படம் தோல்வி-மாயமான நடிகர்

18-10-2023

பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

 தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

கிருஷ்ணகிரி அருகே சென்னசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி. இவரது மகன் சுரேஷ் (வயது40). இவர் 'பூ போன்ற காதல்' என்ற தமிழ்  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் தியேட்டர்களில் ரிலீசானாது.


 இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சரியாக ஓட வில்லை என்பது தெரிய வந்தது. இதனால் மனவேதனையடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன சுரேஷின் தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

மேலும், மாயமான சுரேஷ், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.

 அதில் அவர் கூறியிருப்பதாவது:- எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்தை முடிப்பதற்காக கடனாக ரூ.5 லட்சம் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சினை அதிகமா உள்ளது. இந்த படத்தை நம்பிதான் இருந்தேன். 20 டிக்கெட் கூட வர மாட்டிங்குது, இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர்வாழ முடியாது. 

 

எனக்கு என்ன பண்றது என தெரியவில்லை. நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளேன். நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. நாளைக்கு நான் கண்டிப்பாக  உயிரோட இருக்கமாட்டேன்.

 உயிரோடு இருக்கனும்னா இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி எனக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் நிறையபேர் என் திரைப்படத்தை பார்ப்பார்கள். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.