ஞாபகம் வருதே

15-04-2024

0

0

வேள்வி கிடாய்

யாழ்ப்பாணத்தில் இந்து சமய நம்பிக்கைகளில் ஒன்றாக கிடாய் ஆடுகளை கோழிச் சேவல்களைஆலயங்களில் பலி கொடுக்கும் வழக்கம் காலாகாலமாக இருந்து வந்தது. காவல் தெய்வமான வைரவர் ஆலயங்களில் இது ஊருக்கு உற்சாகம் ஊட்டும் விழா போல கொண்டாடப்பட்டன.

 

விவசாயத்தையும் உப வருவாய் தொழிலாக பெரும்பாலான வட கிழக்கு மாகாண வீடுகள் கொண்டிருந்த காலம் அது. வீட்டுக்கு வீடு ஆடு, கோழி, மாடு என விலங்கு வேளாண்மையும் இருந்தது. விஷ ஜந்துக்களில் இருந்து தங்களை காக்கும்படியாக வைரவரை வேண்டி வளர்ப்பு கடா, சேவல், கோழி  என்பதை நேர்ந்து ஆலய வேள்வியின் போது பலி கொடுக்கும் நம்பிக்கை வேள்விகளுக்கு காரணமாயின.

 

எங்கள் ஊருக்கு அண்மையாக கீரிமலை, கருகம்பானையை ஒட்டி இருப்பது கெளணாவத்தை வைரவர் ஆலயம். வேள்விக்கென்றே கடாய் வளர்ப்பதில் ஆர்வம், போட்டி, விழா எடுப்பு எல்லாம் இருக்கும். இந்த வேள்விக்காக ஆட்டுக்கடா வளர்ப்பதில் பெயர் பெற்றவராக கர்ணர் என்பவர் இருந்தார். மாட்டின் அளவு வளர்ச்சி, மயிர் அடர்த்தி, தசை திரட்சி, தாடி, கொம்பு, உடல் எடுப்பு, நடை மிடுக்கு என்ற எல்லாம் பொருந்தியதாக வேள்வியில் வலம் வரும் ஆடுகளில் கர்ணர் கிடாய்கள் தனித்துவம் அலாதி.

 

ஆட்டுக்கடா வளர்ப்பதில் ஆரம்பம் முதல் அக்கறை எடுபடும். தம்மிடம் உள்ள சிறந்த மறி ஆடுகளில் ஒன்றுக்கு ஊரில் சினைப்படுத்தலுக்காக வளர்க்கப்படும் ஆட்டுடன் சேர விட காத்திருப்பர். மறி ஆடு கிடாயை தேடினால் சினைப்படுத்தல் நடக்கும். ஈனும் குட்டிகளில் புஷ்டியான அழகான கிடா ஒன்று வேள்விக்கு தயாராகும்.

 

தனிக் கவனிப்பை அது பெறும். தாய்பால், மேலதிக புட்டிப்பால், இளம் தளிர் குழை என அது நன்கு வளரும். பருவமாகி பருமனாக அது ஒரு நாற்சதுர கிடங்கில் மேலே கூரை வேய்து விடுபடும். கயிற்றில் கட்டினால் அது அதிகம் நடந்து இளைத்துப் போய்விடும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

அதற்கு ஊட்டப்படும் உணவு ஊட்டச்சத்தான இலை குழையாக இருக்கும். ஏதாவது மல கழிசல் போன்ற நோய் தென்பட்டால் அதை மாற்ற மருத்துவ குழை தீத்தப்பட்டு உடன் குணமாக்கப்படும். வளர்ப்பாளர் கிடாவை பிள்ளையை போல பேணுவார். அதனை தடவி கொடுப்பார். அதனுடன் பேசுவார். அதே நேரம் உண்ணி போன்றன கிடாவில் மேல் மயிருள் இருந்து இரத்தத்தை உறிஞ்சுகிறதா என பார்த்து அவற்றை பிடித்து நசுக்கி கொல்வார். வேள்வி நெருங்குகிறது என்றால் கவனிப்பு கூடும். சத்தான குழை உணவை சிறு குழாய்மூலம் பலவந்தமாக ஊட்டுவர். அது சமிபாடு அடைய கஞ்சா போன்றன கலந்து ஊட்டப்பட்டதாகவும் கதை.

 

வேள்வியன்று கிடாய் சினிமா கதாநாயகன் போன்ற அந்தஸ்தை பெறும். மாலை அலங்காரத்துடன் வீட்டில் காட்சிக்கு நிற்கும். திருவிழா போல பெரிய மேளம், சின்ன மேள ஆட்டம், விருந்து எல்லாம் நடந்து ஊர்வலமாக உழவு யந்திரம் அல்லது மாட்டு வண்டிலில் அது வேள்வி ஆலயத்துக்கு அழைத்துவரப்படும். பொங்கலுக்கான பானை, சட்டி, பலகார பண்டங்களும் வெள்ளை துண்டால் மூடி வீட்டு பெண்களால் எடுத்துவரப்படும். வளர்பாளருக்கு மாலை, மரியாதை வழங்கி கெளரவிப்பதற்கும் ரசிகர் பட்டாளம் இருக்கும்.

 

ஏன் எதற்காக என்று அறியாத ஆடு கம்பீரமாக வெட்டுக்களத்தில் நிற்கும். ஒரே வெட்டில் கழுத்தை துண்டாடும் வல்லமை வெட்டுப் பூசாரிக்கு இருக்கும். கழுத்து நாளங்களால் ரத்தம் சீறி பாய சாயும் கிடாயை இழுத்து சென்று விலை கூறல் ஏலம் மூலம் ஆங்காங்கே ஆலயத்தில் வெட்டுண்ட கிடாய் வியாபாரம் நடக்கும். வேள்வி இப்படியான ஆலயங்களுக்கு ஆண்டு உற்சவம். கடாக்கள், சேவல்களுக்கு அது கொலைக்களம்.