக்க முடியும்.
16-17 வயதுடைய சிறுவர்கள் இன்னமும் சட்டத்தினால் வயதுவந்தோர் என மதிக்கப்படுவதுடன், நீண்ட காலத்துக்கு அவர்கள் தடுத்துவைக்கப்படுகின்றனர். வீடுகள், பாடசாலைகள் மற்றும் சமூகத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சிறுவர்களைத் தொடர்ந்தும் துரத்துகின்றன. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்,அதேநேரம் இதற்குப் பதிலிறுக்கும் சேவைகளும் இடர்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
சிறுவர்களின் உரிமைகளில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய கருவி அதற்காக ஒதுக்கப்படும் வளங்களாகும். எவ்வாறாயினும், கல்வி மற்றும் சுகாதார வரவுசெலவுத் திட்டங்கள் சர்வதேச அளவுகோல்களை விட மிகக் குறைவாகவே உள்ளன என்பதுடன், அவை அபிவிருத்தியைத் தக்கவைத்துத் துரிதப்படுத்த போதுமானதாக இல்லை என்றார்.