அமெரிக்காவின் RM Parks நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது
19-11-2023
0
30
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ், தங்களது ஆரம்பக் கட்டணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை எடுத்து அவற்றை இயக்கும். புதிய எரிபொருள் நிலையங்களை தாங்களாகவே கட்டுவதற்கும் இலங்கையில் இயங்குவதற்கும் RM Parks நிறுவனத்திற்கு அங்கீகாரம் உள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சந்தையில் பிரவேசித்த மூன்றாவது சர்வதேச பெற்றோலிய நிறுவனம் ஆர்.எம். பார்க்ஸ் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம், இலங்கையில் பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கான ஷெல் நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கும் RM Parks நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஆண்டின் முற்பகுதியில், சீன பெற்றோலிய நிறுவனமான சினோபெக், கடந்த மாதம் ஏற்கனவே தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த நிலையில், மே 2023 இல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இலங்கை சந்தையில் நுழைந்தது. சினோபெக்கிற்கு இலங்கையில் சொந்தமாக புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் உள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனமும் விரைவில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு எண்ணெய் இறக்குமதிக்கு தடையாக இருப்பதால் நாட்டின் எரிசக்தி நெருக்கடியை தீர்க்க சில்லறை எரிபொருள் சந்தையை அதிக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்தது.