காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிடும் இஸ்ரேலியப் படைகள்

16-11-2023

"மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல" WHO

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி கமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,200 பேர் இறந்தும் 239 பேர் கடத்தப்பட்டும் இருந்தனர்.  இதனால் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட பகுதியில் சுமார் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

 

இந் நிலையில், காஸா பகுதிக்குள் தரை வழியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படைகள், காஸாவுக்குள் ஊடுருவி பல இடங்களை கைப்பற்றி வருகின்றது. அந்த வகையில் காசாவில்  நாடாளுமன்ற கட்டிடத்தை நேற்று முன் தினம் கைப்பற்றியுள்ளது.

 

தற்போது, காசா நகரில் மருத்துவமனைகளில் கமாஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளனர், ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் இராணுவத்தினர் அமெரிக்காவின் தகவள்களின் அடிப்படையில் குற்றம் சாட்டி, மருத்துவமனையை முற்றுகையுள்ளனர்.

 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து காசா மருத்துவமனைகள் இயக்குனர் முகமது ஜாகோட் கூறியதாவது:

 

‘அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்துக்குள் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் இங்கு சிகிச்சை பெறும் மற்றும்தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள்உட்பட நோயாளிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இங்கு 2,300 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இவர்களை வேறுஇடங்களுக்கு மாற்றும் வசதிகள்இல்லை. இந்த மருத்துவமனையில் இன்குபேட்டர் செயல்படாததால் ஏற்கெனவே 3 குழந்தைகள் இறந்து விட்டன. இன்குபேட்டர்களை வழங்க இஸ்ரேல் முன்வந்தும் பலனில்லை.

 

எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்கள் செயல்படவில்லை. இங்கு ஆபரேஷன்கள் எல்லாம் மயக்க மருந்து வசதியின்றி நடைபெறுகின்றன. இங்குள்ளவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதி இல்லை.சவக்கிடங்குகளில் அழுகும்உடல்களால் மருத்துவமனைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் இங்கு பீரங்கிவாகனங்களுடன் இஸ்ரேல்ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்’. இவ்வாறு முகமது ஜாகோட் கூறியுள்ளார்.

 

அல்-ஷிபா மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் படையெடுத்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். "மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில்,"இஸ்ரேல் அரசு அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க நான் கோருகிறேன். உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, சமூக ஊடகம் வாயிலாக மருத்துவர்கள், குடும்பத்தினர், உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் சாட்சியங்கள் வந்து சேர்கின்றன. பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் கொல்லப்படுவதை உலகம் பார்க்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஏற்கெனவே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இதேபோல் தனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன்  அரபு நாடுகள் உடபட பல நாடுகள் போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

 

ஆனால், இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில், "பொதுமக்களை குறிவைப்பதற்கு இஸ்ரேலை அல்ல ஹமாஸை தான் குற்றஞ்சாட்ட வேண்டும். ஒக்டோபர் 7 ஆம் திகதி  கமாஸ நடத்திய தாக்குதலில் 1200இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து எம்மக்களை தலையைத் துண்டித்தும், எரித்தும் படுகொலை செய்தனர். யூத இன அழிப்புகளிலேயே அண்மைக்காலத்தில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் இது என்று கூறியுள்ளார்.