No Title
31-10-2023

மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக சிறிலங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறை தலைமையகத்தில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக சிறிலங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாம் முறைப்பாடு செய்தமை தொடர்பில் பலர் தம்மை பாராட்டியிருந்ததாகவும் எவ்வாறாயினும், தமது இந்த நடவடிக்கையை எதிர்த்து சிலர் கருத்து தெரிவித்ததோடு, உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தனுக்க ரணன்ஞக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் 30 வருட யுத்தத்தை கடந்து வந்திருந்தாலும் இதுவரை எந்தவொரு பாடத்தையும் அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சமூகத்தில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை மற்றும் அவருக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தனுக்க ரணன்ஞக கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையின் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கும் தேரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதை சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் தாம் மேற்கொண்ட முறைப்பாட்டின் மூலம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.