இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பணயக்கைதிகளை விடுவிப்பதில் தாமதம்

23-11-2023

0

35

''இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமைக்கு முன்  எந்த பணயக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பணயக் கைதிகளை   விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. அதோடு, 50 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல்  பணயக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.  

 

இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்   Tzachi Haneghi  கூறுகையில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பணயக்கைதிகளின் விடுதலை என்பது வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

 

கடந்த ஒக்.7-ம் திகதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேல் மீதானத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.