பெருகும் போதை

15-04-2024

0

0

பத்திரிகையை எடுத்தாலும் இணையத்தைத் திறந்தாலும் போதைப்பாவனை தொடர்பான செய்திகள் இல்லாமல் இல்லை.

பட்டி தொட்டி என்று எங்கும் நிறைந்துள்ளது போதைப்பாவனை.  அதனால் ஏற்படும் மரணங்கள் தற்போது அதிகரித்தே செல்கின்றது, இது எப்போது இவ்வளவு தூரம் பரவ ஆரம்பித்தது? யார் இதன் காரணகர்த்தாக்கள்? சிந்தித்துப் பார்த்தால் மனம் கனப்பதென்னவோ  உண்மை.

தற்போது இந்த போதைக்கு அடிமையாக்கும் வேலைத்திட்டம் தமிழர்தாயக பிரதேசங்களை இலக்குவைத்து அதாவது தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து  நகர்த்தப்படுகிறதா?

இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்லமெல்ல இவர்களை அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கச் செய்கின்றது. இதன்காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல்சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் எனப் பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

 

இதனைப் புரிந்துகொள்ளாத இன்றைய இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாதலை ஒரு நாகரீகமாக எண்ணுகின்றது.

 

 இளைஞர்களின் ஆரோக்கியமான சிந்தனை ஆற்றலை மழுங்கடித்து அவர்களின் செயலாற்றும் திறனைக் குறைப்பதன் மூலம் சமூகத்திலிருந்து அவர்களை வேறு பிரித்து,  சக்தியற்றவர்களாக தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றுவதே இலக்காக இருக்கவேண்டும்.

 

2009 இற்கு முற்பட்ட  காலத்தில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களே இருந்ததில்லை. அக்காலத்தில் ஒரு இதமான கட்டுக்கோப்பு உறுதியாக நிலவியதென்றே சொல்ல வேண்டும். இளைஞர்களின் கவனச் சிதைவு என்பது அங்கு மிக அரிதாகவே காணப்பட்டது. இளைஞர்களிடம் விடுதலை உணர்வுதலை தூக்கியிருந்ததே தவிர வீணான எண்ணங்கள் இருக்கவில்லை.

இன்று ?  ..... தெரிந்துகொண்டே புதைகுழிக்குள் மாளும் ஓர் அவல நிலையை எமது இளையோர் எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்விடயத்தில் அறிவு ஜீவிகள் அவசரமாக சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், அப்போதுதான் எமது அடுத்த சந்ததி காப்பாற்றப்படும்....