உலகக் கோப்பை :இறுதி ஆட்டத்தில் மோதும் இந்தியா அவுஸ்திரேலியா அணிகள்
19-11-2023
0
16

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளை குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4-வது முறையாக இறுதி சுற்றில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் 1983, 2003 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்ற 2-வது அணி என்ற சாதனையை படைக்கும். இந்த வகையில் அவுஸ்திரேலிய அணி கடந்த 2003 மற் றும் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி அடையாமல் வாகை சூடியிருந்தது.
இந்திய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, இரு முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என அனைத்திலும் இறுதிக்கட்ட தடைகளை தாண்டவில்லை. இதற்கு இம்முறை முடிவு கட்டி இந்திய மக்களின் கனவை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நினைவாக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.