அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை

17-11-2023

காசாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது அங்குள்ள மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

 

இது குறித்து காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷர்ஃப் அல் குத்ரா கூறுகையில், "இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அல் ஷிஃபாவில் மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவம் சோதனையில் ஈடுபட்டுள்ளது. கமாஸ் தலைமை தாக்குதல் தளபதிகள் அங்குதான் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக நம்புகிறது. மருத்துவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது." என்றார்.

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் காசாவில் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஹமாஸ் அழிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அதில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை. இருப்பினும் குறைந்தபட்ச சேதாரத்துடன் எங்கள் வேலையை நாங்கள் முடிப்போம்" என்று கூறியுள்ளார்.

 

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் பழிவாங்கும் நடவடிக்கையில் காசாவில் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், காசாவின் வட பகுதியில் சுமார் 15 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.