உலகக் கோப்பை கிரிக்கெட் : சச்சினின் சாதனையை முறியடித்தாரா கோலி

05-11-2023

0

20

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆரம்பம் முதலே இந்திய அணி அசத்தலான ஆட்டடத்தை வெளிப்படுத்தி வருகிறது. மும்பையில் நேற்று நடந்த போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களைக் குவித்தது. கில் 92 ஓட்டங்களும், கோலி 88 ஓட்டங்களும், ஸ்ரேயாஸ் 82 ஓட்டங்களும் எடுத்தனர்.

 

இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ்யும் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.முகமது ஷமியும் தனது வேகப்பந்து வீச்சில் இலங்கை வீரர்களை மிரட்டினார்.இலங்கை அணி 19.4 ஓவர்களில், வெறும் 55 ஓட்டங்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 302 ஓட்டங்கள்  வித்தியாசத்தில்   அபார வெற்றி பெற்றது. விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி, நடப்புத் தொடரில் முதல் அணியாக அரையிறுதியில் அடியெடுத்து வைத்தது.

 

தொடர்ந்து 4ஆவது முறையாக இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி 5 ஓவர்களில் 18 ஓட்டங்கள்  மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 3 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்களை 7 முறை வீழ்த்தி புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஸ்டாக் 6 முறை இதுபோன்று 4 மற்றும் நான்கிற்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் ஷமி நிகழ்த்தினார். 23 போட்டிகளில் ஜாகீர் கானும், 34 போட்டிகளில் ஜவகல் ஸ்ரீநாத்தும் தலா 44 விக்கெட்களை வீழ்த்தி இருந்த நிலையில், 14 போட்டிகளியே 45 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் முகமது ஷமி.

 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். அவர் இதேபோன்று ஒரு ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தது இது எட்டாவது முறையாகும். இதன் மூலம் சச்சின் 7 முறை ஆயிரம் ஓட்டங்களை குவித்திருந்த சாதனையை கோலி முறிடியத்தார்.