இந்திய நீதிக்கு முன் யாவரும் சமமில்லை

22-03-2024

0

0


இந்திய முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வடமராட்சி, உடுப்பிட்டியைச் சேர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்), தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை செய்யப்படாமல்  சிறை வைக்கப்பட்டிருந்தார். 32 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் இலங்கை குடியுரிமை கொண்டவர் என்பதனால் வெளியில் விடப்படாமல், 'சிறப்பு முகாம்' எனவழைக்கப்படும் இன்னொரு தடை முகாமில் அடைத்து வைக்கப்பட்டார்.  நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படாமல் 15 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்  நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பெப்ரவரி 28ம் திகதி சாவடைந்தார். 1991ம் ஆண்டு மே 21ம் நாள் சென்னையிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சிறிபெரம்புத்தூர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெடிகுண்டுத் தாக்குதலில் இராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்  என்ற விபரம் அனைவரும் அறிந்ததே. 'தனு' என அறியப்பட்ட  கலைவாணி (தேன்மொழி) இராசரத்தினம் என்பவரே இத்தாக்குதலைச் செய்ததாகக் கூறப்பட்டது.  இத்தாக்குதலை திட்டமிட்டவர்கள் என இந்திய பாதுகாப்புத்துறையினரால்  தேடப்பட்டுவந்த  சிவராஜன். சுபா ஆகிய இருவரும் அவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது தற்கொலை செய்து சாவடைந்தனர். அதன் பின்னர் இத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் முடிவில் 26பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், பெண்கள் படையணியைச் சேர்ந்த அகிலா ஆகியோரும் இத்தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததாக இவ்வழக்கை விசாரித்த இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 

இத்தகவல்களை வைத்துப்பார்த்தால், ஈழத்திலும், தமிழ்நாட்டிலுமாக  முப்பத்தைந்து பேருக்கு மேல் இத்தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள்,  ஆனால் இந்திய புலனாய்வுத்துறைக்கு இதுபற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு ஒருவர் வரமுடியும். நாட்டின் முக்கியமான இலக்குமேல் நடத்தப்பட்ட தாக்குதல் இவ்வாறு பலருக்கும் தெரியும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதற்கான குறைந்த பட்ச வாய்ப்புகளாவது இருந்திருக்குமா என்பதனை இந்திய அறிவுச்சமூகம் சிந்திக்க விரும்பவில்லை.

மேற்படி தீர்ப்புத் தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டபோது மரண தண்டனை விதிக்கப்பட்ட இருபத்தாறு பேரில் பத்தொன்பது பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.  ஏனைய ஏழு பேருக்கும் தண்டனை தொடர்ந்தது. 32 வருட சிறைவாசத்திற்கு பின்னர் அவர்கள் தொடர்ந்த சட்ட நடவடிக்கைகளின் காரணமாக  2022 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். முதலில் பேரறிவாளனும், சில மாதங்களின் பின்னர் ஏனைய அறுவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் ஈழத்தைச் சேர்ந்த நால்வர் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர். சாந்தன் தவிர்ந்த ஏனைய மூவரான சிறிகரன் (முருகன்), ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இராஜிவ் கொலையில் எதுவித தொடர்புமற்றவர்களான இவர்களுக்கு, கொலையுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சாவடைந்தவர்களான கலைவாணி, சிவராஜன், சுபா ஆகியோருடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது.  இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் இரண்டு கையடக்க மின்கலங்களை (AA batteries) வாங்கிக் கொடுத்தார் என்பதே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.  இவரிடம் மின்கலங்களை வாங்கித் தருமாறு கேட்டவர், எதற்காக மின்கலங்கள் தேவைப்படுகிறது என்பதனை விலாவாரியாகக் கூறியிருக்கமாட்டார் என்பது சிறுபிள்ளைக்கே தெரிந்த விடயம். ஆதலால் இவ்வாறான சிறுவிடயங்களுக்கெல்லாம் 32 வருட சிறைத்தண்டனை வழங்கும் வகையிலா இந்தியச் சட்டங்கள் இருக்கின்ற என்ற வினா எழுவது இயல்பானது.


இது இந்தியாவின் சட்டங்களிலுள்ள குறைபாடல்ல, மாறாக இந்திய அதிகார மையம் இச்சட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயற்பட்டு வருகிறது என்பதுதான் இதற்கான விடையாக அமையும். 

 

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர், இந்தியாவின் அரச வம்சம் என்று சொல்லக் கூடியளவிற்கு செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தின் வாரிசு.  இந்திய புலனாய்வுப்பிரிவின் கண்ணில் மண்ணைத் தூவியபடி இக்கொலை நடந்து விட்டது என்ற ஆத்திரம் ஒரு புறம், இது இந்திய ஆட்சிமையத்தை ஆட்டம் காணவைக்கும் ஒரு விடயம் என்பது இன்னொரு புறம். இந்நெருக்குவாரத்திலிருந்து தப்புவதற்கு யாராவது ஒரு சிலரையாவது நீதி மன்றத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கு அதியுச்ச தண்டனையைப் பெற்றுக்கொடுக்க  எடுத்த முயற்சியே இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை. இவ்விடயத்தில் அதிகார மையங்களைக் கேள்வி கேட்பதற்கு ஆளில்லை. ஏனெனில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்தவர்கள் எதுவித அதிகாரமுமற்ற விளிம்பு நிலை மக்கள். 'எமது நாட்டின் தலைவர் ஒருவரை வெளிநாட்டுத்  தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள், அவர்களைச் சும்மா விடக்கூடாது' என்ற ஒற்றை வாதமே, தேசியவாத அடிப்படையில் மக்களை உசுப்பிவிடப் போதுமானதாகவிருந்தது. இராஜிவ் கொலைவிடயத்தில் இவ்வாறு இறுக்கமானபோக்கைக் கடைப்பிடித்த இந்திய அதிகாரமையம் எல்லாவிடயங்களிலும் தேசாபிமானத்துடன் நடந்து கொள்கிறதா என்றால்  அதுவுமில்லை என்றே கூறவேண்டும்.  இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் அமைந்திருக்கும் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த வெடிப்புச் சம்பவம் இதற்குச் சிறந்த உதாரணமாகவிருக்கும்.

1984 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி நள்ளிரவில் நடந்த இந்த வெடிப்புச் சம்பவத்தில், ஏற்பட்ட இரசாயண வாயுக் கசிவு காரணமாக  சுமார் இருபதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.  உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து என அழைக்கப்படும் இச்சம்பவத்தினால் இத்தொழிற்சாலைக்கு அண்மைய பிரதேசங்களில் வாழ்ந்த ஏறத்தாள அரை மில்லியன் பேர் பாதிப்புக்குள்ளாகினர். இராஜிவ் காந்தி பிரதமராகப் பதவியேற்று  இரண்டு மாத காலத்தில் இவ்விபத்து நடைபெற்றது.

நடைபெற்றது விபத்து எனினும், ஒரு இரசாயணத் தொழிற்சாலை கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் யூனியன் கார்பைட் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் நடைபெற்ற சில நாட்களில், அமெரிக்காவிலிருந்து  மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு  வந்திருந்த யூனியன் கார்பைட் தலைமை அதிகாரி Warren Anderson இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் சில மணித்தியாலங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டதுடன்  நாடு திரும்பவும் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க இராசங்கத் திணைக்களத்தின் அழுத்தங்களுக்கு இராஜிவ் காந்தி பணிந்துவிட்டதாக அப்போது கூறப்பட்டது. அதற்குப்பின்னரும் பலதடவைகள் விசாரணைக்காக அவரை தமது நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் சட்டை செய்யவில்லை.  யூனியன் கார்பைட்  மீதான இந்திய அரசின் வழக்கு இன்னமும் நிலுவையிலிருந்தாலும் அது ஒரங்குலமேனும் முன்னோக்கி நகரவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட Warren Anderson   2014ம் ஆண்டு அவரது 92வது வயதில் இயற்கையெய்தினார்.

1987ம் ஆண்டு இரஜிவ் காந்தியும், ஜே. ஆர். ஜயவர்தனவும் கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைவதற்காக 'இந்திய அமைதிப்படை' என ஈழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவத்தினர் சுமார் இரண்டாண்டு காலத்தில் பன்னிரண்டாயிரம் தமிழ்மக்களைக் கொன்றனர். இலங்கைத் தீவின் சட்டங்களுக்குப்  புறம்பான இக்கொலைகளையிட்டு இதுவரை எவ்விதமான விசாரணைகளும் நடத்தப்படவில்ல. யூனியன் கார்பைட்  தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துக்கு, அந்நிறுவன அதிபர் பொறுப்பு என்றால் இந்திய்படைகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு யார்  பொறுப்பேற்பது? இதுபற்றி முறையிடுவதற்கு ஒரு மன்றுகூட இவ்வுலகில் இல்லையா?

தமிழ் அரசியற் தரப்புகள் கூட இவைபற்றிப் பேச அச்சப்படுகின்ற  சூழலிற்தான்  தமிழினத்தின் மீது விதிக்கப்பட்ட கூட்டுத் தண்டனையை (collective punishment) தன் வாழ்நாள் முழுவதும் சுமந்த சாந்தனின் தியாகத்தை நாம் நினைவு கூருகிறோம்.