75 வயதான நேட்டோவும் உலக அமைதியும்

02-08-2024

0

0

நேட்டோ என்னும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் 75வது மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2024 ஜூலை 11-ம் திகதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஆசியாவிலும் ஐரோப்பியாவிலும் சோவியத் ஒன்றியம் ஒரு வலிமை மிக்க நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் “பொதுவுடமையைப் பரப்பல்” என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்தன. சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. நேட்டோவில் தற்போதுஅல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மொன்ரிநிகிரோ, வட மெசடோனியா, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலொவேக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையில் உருவான பனிப்போரின்போது சுவீடனும் பின்லாந்தும் நடுநிலை வகித்தன. இரசியா உக்ரேன் மீது 2014-ம் ஆண்டு ஆக்கிரமிப்புச் செய்ததில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் தமது நடுநிலையில் இருந்து விலக ஆரம்பித்தன. 2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீதான இரண்டாவது ஆக்கிரமிப்பு போரைச் செய்ததின் பின்னர் சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைய விண்ணப்பம் செய்து கொண்டன. இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான எல்லை 2295கிலோ மீற்றர் நீளமானது. இரசியாவிற்கும் சுவீடனுக்கும் இடையிலான எல்லை 1340 கிலோ மீற்றர் நீளமானது. படைவலிமை மிக்க இந்த இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைந்தமை இரசியாவிற்கு பெரும் பின்னடைவாகும்.

இரண்டு குழப்பங்காசிகள்

ஹங்கேரியின் தலைமை அமைச்சர் விக்டர் ஓபனும் துருக்கியின் குடியரசுத் தலைவர் ரிசெப் எர்டோகன் ஆகிய இருவரும் நேட்டோவின் மற்ற முப்பது நாடுகளின் ஆட்சித் தலைவர்களுடைய நிலைப்பாட்டில் இருந்து முரண்படுவதுண்டு. இதில் விக்டர் ஓபன் விளடிமீர் புட்டீனுடனும் நேட்டோவில் அமெரிக்கப் பங்களிப்பு குறைக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடைய டொனால்ட் டிரம்பிடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இரசியாவிடமிருந்து கழிவு விலையில் எரிபொருள் பெறுவது ஓபனின் நோக்கமாகும். துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்காமல் இழுத்தடிப்பதற்கு பதிலடியாக ரிசெப் எர்டோகன் உக்ரேன் – இரசியப் போரில் நேட்டோவுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்கின்றார்.

உக்ரேன் கேட்பது கிடைப்பதில்லை நேட்டோவில்

உக்ரேன் இரசியப் படைகளை எதிர்கொள்ளத் தேவையான படைக்கலன்களை வழங்கவுமில்லை எனவும் நேட்டோவின் நாட்டுப் பாதுகாப்பை நேட்டோ அமைப்பு உறுதி செய்யவில்லை எனவும் உக்ரேன் குடியரசுத் தலைவர் விசனமடைந்துள்ளார். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது நிபந்தனைகளுக்கு உக்ரேன் அடி பணியாத வரை தனது ஆக்கிரமிப்புப் போரை நிறுத்தப் போவதில்லை. வாஷிங்டனில் 2024 ஜூலை 11-ம் திகதி முடிவடைந்த நேட்டோவின் உறுப்பு நாடுகளின் ஆட்சியில் உள்ளவர்கள் பங்கு பற்றிய உச்சி மாநாட்டில் உக்ரேன் நேட்டோவில் உறுப்புரிமையை எப்போது பெற்றுக் கொள்ளும் என்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போர் முடிந்த பின்புதான் அது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என நேட்டோவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரேன் வெகு விரைவில் நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றது. நேட்டோ நாடுகளில் அமெரிக்கா, ஜேர்மனி, ருமேனியா, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மட்டும் உக்ரேனுக்கு மேலதிக படைக்கலன்களையும் உதவிகளையும் வழங்க முடிவெடுத்துள்ளன. NASAMS என்னும் வான்பாதுகாப்பு முறைமை, HAWKs மற்றும் IRIS-T என்னும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள், GEPARD என்னும் விமான எதிர்ப்பு துப்பாக்கி போன்றவை உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கும் மேலதிகப் படைகலன்களாகும். மொத்தம் நாற்பத்தி மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்கள் நேட்டோ நாடுகளில் இருந்து உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்பது ஆண்டுகள் பழமையான F-16 போர் விமானங்களை வழங்குவதாக அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் வழங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் 2024 ஜூலை நடுப்பகுதிவரை F-16 போர் விமானங்கள் உக்ரேனுக்கு கிடைக்கவில்லை. 2024 கோடைகாலத்தில் கிடைக்கும் என அந்த மூன்று நாடுகளும் சொல்கின்றன. நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கள் உரையாற்றும்போது F-16 போர் விமானங்கள் உக்ரேனுக்குப் போகும் பாதையில் உள்ளன என்றார். அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேன் விளடிமீர் புட்டீனை தடுக்கும் எனவும் உக்ரேனா தடுக்க முடியும் எனவும் சூளுரைத்தார்.

2026-ம் ஆண்டு அமெரிக்காவின் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகள் ஜேர்மனியில் நிறுத்தப்படும்.

காசாவைக் கவனிக்காமல் விட்ட நேட்டோ நாடுகள்.

நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் அதாவது 2024 ஜூலை 11-ம் திகதி வெளிவிட்ட அறிக்கையில் காசா நிலப்பரப்பில் நடக்கும் போர் பற்றியோ அது முடிவிற்கு கொன் இஸ்ரேலின் அட்டூழியங்களைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாநாட்டின்போது உரையாற்றிய எந்த ஒரு அரசுத்தலைவரும் காசாவில் நடக்கும் போர் பற்றி ஏதும் சொல்லவில்லை. மாநாட்டின் கடைசி நாளன்று உரையாற்றிய துருக்கியின் குடியரசுத் தலைவர் ரிசெப் எர்டோகன் இஸ்ரேலைக் கடுமையாகச் சாடியதுடன் பலஸ்த்தீனத்தின் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வு காணும் வரை இஸ்ரேலுடன் நேட்டோவின் ஒத்துழைப்பை துருக்கி அனுமதிக்காது என்றார். நேட்டோவின் பல முடிவுகள் 32 நாடுகளின் ஒரு மனதான முடிவாக இருக்க வேண்டும் என்பது அதன் அமைப்பு விதிகளில் உள்ளது.

சீனாவைச் சீண்டிய நேட்டோ அறிக்கை

வாஷிங்டன் உச்சி மாநாட்டிற்கு ஆசிய பசுபிக் நாடுகளான தென் கொரியா, ஜப்பான், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அழைக்கப்பட்டமையை சீனா விரும்பவில்லை. மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் சீனாவின் பகிரங்கப்படுத்தப்பட்ட குறிக்கோள்களும் பயமுறுத்தல் நடவடிக்கைகளும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பிற்கும் நலன்களிற்கும் வாழ்வியலுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சீனாவை சினப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் நேட்டோ நாடுகள் தமது பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளின் பாதுகாப்பை பலியிட முயற்சிக்கின்றன என்றதுடன் ஆசிய நாடுகளுக்கும் குழப்பத்தைக் கொண்டு வர வேண்டாம் என்றார்.

உலக அமைதிக்கோ உக்ரேன் போரால் நலிந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்திற்கோ நேட்டோவின் வாஷிங்டன் மாநாடு எந்த நன்மையும் செய்யவில்லை.