காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் முயற்சி
14-11-2023
0
16
மிகத் தீவிரமான பழமைவாத-தேசியவாதக் கட்சிகளையும் கொண்ட ஒரு கூட்டணி ஆட்சி இஸ்ரேலில் நடக்கின்றது. அத்துடன் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தனக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்புவதற்கு எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்.
ஹமாஸ் அமைப்பு 2023 ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது செய்த அதிரடித் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் இடையே நெத்தன்யாஹூவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது.
அவரது கூட்டணியில் இருப்பவர்கள் பலர் முழுப் பலஸ்த்தீனத்தையும் இஸ்ரேல் கைப்பற்றி ஆள வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கின்றனர். ஹாமாஸ் அமைப்பை ஒரு போர் மூலம் அடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இரும்பு வாள்கள் படை நடவடிக்கை (operation swords of iron) என்னும் போரை ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலின் போர்த்திட்டம்,
முதலில் தரையில் இருந்தும் வானில் இருந்தும் குண்டுகளை வீசி காசா நகர் உட்பட காசாவின் வடபகுதியைக் கைப்பற்றுவது. பின்னர் காசா நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளில் உள்ள பலஸ்த்தீனியர்களை வட பகுதிக்கு வரவழைப்பது. இரண்டாம் கட்டமாக காசாவின்
தென்பகுதியைக் கைப்பற்றுவது. இந்த இரண்டு நடவடிக்கையின் போதும் பெருமளவு ஹமாஸ் அமைப்பினரைக் கொல்வதுடன் அவர்களின் படைக்கலன்களை முற்றாக அழிப்பது. மூன்றாம் கட்டமாக காசா நிலப்பரப்பையும் ஃபற்றா அமைப்பினரின் கைகளில் அதாவது பலஸ்த்தீனிய அதிகாரசபையிடம் ஒப்படைப்பது.
செறிவான மக்கள் குடியிருப்பைக் கொண்ட நகர்-சார் போர்.
2017இல் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படைகள் இஸ்லாமிய தீவிரவாதை அமைப்புக்களின் வசமிருந்த Marawi நகரை கைப்பற்ற எடுத்த முயற்சி நிறைவேற ஐந்து மாதங்கள் எடுத்தன.பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. ஈராக்கில் அமெரிக்கப்படைகள் ஃபலுஜா, மொசுல், ரமாடி ஆகிய குடிமக்கள் செறிவான நகரங்களை கைப்பற்றும் போது பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். உக்ரேனில் பஹ்மூட், மாரிப்போல் ஆகிய நகரங்களைக் கைப்பற்றவும் மீளக் கைப்பற்றவும் நடந்த போர்களில் பல அப்பாவிகளும் படையினரும் உயிரிழந்தனர். ஆனால் காசா நிலப்பரப்பில் இந்த எல்லா நகரங்களிலும் பார்க்க செறிவாக மக்கள் வாழுகின்றனர். காசா நிலப்பரப்பின் தலைநகரான காசா நகரிலும் அதை ஒட்டிய புறநகரங்களிலும் மக்கள் மிகச் செறிவாக உயர் கட்டிடங்களிலே வாழ்கின்றனர். முப்பதினாயிரம் ஹமாஸ் படையினரை அழிப்பதாயின் குறைந்தது மூன்று இலட்சம் அப்பாவிகளையாவது இஸ்ரேல் கொன்று குவிக்க வேண்டும்.
முப்பரிமாணப் போர்க்களம்
காசா நகரத்தில் உயரம் குறைந்த கட்டிடங்களே ஆறுமாடிகள் கொண்டவை. அது மட்டுமல்ல, உலகிலேயே மிகச் செறிவான சுரங்கப்பாதைகளை நிலத்தின் கீழ் கொண்டுள்ளன. பிலிப்பைன்ஸ், ஈராக், உக்ரேன் ஆகிய போர்க்களங்களில் இல்லாதவகையில் முப்பரிமாணம் கொண்ட போர்க்களமாக காசா நிலப்பரப்பு இருக்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் 365 சதுர கிமீ நிலப்பரப்பில் 500 கிமீ நீளமான சுரங்க வலையமைப்பை உருவாகியுள்ளனர். இது எந்தப் படையினருக்கும் ஒரு கடினமான போர்க்களமாகும்.
ஹமாஸின் வலிமை
பொறிவெடிகள், கண்ணி வெடிகள், குறிபார்த்துச் சுடுபவர்களின் (snipers) மறைவிடங்கள், பதுங்கு குழிகள், ஆளில்லா விமானங்கள் (Drones), தற்கொடைத் தாக்குதலாளிகள் எல்லாவற்றிற்கும் மேலாக பல்லாயிரக் கணக்கான பல்வேறுபட்ட எறிகணைகள் (Shells),
ஏவூர்திகள் (Rockets), ஏவுகணைகள் (Missiles) ஆகியவற்றை இஸ்ரேலியப் படையினர் காசா நிலப்பரப்பில் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது. பத்தாயிரம் கடற்படையினர் உட்பட முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரையிலான போராளிகள் ஹமாஸ் அமைப்பில் உள்ளனர். ஹமாஸ் அமைப்பினரே உற்பத்தி செய்த ஏவூர்திகள் 10கிமீ இல் இருந்து 250கிமீ வரை பாயக் கூடிய பல்வேறு வகையானவை. அவர்களுடைய பயிற்சியும் போர்க்குணமும் ஒக்டோபர் 7 தாக்குதலின் போது வெளிப்பட்டது. அவர்கள் ஏழு மணித்தியாலத்தில் கைப்பற்றிய நிலப்பரப்பை மீளக் கைப்பற்ற இஸ்ரேலுக்கு மூன்று நாட்கள் எடுத்தது.
அரசுறவியல் ஆதரவு
ஹமாஸ் அமைப்பினருக்கு கட்டார், துருக்கி, மலேசியா, சூடான், அல்ஜீரியா ஆகிய நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 7-ம் திகதி நடந்த தாக்குதலை ஜகார்டா முதல் துனிசி வரையுள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் தெருவில் இறங்கி கொண்டாடினர். ஹமாஸிற்கு எதிரான போர் இழுப்பட்டுக் கொண்டு போனாலும் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டாலும் உலகெங்கும் இருந்து இஸ்லாமியர் காசாவிற்கு சென்று ஹாமாஸில் இணைந்து போராடவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஐந்து வல்லரசுகளில் மூன்று வல்லரசுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன. அவை தமது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் உக்ரேன் போரால் மேற்கு நாடுகளில் படைக்கலன்களிற்கும் சுடுகலன்களிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
தெற்கு நாடுகளும் (Global South) காசாப் போரும்
தெற்கு நாடுகளில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிய போட்டி 2021-ம் ஆண்டில் இருந்து தீவிரமடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று நோய் தீவிரமடைந்திருந்தபோது தெற்கு நாடுகள் எதிர்பார்த்த உதவிகள் மேற்கு நாடுகளிடமிருந்து கிடைக்கவில்லை. தெற்கு நாடுகளின் முக்கியமான பிரதேசமாக வட ஆபிரிக்காவும் மேற்கு ஆசியாவும் உள்ளன. இவை எரிபொருள் வளம் மிக்கவையும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நிலப்பரப்புக்களாகும்.
இஸ்ரேலின் ஹமாஸிற்கு எதிரான போரில் அதிக அளவில் அப்பாவிகள் கொல்லப்பட்டால் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும். வட ஆபிரிக்காவும் மேற்கு ஆசியாவும் மேற்கு நாடுகளுக்கு எதிராக திரும்ப வாய்ப்புண்டு.
இஸ்ரேலின் தரைப்படை நகர்வும் வான் படையும்
அமெரிக்கா இஸ்ரேலை தரைப்படை நகர்வைச் செய்ய வேண்டாம் எனத் தடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் தரைப்படை நகர்வை தாமதிக்கும்படி வேண்டிக் கொண்டது. இவை போலி நாடகமாக இருக்கலாம். அமெரிக்கா உக்ரேனுக்கு அனுப்பவிருந்த படைக்கலன்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்றது. காசா நிலப்பரப்பின் இஸ்ரேலின் தரைப்படை நகர்வைச் செய்வது தற்போது உள்ள இஸ்ரேலின் ஆட்சியாளர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இஸ்ரேலியப் படையினர் காசாவினுள் சென்ற பின்னர் அவர்களை ஹமாஸ் அமைப்பினர் தமது சுரங்கத்தினூடாக எந்தப் பக்கத்திலும் இஸ்ரேலியப் படையினர் மீது தாக்குதல் நடத்தலாம். தரைப்படை நகர்வுகளுக்கு வான்படையின் ஆதரவு அவசியமானதாகும் என்பதை ரஷ்ய உக்ரேன் போர் உணர்த்தியுள்ளது. காசா நிலப்பரப்பினுக்குள் இஸ்ரேலியப் படையினர் நுழைந்த பின்னர் இஸ்ரேலிய வான்படையினர் தரைப்படைக்குச் செய்யும் உதவி மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அந்த அளவிற்கு இரு தரப்பினரும் ஒருவர்க்கு ஒருவர் நெருக்கமாக நின்று கொண்டே போர் புரிவார்கள். ஹமாஸ் போராளிகள் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் இஸ்ரேலிய வான் படை வந்து குண்டு போட முடியாத அளவு அவர்கள் இஸ்ரேலியப் படையினருக்கு நெருக்கமாக நின்று கொண்டு போர் செய்ய வேண்டும். 2023 ஒக்டோபர் மூன்றாம் வாரத்தில் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் சென்ற சிறப்புப் படையணியும் இஸ்ரேல் படையணியும் இரண்டு தடவைகள் முன்னேற முயன்று முடியாமல் போனது.
தனது படையினரில் எத்தனை பேரை இழக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரான் எந்த அளவு படைக்கலன்களை ஹமாஸிற்கு வழங்க முடியும். உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் தமது அரசுகளுக்கு எந்த அளவு அழுத்தம் கொடுக்க முடியும், எத்தனை அப்பாவி மக்களின் உயிரிழப்பை மேற்கு நாட்டு ஊடகங்களால் மறைக்க முடியும், லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு எந்த அளவு தாக்குதலை இஸ்ரேலுக்கு எதிராகச் செயற்படும் போன்றவற்றில் இஸ்ரேலின் இரும்பு வாள்கள் படைநடவடிக்கை (operation swords of iron) முடிவு தங்கியுள்ளது. இஸ்ரேலின் ஆளும் கட்சிக்குள் போர் தொடர்பாக முரண்பாடு நிலவுகிறது.
Oru paper ISSUE -272-