அடிக்கடி சர்ச்சைக்குரியதாக ஏதோவொன்றைக் கூறி மாட்டிக்கொள்ளும் முரளிதரன் 

13-11-2023

0

13

‘இலங்கையணி வீரர்கள் தமது நாட்டுக்காக விளையாடுகின்றோம் என்ற உணர்வே இல்லாது உள்ளனர். இவர்கள் பணத்துக்காகவே இப்போது விளையாடுகின்றனர்’ என விமர்சித்துள்ளார்   முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

 

தற்போது முத்தையா முரளிதரனின் இலங்கை அணி தொடர்பான குற்றச்சாட்டு, கடும் விமர்சனங்களை அவருக்கு எதிராக முன்வைக்க காரணமாக அமைந்துள்ளது.

 

உலகக்கிண்ணப் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்து நாடு திரும்பிய இலங்கை அணியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து  இலங்கை அணியும் ஊடகவியலாளர்கள் மாநாட்டை கூட்டி மன்னிப்பு கோரியுள்ளது.

 

மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்தன அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.பாராளுமன்றத்தில் அரசியல்வாதிகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எம்மால் பதில் கூற முடியாது என்றும்  அவர் தெரிவித்துள்ளார். 

 

இது ஒரு புறம் இருக்க இலங்கை கிரிக்கெட்டானது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் கடந்த 10ஆம் திகதி தடை செய்யப்பட்டது. உலகக்கிண்ணத் தொடர் தோல்விகள், இலங்கை கிரிக்கெட்ட சபைக்குள் ஊடுருவியுள்ள அரசியல், ஐ.சி.சியின் தடை என அடுத்தடுத்து அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.

 

இலங்கை அணியின் உலகக்கிண்ணத் தோல்விகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்துத்தெரிவித்து வரும் சூழ்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தற்போதைய அணி வீரர்களை சாடியுள்ளார்.  இந்திய ஊடகமொன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போது, ‘இலங்கையணி வீரர்கள் தமது நாட்டுக்காக விளையாடுகின்றோம் என்ற உணர்வே இல்லாது உள்ளனர். இவர்கள் பணத்துக்காகவே இப்போது விளையாடுகின்றனர்’ என கோபமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 

முரளிதரன் இப்படி கூறுவதா என பலரும் இப்போது அவருக்கு எதிராக கருத்துக்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டனர். 2016ஆம் ஆண்டு இலங்கையணி அவுஸ்திரெலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவுஸ்திரேலிய அணிக்கு பத்து நாட்களுக்கு சுழற்பந்து ஆலோசகராக முரளிதரன் செயற்பட்டிருந்தார். அக்காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த திலங்க சுமதிபால முரளியை ‘துரோகி' என வர்ணித்திருந்தார். முரளி பணத்துக்காக ஆசைப்பட்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு விலை போய் விட்டார் என்று கூறியிருந்தார்.

 

அதற்கு பதில் அளித்த முரளி ‘எனது சேவை இலங்கையணிக்கு தேவையானால் அவுஸ்திரேலியா அழைப்பதற்கு முன்பதாக என்னை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. இப்போது என்னை எவ்வாறு துரோகி என்று கூற முடியும்? இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் நுழைந்துவிட்டது. ஆகவே இலங்கையணி குறித்து எந்த  அக்கறையும் இன்றி செயற்படும் அவர்களே துரோகிகள்’ என அவர் கூறியிருந்தார்.இப்போதும் தனது கருத்திலிருந்து முரளிதரன் சற்றும் தளரவில்லை. இலங்கையணியின் தோல்விகள் குறித்து அவர் கூறும் போது, 

 

‘நாங்கள் விளையாடும் காலத்தில் நாட்டுக்காக விளையாடுகின்றோம் என்ற உணர்வு எமக்கு இருந்தது. இப்போது விளையாடும் அணி வீரர்களிடம் அது துளியும் இல்லை. அனைவருமே பணத்துக்காகத் தான் விளையாடுகின்றார்கள். இவர்களுக்கு நாட்டின் மீது பற்றில்லை. நாட்டுக்காக விளையாடுகின்றோம் என்ற உணர்வு இல்லாது அனைவரும் பணத்தை தேடி செல்ல ஆரம்பித்து விட்டனர்.

 

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடனேயே தோல்விகளை தழுவுகின்றனர். வெளிநாட்டு தொடர்களில் அதிக பணம் கிடைக்கின்றது என்பதற்காக அங்கு செல்கின்றனர். இவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இலங்கை பிரீமியர் லீக் தொடர்கள் மாத்திரமின்றி ஏனைய தொடர்களிலும் இவர்கள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.இலங்கையணியின் தோல்விகள் என்னைப்போன்ற நாட்டை நேசித்து விளையாடியவர்களுக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் தருகின்றது' என அவர் தெரிவித்திருந்தார். 

 

மேலும் 13ஆவது உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இலங்கையணிக்கு கால் இறுதி வாய்ப்பு கூட கிடைக்காது எனத் தெரிவித்து எரிச்சலை ஏற்படுத்தியிருந்தார். இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றார்கள் என முரளி கூறுகின்றார். ஆனால், அவர் ஐ.பி.எல். போட்டிகளில் இலவசமாகவா விளையாடினார் என இலங்கை அணியின் சில வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

2012ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை முரளிதரன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினார். பின்னர் 2014ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  எனினும் 2015ஆம் ஆண்டே அவர் சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராகவும் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது வரை பணியாற்றி வருகின்றார்.இதெல்லாம் அவர் இலவசமாகவா செய்து வருகின்றார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

அதேவேளை, அண்மையில் அவரது வாழ்க்கையை கூறும் 800 என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் தயாரிப்பாளராகவும் அவரே விளங்குகிறார். படத்துக்கு ஆதரவு கேட்டு அவர் தமிழகம், இலங்கை என பறந்து திரிந்தார். அது எதற்காக? எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

 

முரளிதரன் விளையாடிய புகழின் உச்சியில் இருந்த காலத்தில் முதல் தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்தின் லங்கஷயர் கழகம் இவரை தனது அணிக்காக விளையாடுவதற்காக 1999, 2001, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் இவருடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. முதல் தர போட்டிகளில் அவர் இலவசமாக விளையாடவில்லை. இதன் மூலம் அவர் அக்கலாத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். 

 

எனவே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பணத்துக்காக விளையாடுகின்றார்கள் என்று கூறுவதற்கு முரளிதரனுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லை என உள்ளூரிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.அடிக்கடி சர்ச்சைக்குரியதாக ஏதாவது கூறி மாட்டிக்கொள்ளும் முரளிதரன் இப்போது இலங்கை கிரிக்கெட் அணியைப் பற்றி கூறி பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்த மஹேல ஜயவர்தனவும் தற்போதைய அணியின் ஆலோசகராக உள்ளார். இது அவரையும் பாதித்துள்ளது என்று கூறப்படுகின்றது.