அமெரிக்க அதிபர் உண்மையான நண்பர்-இஸ்ரேல் அதிபர்

18-10-2023

இஸ்ரேலுக்கு பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் நடக்கும் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றல்ல. எனினும் தன்னுடைய நேரடி சந்திப்பு சில தீர்வுகளை கொண்டு வரும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் இந்த பயணத்தை மேற்கொண்டார் எனக் கூறப்படுகின்றது.

 

இந்த நிலையில்,மெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

 

அதே நேரம்,  காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகும் இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கக் கூடாது என்று ஐ.நா வாயிலாக ஈரானும் எச்சரித்துள்ளது. மற்ற அரபு நாடுகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிப்பது மக்களிடையே கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையடுத்து, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்துவதுடன் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி எச்சரிக்கும் விதத்தில் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை கொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. 

 

அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.