'எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா'-காஸா குழந்தையின் கோரிக்கை
19-11-2023
0
27

இஸ்ரேல் - கமாஸ் போருக்கு இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். 239 பேர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதனால், இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழி மற்றும் தரை வழித் தாக்குதல்கள் மூலம் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் குறைந்தது 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 5000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதுகுறித்து "ஸைனா அஸாம்" என்பவர் எழுதிய கவிதை இது...
*எனது பெயரை எழுது அம்மா!
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா.
நிரந்தரமாய் அழியாத கறுப்புநிற மைகொண்டு எழுது.
ஈரம் பட்டு கரைந்தழியா, அன்றேல் சூடு பட்டு உருகியழியா மைகொண்டு எழுது.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா.
தடிப்பாகவும் தெளிவாகவும் வரிகளை எழுது, அதில்
உனது மலர்ச்சியையும் சேர்த்துவிடு.
அப்போதான் அம்மா நான் உறங்கச் செல்லும் போதெல்லாம்-என்
விழியுரசும் உன் கையெழுத்தினுள் இதம் கொள்வேன்.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
எனது சகோதரிகளது, சகோதரர்களது கால்களிலும் எழுது.
இவ் வழியில் நாம் எல்லோரும் உறவுகொண்டு இருப்போம்
உனது பிள்ளைகள் நாம் என தெரியவருவோம்
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
உனது பெயரையும் 'பபா'க் குட்டியின் பெயரையும் சேர்த்து உனது கால்களிலும் எழுது.
இவ் வழியில் நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக நினைவு கூரப்படுவோம்.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா குண்டுகள் எமது வீட்டை தகர்க்கிறபோதோ
எமது மண்டையோட்டையும் எலும்புகளையும் சுவர்கள் நொருக்குகிறபோதோ
நாம் தப்பியோட எந்த இடமும் இல்லாமல் போன கதையை எமது கால்கள் சொல்லும் !