தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம்

11-11-2023

0

18

கமாஸுக்கு எதிரான போரில் தினமும் 4 மணி நேரம் இடைவெளி விடுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா அதனை வரவேற்றுள்ளது.

 

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “இஸ்ரேல் தனது முடிவை அறிவித்துள்ளது. அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர் போருக்கு மத்தியில் ஓர் இடைவெளி விடுவது என்ற இஸ்ரேலின் முடிவு சரியான திசையில் வைக்கப்பட்டுள்ள முதல் அடி. இதன் மூலம், அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்'' என தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, கடந்த மாதம் 7-ம் திகதி காசாவில் உள்ள கமாஸ் அமைப்பினர்  7000ம் ஏவுகணைகளை செலுத்தியதோடு இஸ்ரேலுக்குள் நுழைந்தும் தாக்குதலில் ஈடுபட்டு  240-க்கும் மேற்பட்டோரை  பிடித்துச சென்று  பணயக் கைதிகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில்  1,400 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கு பலி வாங்கும் முகமாக காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்  10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 4000க்கும் மேற்பட்டவர்கள் குழந்த்தைகள்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் காசாவுக்கு வழங்கி வந்த மின்சாரம், எரிபொருள், குடிநீர் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தி உள்ளது. இதனால், காசாவில் உள்ள மக்கள் பெரும் மனித அவலத்தை  சந்தித்து   வருகிறார்கள். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிப்பதிலும் நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படுகிறது. காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் தாக்குதலுக்கு இலக்காவதால், அவர்கள் அங்கிருந்து வெளியே செல்வதற்கு நேரம் கொடுக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். அப்போதுதான், அப்பாவி மக்கள் உயிரிழப்பது குறையும் என வலியுறுத்தப்பட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன.

 

இதைத்தொடர்த்தே தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.