புட்டீனின் அணுகுண்டு மிரட்டல்
05-07-2024
0
3
இரசியா ஓர் ஆக்கிரமிக்கும் நாடல்ல. அது மற்ற நாடுகளால் அச்சுறுத்தப்படும் நாடாகும் என்பதே இரசியக் குடியரசுத் தலைவர் விளடிமீர் புட்டீனின் நிலைப்பாடாகும். தனது எல்லையில் உள்ள நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது இரசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என அவர் உறுதியாக நம்புகின்றார். அத்துடன் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியா உருவாக்கிய யூரோ-ஏசியன் பொருளாதார ஒன்றியத்தில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் புட்டீன் விரும்பவில்லை.
உக்ரேனின் முன்னோட்டம் ஜோர்ஜியாவில்
2006-ம் ஆண்டு ஜோர்ஜியா என்ற இரசியாவின் தெற்கு எல்லையில் உள்ள நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவும் தயாரானது. அதேவேளை 2008 ஜனவரியில் ஜோர்ஜியா நேட்டோ கூட்டமைப்பில் இணையும் கருத்துக் கணிப்பு அங்கு வெற்றி பெற்றதுடன் அது ஜோர்ஜிய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இரசியா கடும் விசனமடைந்தது. ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினைவாதத்தை இரசியா ஊக்குவித்தது. ஜோர்ஜியா மீது 2008-ம் ஆண்டு ஓகஸ்ட் 8-ம் திகதி இரசியா பெரும் ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. தெற்கு ஒசெசிட்டியாவும் அப்காசியாவும் தனிநாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.
முதலாம் அணுக்குண்டு மிரட்டல்
2014 மார்ச் 16-ம் திகதி இரசியாவின் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவை கதிர்வீச்சு மிக்க சாம்பல் மேடாக்கக் கூடிய ஒரே நாடு இரசியா எனச் சூழுரைத்தார். 2014-ம் ஆண்டு உக்ரேன் மீது தனது முதலாவது ஆக்கிரமிப்புப் போரை ஆரம்பிக்கும்போது அமெரிக்கப் படைகள் உக்ரேன் போரில் தலையிடக் கூடாது என்பதற்காக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக அப்போது அமெரிக்காவில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனாலும் இந்த மிரட்டல் இரசிய அரசு தரப்பில் இருந்து விடுக்கப்படவில்லை.
2018இல் மார் தட்டிய புட்டீன்
2000-ம் ஆண்டு இரசியாவின் படைத்துறை விஞ்ஞானிகளுக்கும் படைக்கலன் உற்பத்தியாளர்களுக்கும் புட்டீன் கொடுத்த இலக்கு “2020 இல் இரசியா உலகின் வலிமை மிக்க படைக்கலன்களைக் கொண்ட நாடாக வேண்டும்” என்பதே. அவர்கள் அந்த இலக்கை 2018 இல் அடைந்து விட்டதாகச் சொன்னார்கள். 2018 மார்ச்சில் புட்டீன் இரசியாவின் படைவலிமையை பறைசாற்றும் உரை ஒன்றை நாட்டு மக்களுக்கு தனது படைக்கலன்கள் பற்றிய காணொலியுடன் செய்திருந்தார். அது Steve Jobs iPhone அறிமுகம் செய்வது போல் இருந்தது என விபரிக்கப்பட்டது. அதில் முக்கியமானது இரசியாவின் Kh-47M2 Kinzhal என்னும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பற்றியது. அவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை.
இரண்டாவது அணுக்குண்டு அச்சுறுத்தல்
2022 இல் உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தபோது விடுக்கப்பட்டது. உக்ரேன் மீதான இரசியாவின் இரண்டாவது படை நடவடிக்கை ஆரம்பிக்கும் போது இரசியா தனது கலினின்கிராட் என்னும் நிலப்பரப்பில் மூன்று MiG-31E என்னும் ஒலியிலும் பார்க்க இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கும் விமானங்களையும் Kh-47M2 Kinzhal என்னும் அணுக்குண்டுகளைத் தாங்கிக் கொண்டு ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் நிறுத்தியிருந்தது. போலாந்திற்கும் எஸ்தோனியா விற்கும் இடையில் உள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இருந்து Mig-31 போர்விமானங்களால் ஐரோப்பாவின் எப்பகுதியையும் அணுக்குண்டுகளால் Kinzhal மூலம் தாக்க முடியும். உக்ரேன் போரில் நேட்டோப்படைகள் நேரடியாகத் தலையிட்டால் ஐரோப்பாமீது அணுக்குண்டுகளை வீசுவேன் என்ற மிரட்டலுடன் விளடிமீர் புட்டீன் உக்ரேன் மீதான தாக்குதலை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார்.
மீண்டும் மிரட்டல்கள்
2022 ஒக்டோபரில் புட்டீன் இரசியா தன்னைப் பாதுகாக்க தன்னிடமுள்ள எந்த படைக்கலனையும் பாவிக்கத் தயங்காது என்றார். அதை மேற்கு நாடுகள் புட்டீன் மீண்டும் அணுக்குண்டு மிரட்டல் விடுகின்றார் என வியாக்கியானம் செய்தன. இரசியத் தரப்பில் அது மறுக்கப்பட்டு நேட்டோ நாடுகள் இரசியாமீது அணுக்குண்டு தாக்குதலுக்கு தயாராகின்றன எனச் சொல்லப்பட்டது. 2023 ஒக்டோபரில் இரசியப் படையினர் அணுக் குண்டுகளை வீசும் simulated attack என்னும் கணினி மாதிரிப் போர் ஒன்றைச் செய்து தமது அணுக்குண்டு வலிமையைப் பகிரங்கப்படுத்தினர். 2024 பெப்ரவரியில் பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் எம்மானுவேல் மக்ரன் உக்ரேனுக்குப் படைகளை அனுப்ப வேண்டும் என உரையாற்றிய பின்னர் இரசிய உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடுவில் உரையாற்றிய இரசியத் தலைவர் புட்டீன் மேற்கு நாடுகள் தமது படையினரை உக்ரேனுக்கு அனுப்பினால் அவர்கள் ஓர் அணுக்குண்டுப் போருக்கான அச்சத்திற்கு வழிவகுக்கின்றார்கள் என்றார்.
ஹைப்பர்சோனிக் ஹம்பக்?
2022 ஒக்டோபர் மாதம் 8-ம் திகதி இரசியா கிறிமியாவிற்கு அமைத்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இரசியா உக்ரேன் மக்களையும் குடிசார் உட்கட்டுமானங்கள் மீதும் பெருமளவு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. 2023 மார்ச் 9-ம் திகதி மீயுயர்-ஒலிவேக (hypersonic) 81 ஏவுகணைகளை இரசியா உக்ரேனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து வீசியது. அவற்றில் 34 வழிகாட்டல் (cruise) ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. இரசியாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் (hypersonic) இரசியா சொல்வது போல் இடைமறித்து அழிக்கப்பட முடியாதவை அல்ல என நேட்டோ நாடுகள் உணர்ந்து கொண்டன. இரசியா Kinzhal Hypersonic Missilesகளை இடை மறித்து அழிக்கும் ஆற்றல் உக்ரேனிடம் இல்லை. அவற்றை இரசியா பெருமளவில் பாவித்தால் அது போரின் உக்கிரத்தை அதிகரிக்கும் என்றார் அமெரிக்காவின் முன்னாள் வான்படைத் தளபதி Colonel Jeff Fisher.
ஜோ பைடனும் அவரது நேட்டோ நண்பர்களும் உக்ரேன் போர் பரவலடைவதைப் பற்றியே அதிகம் அச்சப்படுகின்றனர். சிலர் புட்டீன் அணுக்குண்டு பாவனையைப் பற்றிப் பேசுவது அவரது அரசியல் சதுரங்க விளையாட்டு என்கின்றனர். அமெரிக்காவுடனான படைக்கல உற்பத்தி போட்டியால்தான் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது என்பது புட்டீனுக்கு நன்கு தெரியும். அதனால் தனது படைக்கலன்களின் தரங்களை மேம்படுத்துவதிலும் பார்க்க எண்ணிக்கைகளை அதிகரிப்பதிலும் பார்க்க தன்னிடம் இருக்கும் அணுக்குண்டுகளை வீசுவேன் எனச்சொல்லி உக்ரேன் போரில் நேட்டோ நாடுகள் அதிக ஈடுபாடு காட்டுவதை தடுக்க முயல்கின்றார் புட்டீன். 2024 ஜூன் 11-ம் திகதி இரசியாவை இலக்கு வைத்து நேட்டோப் படையினர் தம் அணுக்குண்டுகளை நகர்த்தினார்கள். இது ஒரு அணுக்குண்டுப் போருக்காக அல்ல, ஆனால் புட்டீனுக்கு பதில் மிரட்டல் விடுப்பதற்காக. அணுக்குண்டுப் போரில் யாரும் வெல்ல முடியாது என்பதையும் இருதரப்பு பேரழிவில் முடியும் என்பதையும் இருதரப்பினரும் அறிவார்கள்.