கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

31-10-2023

0

13

உளவு பார்த்த   குற்றச்சாட்டில்    கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

ப்போது, "இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் " எனவும் உறுதியளித்துள்ளார்.

 

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அப்போது, அரசு இந்த வழங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைஇ எடுத்துரைத்தேன். அந்தக் குடும்பத்தினரின் வலிகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கூடவே 8 பேரையும் விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

 

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை, கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் 2022ம் ஆண்டு ஓகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் இருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு ஒக்.26 வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்குக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்திருந்தது.

 

இந் நிலையில், இஸ்ரேல் கமாஸ் போரில் இந்தியா இஸ்ரேளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த நிலையில் குறித்த 8 பேரின் வழக்கையும் மீண்டும் எடுத்ததோடு அவர்கள் 8 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.