தேசியத் தலைவருக்கு நினைவேந்தல் செய்ய முயல்வதேன்?

24-05-2024

0

0

இந்திய ஒன்றிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு நீடிப்புச் செய்துள்ளாக வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பு ஆச்சரியத்தைத் தராவிட்டாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌ னிப்பதாக அறிவித்து, இயங்கு நிலையிலிருந்து விடுபட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் தடையை நீடிக்க வேண்டியதன் அவசியமென்ன என்ற கேள்வி எழுவது இயல்பானது. மேற்குறித்த அறிவித்தலில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் பிரிவினையைக் கோருவதனைக் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதாகவும் அது இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2009ம் ஆண்டு மே மாதத்தில் அவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டாலும் ஈழக் கோரிக்கையைக் கைவிடாமல் அதற்காக இரகசியமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பதற்கு மேற்குலக நாடுகள் வேறுவிதமான காரணங்களைக் கூறுகின்றன. கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி எழும் என்பதனால், இந்நாடுகளைப் பொறுத்தவரை பிரிவினை கோருவதனை ஒரு காரணமாகக் காட்ட முடியாது. ஆதலால் அவ்வியக்கம் ஆயுத வன்முறையில் (பயங்கரவாதச் செயல்களில்) தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறிவருகின்றன. கடந்த பதினைந்து வருடங்களில் அவ்வாறான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை எனச் சுட்டிக் காட்டினாலும், இயக்கத்திற்கு தொடர்பில்லாத உதிரியாக நடைபெறும் சம்பவங்களைக் கூட அவை ஆதாரமாக முன்வைக்கின்றன. 

சில வருடங்களுக்கு முன்னர், சிறிலங்காவின் ஆறாவது திருத்தத்தைத் நீக்குமாறு கோருவது பற்றி பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கூட்டத்தினை தமிழ் தகவல் நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச முரண்பாடுகளுக்கான குழுவைச் சேர்ந்த அலன்கீனன் என்பவர் மேற்படி திருத்தச் சட்ட மூலம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும் அது நீக்கப்படவேண்டும் எனவும் கருத்துரைத்தார். கேள்வி நேரத்தின் போது, “பிரிவினையைக் கோருவதனைத் தடைசெெய்யும் ஆறாம் திருத்தத்தை நீக்குமாறு கோருவதற்கு முன்னர், மேற்குலக அரசுகள், குறிப்பாக பிரித்தானியா விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்குமாறு நாமகோர முடியாதா? ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் எந்த வன்முறை நடவடிக்கையிலும் அவ்வியக்கம் ஈடுபடாத போது தடையை ஏன் நீடிக்க வேண்டும்?” என அவரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த கீனன், ஏன் தடை நீடிக்கப்படுகிறது என்பது பற்றித் தனக்கு சரிவரத் தெரியாது எனவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை யார் தற்போது தலைமை தாங்குகிறார்கள் என்ற விடயத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதும் தடை நீடிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதிலிருந்து இந்நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினை யார் தலைமை தாங்குகிறார் என்பது முக்கியமான விடையமாக தெரிகிறது என்பதனை நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்திய அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது போன்று, 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எவரையும் இயக்கத்தின் தலைமைக்கு நியமிப்பதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கவில்லை.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டதாக 2009ம் ஆண்டு மேமாதத்தின் இறுதிப் பகுதியில் கே.பி. என அறியப்பட்டசெ ல்வராசா பத்மநாதன் அறிவித்தார். அவருடைய இடத்தை நிரவும் விதத்தில் தான் இயக்கத்தின் தலைமைச் செயலாளராக இயங்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அறிவிப்புச் செய்த சில வாரங்களிலேயே அவர் கொழும்பைச் சென்றடைந்து விட்டார். அதன் பின்னர் இயக்கத்தின் தலைமையை ஏற்க யாரும் முன்வரவில்லை. மக்கள் அதற்கு இடந்தரவில்லை என்று கூறுவது மிகச் சரியான நிலவரமாக இருக்கும். கே.பி. அப்பதவியில் நீடித்திருந்தால், அரசியற் தீர்வு தொடர்பில் இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் ஏற்றபடி அவரால் மாற்றியிருக்கக் கூடும். அதற்கான முகாந்திரம் அவரிடமிருந்தது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டிருப்பின் இயக்கத்தின் மீதான தடையும் இந்நாடுகளால் நீக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் கொள்கையைக் கைவிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழ் மக்களும் கைவிட்டிருப்பார்கள்.

அதன் பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாற்றீடாக மிதவாதத் தலைமையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைைக் கொண்டு வருவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப் பட்டது. நாடாளுமன்றப் பாதையில் ஜ னநாயக வழிமுறையைக் கடைப் பிடித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகத் கூட்டமைப்பு கூறிவந்தது. இன்று அக்கூட்டு கலைந்து, அதன் முதன்மைக் கட்சியான தமிழரசுக்கட்சி தமக்கென ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் நீதிமன்றங்களை நாடியுள்ளதனை தமிழ் மக்கள் அவதானித்தபடியே இருக்கிறார்கள்.

இந்த இடத்திற்தான் தேசியத் தலைவர் அவர்களின் இருப்பும் இல்லாமையும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 2009ம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதிக்கு பின்னர் தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய சரியான தகவல்கள் எதுவும் இதுவரை கிட்டவில்லை. மே மாதம் 19ம் திகதி தேசியத் தலைவரினது என ஒரு உடலத்தை சிறிலங்கா ஆயுதப் படையினர் காட்சிப்படுத்தினர். அது அவருடைய வித்துடலாகக் கூட இருக்கலாம் ஆனால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என சிறிலங்கா அரசதரப்பு இதுவரை அறிவிக்க வில்லை. இப்படைநடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கமால் குணரத்தன தனது ‘Road to Nandikadal’ புத்தகத்திற் கூட இது பற்றி விபரிக்கவில்லை என்பதிலிருந்த அவர்களுக்கே விபரம் தெரியவில்லை என்ற முடிவிற்கு நாங்கள் வரலாம். தேசியத் தலைவர் வீரச்சாவடைந்து விட்டதாக அறிவித்த கே.பி. க்கோ அல்லது இறுதி நாட்களில் அவருக்கருகில் நின்றதாகக் கூறியவர்களுக்கோ இது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

தேசியத் தலைவர் வீரசாவடைந்து விட்டார் என்று கூறுபவர்கள் அது பற்றிய தகவல்களை வெளியிட முடியாமலிருப்பதனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. ஏனெனில் அவர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் எமக்குக் கிட்டவில்லை. தவிரவும் வன்னிக் காடுகளைத் தாண்டி அவர் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கான இடமேதும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய தொழிநுட்பத்தின் தொடர்பு சாதன வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது அவர் இலங்கைத் தீவுக்கு வெளியில் வல்லாதிக்க நாடுகளுக்குத் தெரியாமல் வேறெங்காவது மறைந்திருப்பதற்கு சாத்தியமில்லை. அதற்கு இந்நாடுகள் இடமளிக்கப் போவதுமில்லை. ஆகவே தேசியத் தலைவர் எரித்திரியாவில் அல்லது அதற்கு அருகில் உள்ள நாடான Djibouti இல் தங்கியிருக்கிறார் என்று பரப்பப்படும் கதைகளை யாரும் கனதியான தகவல்களாக எடுப்பதில்லை.

தேசியத் தலைவருக்கு நன்றி செலுத்துவது என்பது அவர் மூட்டிய விடுதலை நெருப்பைை அணைய விடாமல் பாதுகாப்பது

தேசியத் தலைவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிகின்ற பட்சத்தில் அவருக்கு நினைவேந்தல் செய்வதில் தவறேதும் இருக்கிறதா என்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தோன்றும். இன்னும் சில தரப்புகளோ, அவருக்கு மலர் வைத்து வணங்கவே இன்றைக்கு ஆட்கள் இல்லை என்று உள்நோக்கத்துடன் கேலி செய்யக் கூடும். ஆனால் அவருக்கு நினைவேந்தல் செய்ய மறுக்கிறவர்களில் பெருமளவிலானோர் இவ்விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். இது தந்திரோபாயமான அரசியல் நகர்வு போலத் தோன்றினாலும், இது தமிழ்த் தேசியத்தின் பக்கமிருப்பவர்களின் உறுதியான கூட்டு மனவுணர்வு என்பதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச வல்லாதிக்கங்களும், சக்தி பொருந்திய பிராந்திய நாடுகளும் இதனைச் சரியாகப் புரிந்து கொள்வதனாற்தான் இயக்கத்தின் மீதான தடைநீடிக்கின்றது.

எல்லாம் முடிந்து விட்டது என்று விளக்கேற்றி, தண்ணீர் தெளித்து விட்டு கொள்கையை மாற்ற மக்கள் தயாராகவில்லை. அவ்வாறு மாற்ற முனைபவர்கள் இயக்கத்தை வழிநடத்த மக்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதுமில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது வெறுமனே ஒரு அமைப்பு இல்லை. இயக்கம் வரித்துக் கொண்ட கொள்கைகளுக்காக களமாடிய நாற்பதாயிரம் மாவீரர்களின் தியாகத்தினாற் கட்டப்பட்ட ஆலயம். அதனாற்தான் அதற்கு தலைமை வகிக்க அந்த ஒருவரைத் தவிர வேறெவருக்கும் மக்கள் இடமளிக்க மறுக்கின்றனர். அவர் தங்களுடன் இருக்கிறார் என்ற உள்ளுணர்வு இருப்பதனாலேயே ஆண்டு தோறும் அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடும் அவர்கள் விளக்கேற்ற மறுக்கிறார்கள்.

மக்களின் இவ்வுறுதியான நிலைப்பாட்டை புரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் அவர்களை முட்டாள்களாக சித்தரிக்க முயல்கிறார்கள். இச்சூழலைத் தமக்கு வாய்ப்பாக மாற்ற சிலர் முனைகிறார்கள் என்பது ஆபத்தான நிலைதான் எனினும் முட்புதர்களை கண்டறிந்து விலகிச்செல்லும் பட்டறிவு மக்களுக்கு உண்டு.  

தேசியத் தலைவருக்கு நன்றி செலுத்துவது என்பது அவர் மூட்டிய விடுதலை நெருப்பை அணையவிடாமல் பாதுகாப்பது. இப்புரிதல் இருக்கும்வரை இன்னும் நூறாண்டுகள் சென்றாலும் மக்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்வார். வாழும் மனிதருக்கு நினைவேந்தல் செய்வதில் எதுவித அர்த்தமுமில்லை.