“ஞாபகம் வருதே…”

14-11-2023

0

25

ஊரை நிறைத்த மரஞ்செடிகள் ஆல், அரசு, வேம்பு, பனை, இலுப்பை என்றெல்லாம் மரங்கள் ஊர் ஊராய் நிறம்பி இருந்தது ஒரு காலம். கடவுளுக்கு உரித்ததான இன்ன இன்ன மரம் என்று மதிப்பாய் மரங்களை மக்கள் வளர்த்தனர். அவைகள் எல்லாவற்றிலும் மருத்துவ குணங்களும் இருந்தன. நிழலுக்கு சனம் ஆற, பறவை எல்லாம் பழம் தின்று கூடு கட்டி வாழ மரங்கள் பயன்பட்டன. சந்திக்கு சந்தி, குறுகிய ஒழுங்கைகளில் கூட, ஆல், அரசு, வேம்புகளும் அதனோடு சூல வைரவர் போன்ற தெய்வங்களும் நிறைந்து இருந்தன.

 

ஊரிலே இருந்த செடி கொடியளுக்குள்ளே ஓராயிரம் நோய் தீர்கிற மருத்துவ மகிமைகள் இருந்தன.பாவட்டை, நொச்சி, கத்தாழை, எருக்கலை, கொவ்வை, பிரண்டை, தேங்காய்பூ கீரை, நன்னாரி, தூதுவளை, பொன்னாங்காணி, முசுட்டை, வெற்றிலை எத்தனை வகை செடி கொடிகள்? அந்த அந்த நோய்க்கு அதை அதை அவிஞ்சு குடிக்கிற, ஆவியை பிடிக்கிற, காயங்களுக்கு வைத்து கட்டுற, வழக்கம் அப்பு ஆச்சி வழி வழி சந்ததியாக தொடர்ந்தது.

 

இலங்கையை சிறிமாவோ ஆட்சி செய்த காலம். இது போன்ற கிராம வைத்திய முறைமை ஆயுர் வேதம் என்ற பெயரால் அங்கீகாரம் பெற்றது. அமைச்சும் நிறுவி உயர் படிப்பு, டாக்டர் பட்டம் எல்லாம் ஏற்பாடானது. பரியாரிமார் பரம்பரை மதிப்பை பெற்றது. பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் முறிவு தறிவுக்கு ஒட்டகபுலம், செங்கமாரிக்கு தெல்லிப்பளை கிழக்கு பொன்னார் ஆச்சி பரம்பரை, விஷ கடிக்கு மானிப்பாயில், பளையில் கருடனை அழைத்து வைத்தியம் பார்த்த பரம்பரை, கிஸ்தீரியா என்ற மன நோய்க்கு இணுவில் கோயிலோடு ஒரு பரம்பரை, பண்டத்தரிப்பு அத்தநாசியார் என்றெல்லாம் பரம்பரையாக இயற்கை வைத்தியம் இருந்தன. அரசாங்கம் மாற மருந்துவகைக்கும் தாராள இறக்குமதி கொள்கை வர இந்த மரஞ் செடி கொடி மூலிகை வைத்திய முறைகள் மங்கிபோயின.

 

அந்தக்காலம், அம்பனை, கொல்லங்கலட்டி வீதி செல்லத்துரை பரியாரியர், பணம் என்று ஒரு சதம் பெறாமல் நாடி பார்த்து நோய் அறிந்து நாட்டு வைத்திய முறை மருந்துவ சேவை செய்த புண்ணியவான் .சேடம் இழுக்கும்  கைவிடப்பட்ட நோயாளி, இன்ன நாள் இன்ன நேரம் இறப்பார் என்று நாடி பிடித்து சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர். அவரோடு அந்த ஆற்றலும் எங்கள் ஊரை விட்டு போனது.மின்சாரம்,நெடுஞ்சாலை, வீதி விசாலிப்பு என்றெல்லாம் வர, காலா காலம் ஊரின் காவல் தெய்வங்கள் குடி கொண்டிருந்த மரங்களெல்லாம் காணாமல் போய்விட்டன.அகன்று பரந்து, பல் ஆண்டு காலமாய் நிலைத்து நின்ற ஆல், அரசு, வேம்பு எல்லாம் இன்னும் நினைவில் நிழலாடுகின்றது.

 

எங்கள் வளவு மூலையில் அகன்று கிளை பரப்பி இருந்த அரச மரம் பற்றி அம்மம்மா சொன்ன கதை சுவாசியமானது. பதின் நான்கு வயதில் திருமணமான அவருக்கு அடுத்து அடுத்து ஆறு பிள்ளைகள் வயிற்றில் உண்டாகி பிறப்பிலேயே இறந்துவிடுமாம். எங்கள் பத்துப்பரப்பு வீட்டு வட கிழக்கு மூலையை அண்டி அரச மரம் வைத்து, அதைச்சுற்றி நாளாந்தம் குடம் குடமாய் தண்ணீர் வார்த்த நேர்த்தியில்தான் ஏழாவதாய் கருத்தரித்த அம்மா பிறந்தாவாம். மரங்களுக்கெல்லாம் அரசன் என்ற காரணத்தால் அரச மரம் என்று அழைக்கப்பட்ட அந்த மரமும் தபால் கந்தோர் கட்டிடத்துக்கான கண்டத்தையும் தாண்டி, பின் வந்த மின்சார இணைப்புக்காக தறிக்கப்பட்டமை அம்மம்மாவுக்கு மனதை விட்டு மறையாத கவலை. இப்போது அது அங்கு இருந்திருந்தால் புத்தர் சிலை ஒன்று தோன்றியும் இருக்கும்.  ஊரின் வளம் இழந்து, ஊரை இழந்து எங்கோ வாழும் நாம்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கேஎன ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.

Oru paper ISSUE -272