உலக அளவில் பாசிஸ்டுகள் எல்லாம் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள் போலும்

18-10-2023

0

21

 யேங்கப்பா…! உலக அளவில் பாசிஸ்டுகள் எல்லாம் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள் என்பது பாலஸ்தீனம் இஸ்ரேல் மோதலில் இங்குள்ள பாஜக இந்துத்துவ கூட்டம் வெளிப்படுத்தும் கருத்துக்களில் இருந்து துல்லியமாக உணர முடிகிறது…!

 

இதயத்தில் ஈரமுள்ளவர்கள் எல்லாம் நாளும், பொழுதும்  பதைபதைப்புடன் பாலஸ்தீனர் படும் துயரங்களை பார்த்து அதுவும் குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அழிவதைப் பார்த்து - மனம் துடிதுடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இங்குள்ள பெரும்பாலான பார்ப்பன சிந்தனையாளர்களும், பார்ப்பன ஊடகங்களும் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிப்பதோடு, பாலஸ்தீன போராளிகளான ஹமாஸ் இயக்கத்தை பற்றி நாளும், பொழுதும் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்!

 

ஹமாஸ் தான் முதலில் ஆரம்பித்தது தாக்குதலை, மறுக்கவில்லை! அவன் ஏன் தாக்கினான்? நாளும், பொழுதுமாக அவனது தாய்பூமி கொஞ்சம், கொஞ்சமாக அபகரிக்கப்படுவதும், அதை தட்டிக் கேட்டால் சச்சரவு வெடித்து இஸ்ரேல் போலீசார் வந்து எளிய அரேபியர்களை இழுத்து போட்டு மிதிப்பதுமாக எத்தனை நாள் பொறுத்திருப்பான்..?

 

அடக்கி வைத்த கோபம் ஒரு நாள் வெளிப்பட்டது! ஆம், அது ஒரு நாள் கோபம்! ஆனால், அதற்கு பதிலடி என பத்து நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது! அவன் அடித்தான். திருப்பி அடித்து அங்கு பல மடங்கு பேரை கொன்றாய்! இத்துடன் போக வேண்டியது தானே இஸ்ரேல்! மக்கள் வாழ்விடங்களின் மீது விண்வெளித் தாக்குதல் நடத்துவது, - அதுவும் மருத்துவமனையின் மீது குண்டு வீசுவது போன்றவை மன்னிக்க முடியாத அரக்கத்தனம்! மின்சாரம், குடிநீர், சப்ளையை நிறுத்தி வைத்து அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காதபடி செய்வது அட்டூழியம்!

 

லட்சோப லட்சம் மக்களை அதிரடியாக வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றியது கொடூரத்தின் உச்சமாகும். எல்லோரும் வெளியேறிய பிறகு காசாவை இஸ்ரேல் தன்னுடைய பிரதேசமாக இணைத்துக் கொண்டு மேலும் யூதர்களை குடி அமர்த்தி அழகு பார்க்கும்.

 

இது தானே 1945 தொடங்கி நடந்து கொண்டுள்ளது. இஸ்ரேல் சில இடங்களை ஆக்கிரமிக்கும்! அரேபியர்கள் இழந்த பகுதிக்கு போராடுவார்கள்! அந்த போராட்டத்தின் முடிவு மேன்மேலும் பல பகுதிகளை பறிகொடுப்பதாக அமையும்.தற்போதும் அது தான் நடக்கிறது! இஸ்ரேலின் இன அழிப்பு வெறியாட்டத்தை ஐ.நா கண்டித்தது! நிறுத்த கட்டளையிட்டது. ஒன்றும் பயனில்லை. ஐ.நா.சபையை ஒரு செல்லாக் காசாக மதிக்கிறது இஸ்ரேல்.

 

லட்சோப லட்சம் பாலஸ்தீன மக்களை கொன்றொழித்த கல்லறைகளின் மீது யூதர்கள் கட்டி எழுப்ப போகும் தங்களுக்கான சொகுசு மாளிகையில் எத்தனை வருடங்கள் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும்…? வாழ்க்கையை தொலைத்தவர்களின் வாரிசுகள் நாளை என்றாவது வல்லமை பெற்று எழமாட்டார்களா..? வருங்கால வரலாறு தன்னை சமன் செய்து கொள்ளாதா?

 

இந்த யூதர்கள் மீது பார்ப்பனர்களுக்கு தான் என்ன ஒரு பரிவு! பாசம், பற்று! பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தும், யூதர்களை நியாயவான்களாக தோற்றம் காட்டியும் எத்தனை பதிவுகளை பகிர்கிறார்கள்! ஆனால், இதே பார்ப்பனர்கள் தான் யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்த போது ஹிட்லர் புகழ் பாடினர்! பார்ப்பனர்களின் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஹிட்லரின் ஜெர்மானிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியது. ஆனால், அன்று கொன்று குவிக்கப்பட்ட பட்ட யூதர்களுக்காக கசிந்துருகி கண்ணீர் வடித்ததும் நாம் தாம்! எங்கு மனிதம் பாதிப்புக்கு ஆளானாலும் கண்ணீர் சிந்துபவர்களே நாம்!

 

அது என்னவோ தெரியவில்லை. தற்போது பார்ப்பனர்கள் தங்களை யூதர்களின் தொப்புள் கொடி உறவாகக் கருதி, நடக்கும் அநீதிகள் அனைத்தையும் அங்கீகரித்து கொண்டாடுகிறார்கள்! இதில் தினமல பத்திரிக்கை ரொம்ப ஓவராக செயல்படுகிறது.

மனிதநேயமற்ற இந்த பாசிஸ்டுகள் உலக அளவில் ஒருவருக்கொருவர் எப்படி வேவ்லென்ந்த் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என பார்க்கும் போதுபிரமிப்பே ஏற்படுகிறது…!

சாவித்திரி கண்ணன்

(சமூகவலை தளம்)