சீறும் புட்டீனும் தேறும் இரசியாவும்

19-03-2024

0

0

2024 பெப்ரவரி 29-ம் திகதி புட்டீன் நாட்டு மக்களுக்காக ஆற்றிய இரண்டு மணித்தியாலத்திலும் நீளமான உரை அவரது நேட்டோ எதிரிகளையும் இலக்கு வைக்கத் தவறவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் ஆற்றும் உரையில் நேட்டோ என்னும் ஐரோப்பிய நாடுகளையும் வட அமெரிக்க நாடுகளையும் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பின் மீது அவரது வெறுப்பை காட்டுவது வழமையாக இருந்தது. ஆனால் இந்த முறை அவரது சினத்தை அண்மையில் பிரெஞ்சு அதிபர் தெரிவித்த கருத்து அதிகரிக்கச் செய்தது.

பிரான்சின் மிரட்டல்
பிரான்சின் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மகரோன் 21 ஐரோப்பிய நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஒழுங்கு செய்த உக்ரேனுக்கு உதவுவது பற்றிய கூட்டத்தில் உக்ரேனுக்கு படைகளை அனுப்புவதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது என்றார். தனது உரையில் அதற்குப் பதிலடி கொடுத்த புட்டீன் தன்னிடம் இருக்கும் படைக்கலன்களின் பெருமை பற்றிப் புகழந்ததுடன் தனது அணுக்குண்டுகள் மனித நாகரீகத்தையே அழித்துவிடும் என்றார். அது மட்டுமல்ல எமது நிலப்பரப்பிற்குள் படைகளை அனுப்பியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும் என புட்டீன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 18-ம் நூற்றாண்டில் நெப்போலியனும் 20-ம் நூற்றாண்டில் ஹிட்லரும் இரசியா மீது படையெடுத்ததையே புட்டீன் அப்படிக் குறிப்பிட்டார்.

புட்டீன் நாட்டு மக்களுக்கு 2018இல் ஆற்றிய உரை
2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புட்டீன் தனது புதிய
படைக்கலன்களைப் பற்றி மிகவும் பெருமையாக உரையாற்றினார். ஆனால் அவர் பெருமை பேசியபடி 2022-ம் ஆண்டு அவர் தொடங்கிய உக்ரேன் மீதான இரண்டாவது ஆக்கிரமிப்பு போரில் எதிர்பார்த்தபடி இரண்டு வாரங்களில் போரை முடிக்கவில்லை. அதனால் இரசியாவின் படைக்கலன்களின் வலிமை பற்றிய ஐயம் எழுந்துள்ளது. இரசியாவின் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பறக்கக்கூடிய kinzal ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்க முடியாதவை என புட்டீன் 2018இல் சொன்னார். ஆனால் 2023இல் அவை உக்ரேனால் இடைமறித்து அழிக்கப்பட்டன. புட்டீன் 2018இல் பெருமையாகப் பேசிய Zircon என்னும் கடலில் இருந்து வீசப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இதுவரை உக்ரேன் போர்க்களத்தில் பாவிக்கப்படவில்லை.

புட்டீனின் படைக்கலன் இழப்பு
Sarmat Intercontinental Ballistic Missiles ஒவ்வொன்றும் பத்திற்கு மேற்பட்ட அணுக்குண்டுகளைத்
தாங்கிக் கொண்டு பாய வல்ல ஏவுகணைகளாகும். இவற்றை ஏவும் பரிசோதனைகள் இன்னும்
வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் பரீட்சித்துப் பார்க்காமலே அவற்றை உற்பத்தி செய்யப் போவதாக இரசியா 2023இல் அறிவித்திருந்தது. 2022-ம் ஆண்டு புட்டீன் ஆரம்பித்த போரின் பின்னர் இரசியா ஆயிரத்திற்கு மேற்பட்ட போர்த்தாங்கிகளை, எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட கவச வண்டிகளை, இருநூறு போர்விமானங்களை , மொஸ்கோவா என்னும் பெரிய போர்க்கப்பல், இரண்டு தரையிறக்க கப்பல்கள் உள்ளிட்ட பதினொரு கப்பலகளை இரசியா இழந்தது.

தேறும் இரசியப் பொருளாதாரம்
இரண்டு ஆண்டுகாலப் போரின் பின்னரும் நேட்டோ நாடுகளினதும் அவற்றின் நேச நாடுகளினதும் கடுமையான பொருளாதாரத் தடைகளின் நடுவிலும் உலகின் பல நிதிச் சேவைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் இரசியர்களுக்கு சொந்தமான 250பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையிலும் இரசிய வான்பரப்பு மேற்கு நாடுகளின் விமானங்கள் பறக்க முடியாமல் தடுக்கப்பட்ட நிலையிலும் பல மேற்கு நாடுகளின் துறைமுகங்கள் இரசியக் கப்பல்கள் நுழையாமல் பல மேற்கு நாடுகளின் துறைமுகங்கள் மூடப்பட்ட நிலையிலும் இரசியாவின் பொருளாதாரம் சிதைவடையவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் 2024-ம் ஆண்டு 2.2 விழுக்காடு வளரும் என எதிர் பார்க்கப்படுகின்ற போது இரசியப் பொருளாதாரம் 2.6 விழுக்காடு வளரும் என பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியான 0.6 விழுக்காடு, ஐரோப்பிய ஒன்றையத்தின் வளர்ச்சியான 0.9  விழுக்காடு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இரசியப் பொருளாதாரம் தேறுகின்றது என நம்பலாம். இரசியாவின் வரவு செலவில் துண்டு விழும் அளவு அதன் மொத்த தேசிய உற்பத்தியின் ஒரு விழுக்காட்டிலும் குறைவானதாகவே 2024இல் இருக்கப் போகின்றது. ஆனால் பிரித்தானியாவின் துண்டு விழும் தொகை 5.1 விழுக்காடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விழுக்காடு தொகை 2.8 விழுக்காடாகவும் 2024இல் இருக்கப் போகின்றது. இரசிய நடுவண் வங்கி அதன் வட்டியை 16 விழுக்காடாக வைத்திருப்பதும் நாட்டில் இருந்து நாணயம் வெளியேறுவதற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடை வைத்திருப்பதும் இரசியப் பொருளாதாரத்தை உறுதியாக வைத்துள்ளது.

2024 புட்டீன் ஆற்றிய உரை
2024 பெப்ரவரி இரசிய அதிபர் புட்டீன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் போரால் இரசிய மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டவராக தான் இருப்பதாக காட்டிக் கொண்டதுடன் அதற்கான நிவாரணத் திட்டங்களையும் விளக்கியுள்ளார். 2024 மார்ச் நடுப்பகுதியில் நடக்கவிருக்கும் இரசிய இணைப்பாட்சியகத்தின் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தான் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற நிலையிலும் விளடிமீர் புட்டீன் 2024 பெப்ரவரி 17-ம் திகதி உக்ரேனியப் படையினர் வலிமை குறைந்திருந்த அவ்டிவ்கா நகரை இரசியப் படையினர் ஒன்பது மாத காலப் போராட்டத்தின் பின்னர் கைப்பற்றினர். பெப்ரவரி 29-ம் திகதி தான் உரையாற்றும் போது ஒரு வெற்றிப் பெருமிதத்துடன் நிற்க வேண்டும் என்பதற்கு புட்டீன் அவ்டிவ்கா நகர் கைப்பற்றலைப் பாவித்துக் கொண்டார்.

அணுக்குண்டு மிரட்டல்
இரசியா எந்தக் கட்டத்தில் அணுக்குண்டுகளைப் பாவிக்கும் என்பது பற்றிய இரகசிய ஆவணங்களை பிரித்தானியாவின் பின்னான்சியல் ரைம்ஸ் நாளிதழ் பகிரங்கப்படுத்தியுள்ளது. அதன்படி இரசியாவின் 20 விழுக்காடு கேந்திரோபாய ஏவுகணைகளை வீசக்கூடிய அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள் அழிக்கப்பட்டால் அல்லது 30 விழுக்காடு அணுவலுவில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் அழிக்கப்பட்டால் அல்லது இரசியாவின் கப்பல்கள் மூன்றிற்கு மேல் அழிக்கப்பட்டால், மூன்றிற்கு மேற்பட்ட வான்படைத்தளங்கள் அழிக்கப்பட்டால் முக்கிய கரையோர கட்டளைப் பணியகங்கள் தாக்கப்பட்டால் இரசியா அணுக்குண்டுகளை எதிரி வீசும். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்த போது இரசியாவின் ஒரு கீழ் நிலை அரசுறவியலாளர் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அமெரிக்காவை கதிர்வீச்சு மிக்க சாம்பல் மேடாக்குவோம் என்ற மிரட்டினார். 2022-ம் ஆண்டு இரண்டாவது ஆக்கிரமிப்பு போரை புட்டீன் செய்ய ஆரம்பிக்கும் போது எல்லா நேட்டோ நாடுகளின் தலைநகரங்களையும் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அழிக்கும் என்றார். இரசியாவின் அணுக்குண்டு பற்றிய செய்தியை பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் வெளிவிட்டமைக்கு வேறு காரணமும் இருக்கலாம். தமக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்யாமையால் உக்ரேனிய மக்கள் தம்மீது அதிருப்தியடைந்துள்ளார்கள் என்பதால் தமது தயக்கத்தை உக்ரேனிய மக்களுக்கு நியாயப் படுத்த அச்செய்தியைக் கசிய விட்டிருக்கலாம். அதேவேளை உக்ரேனிய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க இன்னும் ஒரு நாடகத்தை பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் ஆடியிருக்கலாம். ஒட்டு மொத்தத்தில் நேட்டோ நாடுகள் உக்ரேனியர்களைப் பலிகொடுத்து இரசியாவை நீண்ட காலப் போர் மூலம் சிதைக்கச் சதிசெய்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.