ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு
05-07-2024
0
0
அண்மையில் சாவடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இராசவரோதயம் சம்பந்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சஜித் பிரேமதாச, 'இது ஒரு சகாப்பத்தின் முடிவு' (it is the end of an era) என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார். சம்பந்தன் என்ற தனிமனிதரை ஒரு சகாப்தமாகக் கருதி சஜித் இக்கருத்தை எழுதியிருக்கலாம். இருப்பினும் சம்பந்தனின் மறைவுடன் தமிழ் மக்களிடையே நிலவிய குறித்தவொரு அரசியல் அணுகுமுறை நிறைவுக்கு வருகிறது என்று கருத இடமுண்டு.
தமிழரசு கட்சியின் தலைவராகவிருந்த தந்தை செல்வநாயம் நீண்ட நாட்களாக மருத்துவமனையிலிருந்து அவரது சிகிச்சை பலனளிக்காத நிலையில் 1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். மூப்பின் காரணமாக சம்பந்தனைப் போலவே செல்வநாயகமும் தனது இறுதிக் காலத்தில் செயற்படும் நிலையில் இருக்கவில்லை. அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முழுநேர அரசியலுக்கு வந்த சம்பந்தன் 47 வருடங்களின் பின்னர் சாவடைந்தபோது, செல்வநாயகத்தின் இழப்பையிட்டு தமிழர் தேசமே சோகத்தில் ஆழ்ந்தது போன்றதான நிலைமை காணப்படவில்லை. தமிழரசுக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும் சம்பந்தன் விட்டுச் சென்ற நிரப்ப முடியாத இடம் என்று எதுவுமல்லை.
சம்பந்தனுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் உரையாற்றிய அம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், "எட்டு ஜனாதிபதிகளிடம் பேசி ஏமாந்த சம்பந்தன் ஒன்பதாவது ஜனாதிபதியிடம்" ஏமாறாமல் காலமாகிவிட்டார்" எனக்குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தனது கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தனால் அவரது வழியில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் எதனையும் பெற்றெடுக்க முடியவில்லை என்பதனையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நாட்டும் விடயத்தில் சம்பந்தன் தனித்துவமான அணுகுமுறை எதனையும் கடைப்பிடிக்கவில்லை. கொழும்பு அரசாங்கத்திற்கு ஒன்றையும், தமிழ் மக்களுக்கு இன்னொன்றையும் காண்பிக்கும் இரட்டை அணுகுமுறையையே தமிழ் நாடாளுமன்றத் தலைமை அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கடைப்பிடித்து வந்தது. அதனையே சம்பந்தனும் பின்பற்றி வந்தார். அவருக்கு முன்னைய தலைவர்கள் இது போன்ற இனப் படுகொலையை சந்தித்திருந்தால் அவர்கள் வேறுவிதமாகச் செயற்பட்டிருக்கக் கூடும்.
இந்த இரட்டை அணுகு முறையை இலகுவாகப் புரிந்து கொள்வதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சம்பந்தனுக்கு இரங்கலுரை நிகழ்த்திய சிறிலங்கா ஜனாதிபதி இரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட ஒருவிடயமே போதுமானது. சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தான், ஒருபோதும் நடந்து கொள்ளப் போவதில்லை எனவும், நாட்டுப் பிரிவினையை தான் ஆதரித்ததில்லை எனவும் சம்பந்தன் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். 1977ம் ஆண்டு முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது அது சுதந்திரத் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று பரப்புரை செய்தே சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது தமிழ் மக்கள் அறிந்த செய்தி.
சம்பந்தனின் முன்னைய அரசியல் எவ்வாறிருந்தாலும் 2009ம் ஆண்டிலேயே அவரது வகிபாகம் முதன்மையாக இருந்தது. இறுதி யுத்தகாலத்தில் யுத்தம் நிறுத்தப்படாமல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதனையே அவர் விரும்பிருந்தார். யுத்தத்தின் இறுதி நாட்களில் சென்னையில் தங்கியிருந்த சம்பந்தன் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் தலைவராக முடிசூடியவர் போன்று நாடு திரும்பினார். (பின்னொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் அவரது ஆதரவாளர்கள் பிளாஸ்ரிக் கிரீடத்தை அவருக்குச் சூட்டியதனை இங்கு நான் குறிப்பிடவில்லை.) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரது வாழ்நாளில் குறைந்த பட்ச அரசியற்தீர்வினையாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தேர்தல்களில் பெருமளவிலான தமிழ் வாக்காளர்கள் வீட்டுச் சின்னத்திற்கு நேரே புள்ளடியிட்டார்கள். தமிழரசுக்கட்சியின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெல்ல வைப்போம் என்ற நிலைப்பாட்டை கணிசமான தமிழ்மக்கள், குறிப்பாக நடுத்தர வயதை எய்தியவர்கள் கொண்டிருந்தனர். சிலவருடங்களிலேயே இந் நம்பிக்கை சிதைந்து போனதற்கு சம்பந்தனின் அரசியல் அணுகு முறையே காரணமானது.
செல்வநாயகம் அவர்களாலும் குறிப்பிட்டுச்சொல்லக் கூடியளவில் எதனையும் சாதிக்க முடியவில்லை. எனினும் அவர் இன்றைக்கும் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவராக இருப்பதற்கு அவரது அரசியல் நேர்மை காரணமாக அமைந்தது. ஆனால் சம்பந்தனிடமோ அவரை யொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அவ்வாறான அரசியல் நேர்மை காணப்படவில்லை. 2009 இல் அவரிடம் கொடுக்கப்பட்ட தீப்பந்தத்தை அணைத்தது மட்டுமல்லாமல், அதிகாரங்களைத் திருப்திப்படுத்துவதிலேயே அவர் அக்கறை காட்டினார்.
சம்பந்தனும் அவரது சகாக்களும் அடிபணிவு அரசியலை (subservient politics) முன்னெடுத்து வந்தனர். இவ்வாறு கூறும்போது, தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற்று வாழ்வதில் சம்பந்தனுக்கு அக்கறையில்லை என்று கொள்ளமுடியாது. ஆனால் அதிகாரங்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காமல்செயற்பட்டு அதன்மூலம் அவர்களின் தயவால் தமிழ்மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை சம்பந்தன் விதைத்து வந்தார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனுக்கு வெளித்தரப்புகள் கொடுத்த முக்கியத்துவம் அதனை நிரூபிப் பதாக அமைந்திருந்தது. கொழும்புக்கு வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவரும் சம்பந்தனைச் சந்தித்துப் படமெடுக்காமல் சென்றதில்லை. இவர்கள் மீதான நம்பிக்கையினாற்தான் அடுத்த தீபாவளிக்கு முன்னர் அல்லது அடுத்த புத்தாண்டுக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு வரும் என சம்பந்தன் கூறிக்கொண்டிருந்தார். அவரது அல்லக்கைகளும் ஐயா சொல்லி விட்டார், தீர்வு வரப்போகிறது என்று பிற்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்னர் சம்பந்தன் எவ்வாறு நடந்திருந்தாலும், அதற்குப் பின்னராவது பொறுப்புணர்வுடனும், அரசியல்தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் அவர் தமிழ் மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருக்க மாட்டார். தீர்க்கமான முடிவுகளையெடுத்துச் செயற்படக் கூடிய அரசியல் பட்டறிவு கொழும்பு அரசியல் தலைமைகளுடனும் இராசதந்திர தரப்புகளுடனும் சரிசமனாக உறவாடக் கூடிய ஆற்றல் அவருக்கிருந்தும் அதிகாரங்களின் கைப்பாவையாகவே அவர் செயற்பட்டு வந்தார். சம்பந்தனின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் ஒரு தரப்பு தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் செயற்பட்டு வந்தது. மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் அதிகார மையங்களின் ஆதரவும் இவர்களுக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கனேடிய தமிழ் கொங்கிரஸ் என்ற அமைப்பு சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' என்ற விருது வழங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் வீரர்களையும் வீராங்கனைகளையும் கொச்சைப்படுத்தியது.
இனப்படுகொலை விடயத்தை நீர்த்துப் போக வைத்தமையே சம்பந்தனும் சகாக்களும் தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பாதகமான செயல். அதிகார மையங்களின் வேண்டுகோளுக்கு அமையவே அவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு காசாவில் நடப்பதனை 'இனப்படுகொலை' என ஏற்றுக் கொள்ள மறுக்கிற தரப்புகளே சம்பந்தன் தரப்பையும் வற்புறுத்தி இணங்க வைத்தது. ‘காசா இனப்படுகொலை' விடயத்தில் பலஸ்தீனர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள் விட்டு கொடுப்புக்கு இடமின்றிச் செயற்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர்களைத் தலைமையேற்க வந்தவர்களே நடந்தது இனப் படுகொலை எனக் கூற மறுத்தார்கள். இனப் படுகொலையை அரங்கேற்றியவர்களை ஆதரித்தார்கள். 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் மத்தியில் பரப்புரை செய்தார்கள். இதனை மகிந்த இராஜபக்சவை தோற்கடிப்பதற்கான நகர்வு எனச் சிலர் நியாயப்படுத்தினாலும், சம்பந்தன் மகிந்த இராஜபக்சவின் தொடர்புகளை எக்காலத்திலும் துண்டிக்கவில்லை என்பதனை நாம் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.. சம்பந்தனின் பூதவுடலுக்கு வணக்கம் செலுத்த முதலில் வந்தவர்களில் மகிந்த இராஜபக்சவும் ஒருவர். இனப்படுகொலை நடைபெறுகிற நாட்டில் இவ்வாறு நடை பெறுவது சாத்தியமா என்று எங்களை நாங்களே கேட்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மகிந்தவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோருவது கேலிக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.
சம்பந்தன் சாவடைந்ததனால் இவர்கள் கடைப்பிடித்து வந்த அடிபணிவு அரசியலோ அல்லது இரட்டை நிலைப்பாடோ தம்போக்கில் முடிவுக்கு வந்து விடும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதனை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே ஆட்களுக்கு தட்டுப்பாடில்லை. ஆனால் இவ்வாறானவர்கள் தலையெடுக்காமல் பார்ப்பது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. எந்த வழிமுறையும் சரிப்படவில்லை இந்த நடைமுறையை முயற்சித்துப் பார்ப்போம் என இனியும் சாக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த அணுகுமுறை தமிழ் மக்களை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.