மீண்டும் மற்றொரு சீனாவின் கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியுள்ளதாக தகவல்

06-11-2023

0

18

2024 முற்பகுதியில் சீனாவின்  மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு  பயணம் செய்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சீன கப்பல்களின் இலங்கை பயணம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. எனினும் முன்னர் போல இலங்கையுடன் இணைந்து இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது  என்றும் எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது எனவும்   தெரிவிக்கப்படுகின்றது.

 

வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக இலங்கைக்கு  வந்த ஷி யென் 6 கப்பல் வருகைக்கு  இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

 

தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்தக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

 

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷி யென் 6 கப்பல்  இலங்கைக்குப் பயணம் செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு பின் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.