“நாற்சார் வீடு”
25-11-2023
0
32

கொட்டும் மழையும் குளிருமாக இலையுதிர் காலம்
உருவாகுவதை குறிக்கும் பருவ மாற்றம். அதிகாலை மங்கல் பொழுதில் அயல் வீட்டின் முன்புறம் ஆரவாரம்.
ஓ…புதிதாக அயல் வீட்டை வாங்கியவர் குடிபுக தயாராகிறார். ஒரே கூரையின் கீழ் 18 வருடங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரான உள்நாட்டுக்காரரோடு காணும் வேளையில் “ஹலோ “சொல்லும் உறவு மட்டுமே. ஒட்டிய உறவுகள் சுற்றம் சூழ வாழ்ந்த ஊர் வாழ்வு நினைவில் வர நெஞ்சில் ஏக்கம் எழுந்தது.
ஊரில் எமது வீடு உட்பட பலதும் வம்ச வழி,பரம்பரையாய் வாழ்ந்த வீடுகள். பத்து பரப்புக்குள் அமைந்த எங்கள் நாற்சார் வீடு எண்ணத்தில் வண்ணமிட்டது. பன்னாலை என்ற கிராமம். தெல்லிப்பழை பிரதேசம். வளவுக்குள் நாற்புறமும் பயன்மரங்கள். நடு முற்றம். மின்சாரம் வராத காலம். வாசலில் கூரையோடு சங்கட படலை. தெருவில் போவோர் தாகம் தீர்க்க தண்ணீர் பானை.
வளவை சுற்றிலும் பசுமை.
வாஸ்து சாத்திரப் படி அமைந்த கிணறு. வாளியால் கிணற்றில் வசதியாக தண்ணீர் அள்ள கைக் கயிற்றில் குனிந்து நிமிரும் துலா. பின் வளவு மூலையில் மலகூடம். குளிக்கும் நீர் கூட வழிந்து வாய்க்கால் வழியாக பசளி, பொன்னாங்காணி என்ற கீரை வகையை நனைத்து கமுகுகளுக்கும் பாயும். எலுமிச்சை, தோடை, மாதுளை, மா, பலா, வாழை, பப்பாசி, கொய்யா என பழமரங்கள். முசுட்டை, முருங்கை, வேம்பு என பிற. அவற்றை சுற்றி 50க்கு மேலான தென்னைகள்.
மாதா மாதம் எங்களுக்கு வீட்டு வளவில் வைத்து தலைமயிர் வெட்டும் கிட்டினர் பரியாரி, வீட்டுக்கு வந்து அளுக்கு உடுப்புக்களை மூட்டைகட்டி எடுத்துப்போய் வெளுத்து திரிகை போட்டு மடித்து கொண்டுவரும் செல்ல கட்டாடி என இவர்களும் ஊரோடு ஒட்டிய உறவுகள்தான்.
வளவு ஒருபுறம் முற்றத்தில் அம்மம்மா கைவண்ணத்தில் பனம் பழத்தில் பிழிந்த பினாட்டு பாயில் பருவத்துக்கு பருவம் காயும். பனை வளவில் உலுப்பி பொறுக்கிய புளியம் பழங்களும் உடைக்க தயாராக முற்றத்தில் காய்வது உண்டு. விரத நாட்களில் சாணி தெளிப்பதாலும் நித்தம் தடி விளக்குமாற்றால் கூட்டுவதாலும் முற்றத்தில் புளுதி இராது. அக்கம் பக்கம் எல்லாம் சித்தி, மாமி, குஞ்சாச்சி வீடுகள். சித்தியின் குடும்பத்தோடு கூட்டு குடும்ப வாழ்வை பேணிய வீடு அது.
அடுத்த வீட்டை பிரிக்கும் எல்லை வேலியில் போய்வர கடவை இருக்கும். உப்பு, புளி குறைந்தால் கொடுக்கல் வாங்கல், விசேட உணவு சமைத்தால் பரிமாறல் என உறவின் வலுவைக் காட்டும் அடையாளம் அந்த கடவை.
ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த வீடு அது என்று அம்மம்மா சொல்லுவா. நடு முற்றத்தில் அடி பெருத்த முள் முருக்க மரம். அம்மாவின் கல்யாணத்தின் போது நட்ட கன்னிக்கால் மரமாம் அது. அழகான அடர்த்தியான மல்லிகைப் பந்தல். முன் புறம் படலை வரை சிதம்பரத்தை முதலான பூமர செடிகள். முன் முற்றத்துக்கு அப்பால் மாட்டுக் கொட்டில். வீட்டு பால் தேவைக்கு ஒரு பசுமாடு. செவியன் ஆடு. முற்றத்தில் துள்ளித் திரியும் அதன் குட்டிகள். இவற்றுக்கான இரவு உறைவிடம் அந்த கொட்டில்தான். உரல், உலக்கை, இடித்து தூளாக்க அகல இரும்புச் சட்டியில் மிளகாய் வறுக்கும் அடுப்பு. தட்டு முட்டு சாமான் வைக்கும் கோற்காலி எல்லாமே அந்த கொட்டிலில் தான். அம்மி குழவி என அரைக்க பயன்படுபவை குசினிக்குள்ளும்,உளுந்து பிற அரைக்கும் ஆட்டுக்கல், மா அரைக்கும் திருகை கல் என்பன உள் விறாந்தையின் ஓரத்திலும் இருக்கும். எல்லாமே கை வேலைதான். உடலை திடகாத்திரமாக்கிய உடற் பயிற்சிகள்தான். அவ்வப்போது அம்மம்மா அடைக்கோழிக்குள் வைத்த முட்டைகளை எடுத்து வருவார். கோழிக்குஞ்சுகளும் முற்றத்தில் தாய் கோழியோடு உலாவி அழகு காட்டும். முட்டை இட்டு கொக்கரிக்கும் கோழிகள். கூவும் சேவல்கள். விறாந்தையில் கூடி அன்றாடம் ஊர் பூராயம் பேசும் அயல் வீட்டுக்காரிகள். பொங்கல், பிற விசேடங்களுக்கு வீட்டுக்கு வீடு பனை ஓலை குஞ்சுப் பெட்டிக்குள் வைத்து வீட்டுக்கு வீடு வரும் உணவுப் பண்டங்கள். விசேட வைபவங்களுக்கு அணிய, இரவலாக கைமாறும் நகை நட்டுக்கள் என ஊர், உறவுகள் என வாழ்ந்த, எளிமையும் செழிமையுமான எங்கள் ஆனந்த வாழ்வை நினைத்தாலே இனிக்கும். சிக்கனம், சேமிப்பு, சம்பாத்தியம் என்பது அந்த காலத்தின் கிராமிய வாழ்வின் அடிப்படை.
மகளுக்கு சீதனம் சேர்க்க வேண்டும், கல் வீடு கட்ட வேண்டும், மகனுக்கு கல்யாணம் பேசி சீதனத்தோடு பணமும் இனாம் வாங்கி மகளுக்கு நல்ல சீதனம் கொடுத்து உத்தியோக மாப்பிள்ளை பேசி ஒழுங்காக்க வேண்டும் என அந்த கால அப்பா, அம்மா, அப்பு ஆச்சியின் கண்ணுக்குள் என்றும் மின்னிய கனவுகள்.
கால ஓட்டத்தில் மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு என்று வந்த வசதிகள் வீதிகளில் காலாகாலமாக நின்ற பெருமரங்களை வெட்டி வெறிச்சோட வைத்தன. வீதிகள் தோறும் பேருந்து சேவை. மாட்டு வண்டிலின் தேவையை போக்கின. நாகரீக வளர்ச்சி. பனங்கூரை வீடுகள், தென்னோலை வேலிகள் அனைத்தையும் மதில்களாக மாற்றின. காலத்தின் மாற்றம்.
பழைமையை கோலம் மாற்றின. போரின் தாக்கம்.
ஊரையே பாழடைய வைத்தன. நெஞ்சில் மிஞ்சியவை அன்றய வாழ்வின் நினைவுகள் மட்டுமே. அந்நிய தேசம். புலம் பெயர் வாழ்வு. தமிழர் என்ற அடையாளமும் அழிந்து போகும் அவலம். மீண்டும் எழாதோ அந்த மிடுக்கு?