இஸ்ரேல் நிச்சயம் அனைத்துப் பணயக் கைதிகளையும் மீட்கும்- இஸ்ரேல் பிரதமர்

27-11-2023

0

86

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 50 நாட்களை கடந்துள்ள  நிலையில் 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்ட மொத்தம் 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு ஈடாக 150 பாலஸ்தீன கைதிகளை மாற்றிக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதில் முதல் கட்டமாக 13 பணயக்கைதிகளும் 39 பாலஸ்தீனர்களும்  விடுவிக்கப்பட்டனர். 2ம் கட்டமாக 17 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் காசா பகுதிக்கு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கிருந்த ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போது "இஸ்ரேல் நிச்சயம் அனைத்துப் பணயக கைதிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவரும். அந்த முயற்சியில் நம்மை எதுவும் தடுக்காது. ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும்’’ என்று கூறியுள்ளார்.

 

இதன்பின் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”ஹமாஸை முற்றிலும் வீழ்த்துவது, ஹமாஸ் பிடித்துள்ள பணையக்கைதிகள் அனைவரையும் மீட்பது, காஸா எந்த விதத்திலும் இனி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வது ஆகியவையே இந்த போரின் இலக்கு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹமாஸ்   கடந்த அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 14,800 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.