இஸ்ரேலின் இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும் -ஸ்பெயின் அமைச்சர்

09-11-2023

காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சர் அயோன் பெலாரா  வலியுறுத்தியுள்ளார்.

 

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10,000ம்  பேருக்கு மேற்பட்டோர்  பரிதாபமாக பலியாகினர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சரும், தீவிர இடதுசாரி Podemos கட்சியின் தலைவருமான அயோன் பெலரா இஸ்ரேலை கண்டித்துள்ளதுடன், உலகத்தலைவர்களின் வெளிப்படையான இரட்டை நிலைப்பாட்டையும் சாடியுள்ளார். 

 

'இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக உலகத்தலைவர்கள் செயல்படத் தவறிவிட்டனர். காஸாவில் பாலஸ்தீனியர்களை கொன்றது திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும். எனவே சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை இஸ்ரேலிய அரசு நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், காஸா பகுதிக்குள்  இஸ்ரேல் படைகள்   நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை. அதேநேரம், 7ம் திகதி  காசா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவின் முக்கிய மருத்துவமனைகளான அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியன் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்கின என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.. கான் யூனிஸ், நுசிராத் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாம்களும் இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.