பாரபட்சமற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியக்குழு தெரிவிப்பு -வெளிவிவகார அமைச்சர்

05-11-2023

0

20

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உட்பட இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியில் முன்னெடுக்கின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

 

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு குறித்து கருத்து  தெரிவிக்கையில்,

 

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஆழமான கவனத்தினைச் செலுத்தியிருந்தார்கள்.

 

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியில் முன்னெடுக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் தமது பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, இலங்கை குறித்த அவர்களின் கடந்தகால நிலைப்பாடுகளுக்கும் தற்போதைய களவிஜயங்களுக்க பின்னரான நிலைப்பாடுகளுக்கும் இடையில் மாற்றங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

 

அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ச்சியாக இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி நாம் முன்னோக்கிச் செல்வதில் அதிகமான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். 

 

அதேநேரம், குறித்த குழுவினர், இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதன் காரணமாக, அணிசேராக் கொள்கையின் பிரகாரம், அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டியுள்ளமைக்கான யதார்த்தத்தினையும் புரிந்துகொண்டுள்ளனர்.

 

மேலும், நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து சுபீட்சமான எதிர்காலத்தினைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் விடயங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு பாரபட்சமற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரியுள்ளனர் என்றார்.