ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீள் எழுச்சி

15-04-2024

0

0

காசா நிலப்பரப்பிலும் உக்ரேனிலும் நடக்கும் போர்களிடையே தொடர்பு ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால் இரசியாவின் மொஸ்க்கோவின் புறநகரப்பகுதியில் உள்ள Crocus City Hall என்ற கேளிக்கை நிலையம் மீது ஐஎஸ் கோர்சன் (Islamic State-Khorasan) என்ற அமைப்பு நடத்திய தாக்குதல் இரண்டு போரையும் தொடர்புபடுத்தியுள்ளது. பன்னாட்டு நியமங்களுக்கு முரணாகவும் வலிமையான எதிர்ப்புக்களுக்கு நடுவிலும் இஸ்ரேல் தனது இனவழிப்பு போரை காசாவில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது.

 

ஈரான் – இஸ்ரேல் நிழற்போர் இனித் தீவிரமடையும்

 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல ஆண்டுகளாக ஒரு நிழற்போர் நடக்கின்றது. ஈரான் மீது பல இரகசியத் தாக்குதல்களை இஸ்ரேல் செய்துள்ளது. பல ஈரானிய விஞ்ஞானிகள் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டுள்ளனர். 2024 ஏப்ரல் முதலாம் திகதி சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன் எப்போதும் இல்லாத அளவு அதிக படைத்துறை அதிகாரிகள், மூன்று ஜெனரல்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான காத்திரமான பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் ஈரான் உள்ளது. தற்போது நலிவடைந்திருக்கும் அல் கெய்தா அமைப்பு, சோமாலியாவில் இருந்து செயற்படும் அல் ஷபாப் அமைப்பு போன்றவற்றிற்கு ஈரான் உதவிகள் செய்யலாம். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய படைக்கலன்களை ஈரான் வழங்கலாம்.

 

உக்ரேன் இரசியப் போரில் திசைமாறலும் தீவிரமடைவும்

 

உக்ரேனும் இரசியாவும் ஒன்றின் மீது மற்றது செய்யும் தாக்குதலை மாற்றிக் கொண்டும், தீவிரப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன. இரசியா மேலும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதை தீவிரப்படுத்துகின்றது. உக்ரேன் இரசியாவின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் இரசியாவின் கடற்போக்குவரத்து மற்றும் எரிபொருள் உற்பத்தி நிலைகளில் தாக்குதல்கள் செய்கின்றது. 2024 மார்ச் 24-ம் திகதி Yamal and Azov என்னும் பெயர்களைக் கொண்ட ஈரூடக தரையிறக்கக் கப்பல்கள் இரண்டு, தொடர்பாடல் நிலையம் ஒன்று, கருங்கடலில் உள்ள இரசியக் கடற்படையின் பல கட்டுமானங்கள் ஆகியவற்றின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரேனின் பல பகுதிகளில் இரசியாவின் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரேனின் மேற்குப் பகுதிகளில் செய்யப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எல்லையைத் தாண்டி ஒரு ஏவுகணை சென்று போலந்திலும் விழுந்துள்ளது.

 

யார் கைகளில் அதிக இஸ்லாமியக் குருதி

 

இரசியா ஆக்கிரமித்துள்ள 1. டொன்பாஸ் பிரதேசத்தில் 6 விழுக்காடு இஸ்லாமியர் உள்ளனர். 2. கிறைமியாவில் 15 விழுக்காடு இஸ்லாமியர்கள் உள்ளனர். இரசியாவின் 5.4 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இரசிய ஆட்சியாளர்களின் கைகளில் இஸ்லாமியர்களின் இரத்தம் படிந்துள்ளது என இரசியாவின் Crocus City Hall என்ற கேளிக்கை நிலையம் மீதானதாக்குதலுக்கு உரிமை கோரிய ஐஎஸ் (கொரசான்) அமைப்பு தெரிவித்துள்ளது. நூறுவிழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்ட காசா நிலப்பரப்பில் உக்ரேன் – இரசியப் போரிலும் பார்க்க அதிக அளவில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவினதும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடனினதும் கரங்களில் இரசியத் ஆட்சியாளர்களின் கரங்களிலும் பார்க்க அதிக அளவு இரத்தம் படிந்துள்ளது. ஆனாலும் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பின் எந்த ஒரு பிரிவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. இது இஸ்லாமிய அரசு அமைப்பு ஓர் இஸ்ரேலின் கைக்கூலியா என்ற நீண்ட கால ஐயத்தை வலுப்படுத்துகின்றது.

 

கொரசான் பிரதேசம்

 

ஈரானின் வடபகுதி, ஆப்கானிஸ்த்தான், மற்றும் தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகிய நடுவண் ஆசிய நாடுகளின் தென்பகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட பிரதேசம் கொரசான் என அழைக்கப்படுகின்றது. அதன் பொருள் சூரியனின் நிலம் என்பதாகும். அங்கு வாழ்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய இரசியர்களையும் வேறு இனத்தவர்களையும் கொண்ட அமைப்புத்தான் ஐஎஸ் (கொரசான்) ஆகும். அவர்களின் பிரதேசம் இரசியாவின் தெற்கு எல்லையில் இருப்பதாலும் அவர்கள் இரசிய மொழியை பேசக்கூடியவர்கள் என்பதாலும் அவர்களால் மொஸ்க்கோவரை சென்று தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது. 2014இல் ஐஎஸ் அமைப்பு மிகவும் வலிமை மிக்கதாக இருந்த போது அதன் கொரசான் பிரிவின் உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பதிற்கும் குறைவானதாகவே இருந்தது.

 

ஏன் தாக்குதல் செய்யப்பட்டது?

 

2014-ம் ஆண்டு சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு இரசியா ஆதரவு வழங்கியமை ஐஎஸ் அமைப்பினரை இரசியா மீது சினம் கொள்ள வைத்தது. அதனால் அதன் ஒரு பிரிவான ஐஎஸ் கொரசான் 2024 மார்ச்சில் மொஸ்க்கோ Crocus City Hall மீது தாக்குதலை நடத்தினர் என்கின்றது கார்டியன் பத்திரிகை. அது நம்பும் படியாக இல்லை. இரசிய உளவுத்துறையான FEDERAL SECURITY SERVICE(FSB) Crocus City Hall மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் கொரசோனா அமைப்பிற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு உண்டு என்றார். ஆனால் அவர் அதற்கான காத்திரமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை. இரசியா சார்பாக பன்னாட்டு காவற்துறையில் (INTERPOL) இல் பணியாற்றிய மேஜர் ஜெனரல் விளடிமீர் ஒவ்சின்ஸ்க்கி Crocus City Hall தாக்குதலின் பின்னால் உக்ரேன் இருக்கின்றது என்றார். மேற்கு நாட்டு ஊடகங்கள் ஒரு சில தனது நாட்டு மக்களை தன் பின்னால் திரளவைக்க இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனே இதைச் செய்திருக்கலாம் என்கின்றன. ஆனால் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த இஸ்ரேலிய உளவுத்துறை இதைச் செய்திருக்கலாம் என எந்த ஒரு செய்தியும் வரவில்லை! ஐஎஸ் கொரசான் அதிக தாக்குதல்களைச் செய்த இடங்கள் ஆப்கானிஸ்த்தானும் பாக்கிஸ்த்தானுமே. 2024 ஜனவரியில் ஈரானின் கெர்மன் நகரில் ஐஎஸ் கொரசான் நடத்திய இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 96பேர் கொல்லப்பட்டனர். 2024 மார்ச் 7-ம் திகதி மொஸ்க்கோவில் உள்ள யூத வழிபாட்டிடத்தில் நடத்திய தக்குதல் முறியடிக்கப்பட்டது! ஆனால் 2024 மார்ச் 22-ம் திகதி மொஸ்க்கோ Crocus City Hall நட த்திய தாக்குதல் முறியடிக்கப்படவில்லை. 143பேர் அதில்கொல்லப்பட்டனர்.

 

காசா நிலப்பரப்பில் நடக்கும் தாக்குதலால் உலகெங்கும் அமெரிக்கா மீதான வெறுப்பு அதிகரிக்கின்றது. பலநாடுகளில் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கை இழக்கின்றனர். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க செல்வாக்கு இழப்பதற்கு அவர் அமெரிக்கா சார்பானவர் என்பதும் ஒரு காரணியாகும். இதைச் சரி செய்ய ஓர் இஸ்லாமிய அமைப்பு ஒன்றை உலகின் பல பகுதிகளில் அதிலும் அமெரிக்காவிற்கு வேண்டப்படாத நாடுகள் மீது ஐஎஸ் கொரசான் அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றார்களா?