அமெரிக்காவின் நிதி உதவியுடன் இலங்கையில் கால் பதிக்கும் ஆதானி

09-11-2023

0

19

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமெரிக்க அரசு நிறுவனம் 553 மில்லியன் டொலர் முதலீடு செய்யும் நிலையில், இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான கவுதம் அதானி கொழும்பில் துறைமுக முனைய திட்டத்தை செயல்படுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இவ்வாறு அதானி கொழும்பு துறைமுக முனைய திட்டத்தை செயல்படுத்த உள்ளமை இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த திட்டத்தில் அமெரிக்க அரசு நிறுவனமான சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் US International Development Finance Corporation (DFC) முதலீடு செய்ய முன்வந்துள்ளது என இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் அறிவித்துள்ளார்.

 

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை இது காட்டுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதனுடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் இந்தியாவின் அதானி குழுமத்தின் துறைமுகப் பிரிவினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனைய நிர்மாணப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் அதானி குழும திட்டத்திற்கு நிதியளிப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்றும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்த முயற்சி குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

 

மேலும் பிராந்திய கப்பல் திறனை மேம்படுத்தும் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதானி குழுமம் பெருமிதம் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.