விழிப்பும் விடுதலையும்....  

22-03-2024

0

0

 

 

ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதன் அடையாளம் அவன் வாழ்கின்ற காலத்தில் தான் வாழும் சமூகத்திற்கு துணையாக, தூணாக, அடையாளமாக, எடுத்துக் காட்டாக, வழிகாட்டியாக, பலமாக,  பாலமாக,  நம்பிக்கையாக வாழ்வதில் தான் உள்ளது.

 

நாம் ஒவ்வொருவரும் அப்படி வாழ்கிறோமா என்று கேள்வி எழுப்பினால் பெருவாரியான பதில்,  இல்லை என்பதே ஆகும்.

 

குருவிக்கூடான எங்கள் வாழ்க்கை கலைக்கப்பட்டு ஆண்டுகள் பதினைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு இனமாக நாம் சாதித்தது என்ன? அல்லது பெற்றுக் கொண்ட வெற்றிதான் என்ன?

 

 

இது இப்படியிருக்க, 

 

அண்மையில் சாந்தன் என்கிற தியாகியின் இறுதிச்சடங்கில் மக்களின் தன்னெழுச்சியான செயற்பாடு நடைபெற்றமை  போற்றப்படவேண்டிய ஒரு விடயம்.

 

இந்த ஒற்றுமை, இந்த தன்னுணர்வு எல்லா விடயங்களிலும் ஏன் தோன்றுவதில்லை?

 

கட்சிப் பிளவுகளும் கட்சி உருவாக்கங்களும் மோசடிகளும் ஆசைகளும் எம்மை அங்கும் இங்குமாக தூக்கிப் போட்டிருப்பதை நாம் இன்னும் உணரவே இல்லை.

 

பிரித்தாளுதல் என்பதும் மாபெரும் இராஜதந்திரமே. அயல் நாட்டின் அரசியல் சூட்சுமங்கள் கூட எமது பலத்தை உடைத்து பலவீனப்படுத்துகின்ற செயற்பாடுதான்.

 

எமது கலைகளைக் கொச்சைப்படுத்தி, எமது இளையோரை சிந்தனைத் திறனற்றவர்களாக்கி குடும்ப அமைப்புகளைச் சிதைத்து,  சமூகப் பிரிவினைகளை உண்டாக்கி,  தமிழினத்தை வலுவற்றோராக மாற்றும் அல்லது பேராசை கொண்டவர்களாகச் சித்தரிக்கும் ராஜதந்திர மூலோபாயம் தான் நடந்தேறுகின்ற சகல சம்பவங்களும்.

 

தன் பசிக்கு தானே வாய் திறக்கவில்லை என்றால் அந்த மனிதன் உண்பதெப்படி? 

 

"வலியவன் வாழ்வான்" என்பது தானே நிதர்சனம். 

 

எங்கள் அறிவு,  எங்கள் வாழ்வியல்,  எங்கள் காடுகள், எங்கள் நிலம்  இவை எல்லாமே எங்களிடம் இருந்து பறிபோகிறது.

 

எங்கள் தொடக்கங்களை எடுத்து உலகிற்கு தொழிநுட்ப சவால் விடுகிறார்கள். நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக கைதட்டுகிறோம். 

 

நாங்கள் வீரத்தின் வழிவந்த இனம்,  நாங்கள் அறிவியல் கண்ட இனம்,  நாங்கள் பண்பாடும் பாரம்பரியங்களும் கொண்ட இனம். 

 

காக்கை வன்னியன் விலைபோனான் என்பதற்காக பண்டாரவன்னியனின் பெருமை குன்றிப் போகாது.

 

விழிப்புணர்வு விடுதலைக்கான முதல்படி.

 

சிந்தித்துச் செயற்படுவோம்.

 

 

 

 

ஒரு பேப்பர் உறவுகளுக்கு அன்பான வணக்கமுங்கோ.... 

 

  எமது இலக்கு நோக்கி மீண்டும் நாம் ஆரம்பித்த பயணத்தில் எங்கள் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வாசகர்களும் விளம்பரதாரர்களுமே. 

 

சரியான தொடர்பாடலும் சுமுகமான உறவும் இருந்தால் எந்த காரியமும் வெற்றியை அடைந்துவிடும் என்பது யதார்த்தம். 

 

அந்த வகையில்,  

எங்கள் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய அன்பான ஒரு பேப்பரின் உறவுகளே,

 

முடிந்த வரை இந்த ஓட்டத்தை உரிய வகையில் தான் முன்னெடுத்ததுச் செய்கிறோம். 

 

இருப்பினும்,   எங்களை அறியாது,  "இலக்கை எட்டுவதற்கான "  எமது செயற்பாடுகளில் ஏதேனும் தவறுகள் அல்லது கவனமின்மைகள் ஏற்பட்டால் அதனைச் சுட்டிக்காட்டி எம்மை முன்னகர்த்திச் செல்லுமாறு உங்களை அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். 

 

இதனை ஆரம்பித்த எங்கள் நோக்கம் , ஒரு சமூக அசைவிற்கு நாம் உந்து சக்தியாக மாறவேண்டும் என்கிற பேரவாவே ஆகும்.

 

தட்டிக் கொடுக்காமலும் பற்றிக் கொள்ளாமலும் வெற்றிகள் சாத்தியமாகா தென்பது நீங்கள் அறியாததல்ல. 

 

மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எங்கள் ஒவ்வொருவரினதும் தனிமனித சிந்தனையே ஒரு பேப்பர்காரர்களாக நாம் இணைய மிக முக்கியமான காரணம். 

 

எங்கள் எண்ணங்களுக்கு துணையாக உங்களை அழைக்கிறோம்.  ஒன்றுபட்டவர்களாக பயணிக்க வாருங்கள்.... 

 

அட... என்னடா.... இப்பிடி சொல்றாங்களே என்று  ரெம்ப யோசிக்கிறீங்களோ..... 

 

இது தனிப்பட்ட விசயம் இல்லை பாருங்கோ.... ..சமூகம்,  இனம் என்கிற பெரிய விசயம்.... அதுக்காகத்தான் ரொம்ப  யோசிக்கிறம்... 

 

இன்று நாளையைக் கடந்த நீண்ட பயணம் இது.. 

உங்கள் பெறுமதி மிக்க பொன்னான நேரங்களில் சில துளிகளை எமக்காகவும் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு அடுத்த இதழில் சந்திக்கும் வரை விடைபெறுகிறோம். 

 

 

 

 நன்றி.