சங்கடமான நிலையில் சவுதி அரேபியா

27-01-2024

0

0

சவுதி அரேபியா 1. இஸ்ரேலுடனான அரச தந்திர உறவை இயல்பு நிலைக் கொண்டு வருதல், 2. ஈரானுடன் நல்லுறவை ஏற்படுத்தல், 3. யேமனில் செயற்படும் அன்சர் அல்லா(ஹூதிகள்) அமைப்பினருடன் மோதலைத் தவிர்த்தல் ஆகியவற்றிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கையில் 2023 ஓக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலைத் தொடுத்தனர். அது போதாது என்று சவுதி அரேபியாவின் தென்புறமாக உள்ள செங்கடலூடாகச் செல்லும் கப்பல்கள் மீது அன்சர் அல்லா (ஹூதிகள்) அமைப்பினர் தாக்குதல் செய்யத் தொடங்கினர்.

 

கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு கண்டித்த சவுதி

பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ் அமைப்பினர் 2023 ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது செய்த தாக்குதல் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவைச் சிதைப்பதற்கு ஈரான் செய்த சதி என அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சவுதி - இஸ்ரேல் உறவு சீரடையும் போது ஹமாஸ் அமைப்பினர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது உண்மையாகும். ஹமாஸின் தாக்குதலை சவுதி அரேபியா கண்டனம் செய்யாமல் இருந்தது. பின்பு இஸ்ரேல் பதிலடியாக காசா நிலப்பரப்பில் கொடூரமான தாக்குதலைச் செய்யும் போது அதைக் கண்டிக்காமல் இருந்தால் உலகெங்கும் வாழும் இஸ்லாயர்களுக்கு சவுதி அரேபியா மீது வெறுப்பு ஏற்படும் என சவுதி உணர்ந்து கொண்டது. அதனால் 2023 ஒக்டோபர் 20-ம் திகதி சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர் தேர்க்கி அல் ஃபைசல் ஹமாஸும் இஸ்ரேலும் அப்பாவிகள் மீது செய்யும் தாக்குதல்களைக் கண்டித்தார். Washington Institute for Near East Policy என்ற அமெரிக்க அமைப்பு அரபு நாடுகளில் செய்த ஆய்வின்படி அங்கு வாழும் மக்களில் 96 விழுக்காட்டினர் அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளனர்.

 

இல்லாமல் போன மூன்று “இல்லைகள்”

1967 ஓகஸ்ட் மாத இறுதியில் சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் முக்கியமானவையாக இருந்தன:

1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 

2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 

3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.

ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலால் மட்டுப்படுத்தப்பட்டது. 1994 ஒக்டோபரில் ஜோர்டான் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையைச் செய்துகொண்டது. 2020 ஒக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன், சூடான், மொரொக்கே ஆகிய நாடுகள் ஆபிரஹாம் உடன்படிக்கை என்னும் பெயரில் இஸ்ரேலுடன் அரச உறவுகளை ஏற்படுத்தின. இவற்றை பின்னின்று இயக்கியது அமெரிக்காவாகும். மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை

 

அமெரிக்காவின் கேந்திரோபாய நோக்கங்கள்:

1. உலக எரிபொருள் விநியோகம்

2. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பு

3. ஈரானையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அடக்குதல்

4. ஜெருசேலம், பெத்தலேகம் ஆகிய புனித வழிபாட்டிடங்களை பாதுகாத்தல்

இவற்றை நிறைவேற்றும் போது பலஸ்த்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வலுவிழக்கச் செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கையாக சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்தல் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தது. மத்திய கிழக்கையும் வட ஆபிரிக்காவையும் (Middle East and North Africa = MENA மேனா) அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறைக் கொள்கை வகுப்பாளர்கள் மேனா பிரதேசம் என வரையறை செய்துள்ளனர். அங்கு அமெரிகாவின் ஆதிக்கம் தொடர்ந்து பேணப்படுவதற்கு அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள நாடுகளிடையே நல்ல உறவு ஏற்படவேண்டும். பலஸ்த்தீனப் பிரச்சனைக்கு முடிவுகட்டாமல் மேனா பிரதேசத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்த்தவே ஈரானின் உதவியுடன் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு, அன்சர் அல்லா(ஹூதிகள்) உட்படப் பல தீவிர அமைப்புக்கள் செயற்படுகின்றன.

 

சவுதி அரேபியாவின் பொருளாதார திருப்பல் திட்டம்

சவுதி அரேபியாவின் ஏற்றுமதி வருமானத்தில் எண்பது விழுக்காடு எரிபொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றது. 2016-ம் ஆண்டு சவுதி தனது பொருளாதாரத்தை மாற்றியமைக்க Saudi Vision 2030 என்னும் திட்டத்தைத் தீட்டியது. சவுதியில் எலத்திரனியல் வர்த்தகத்தை வளர்த்து பங்குச் சந்தை, நிதிச் சந்தை உட்பட உலகின் பல்வேறு சந்தைகள் தமது நாட்டில் செயற்படுவதை வளர்க்கவும் தமது நாட்டை ஒரு உல்லாசப் பயணிகள் விரும்பும் நாடாகவும் மாற்றத் திட்டமிட்டது. அதற்கு அதன் சுற்றியுள்ள பிரதேசம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற இஸ்லாமித் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டு. அதற்கு இஸ்ரேலின் உதவி மிக அவசியம் என சவுதி நினைக்கின்றது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஹூதிகள் என அழைக்கும் அன்சர் அல்லா என்ற யேமனில் செயற்படும் அமைப்பிற்கு எதிராக சவுதி அரேபியா 2015 மார்ச் மாதம் எதிராகப் போர் தொடுத்தது. சவுதி அரேபியாவுடன் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சூடான், பாஹ்ரேன், குவைத் கட்டார், ஜோர்டான், மொரொக்கோ, செனகல் ஆகிய நாடுகளும் இனைந்து கொண்டன. பல கூலிப்படையினரும் அதில் பணிபுரிந்தனர். ஈரான் வழங்கிய தொலைதூர தாக்குதல் ஏவூர்திகளாலும் ஏவுகணைகளாலும் அன்சர் அல்லா அமைப்பினர் சவுதியின் எரிபொருள் நிலையங்கள் மீது தாக்குதல் தொடங்கிய பின்னர் சவுதி தனது போரை நிறுத்தி அன்சர் அல்லா அமைப்பினர்களுடன் 2022 மார்ச்சில் இருந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அன்சர் அல்லா 2023 நவம்பர் 19-ம் திகதியில் இருந்து செங்கடலூடாகப் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செய்யும் தாக்குதல்களை சவுதி அரேபியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. 

சவுதி அரேபியா ஹமாஸ் அமைப்பினருடனோ அன்சர் அல்லா (ஹூதிகள்) அமைப்பினருடனோ எந்த ஒரு முரண்பாட்டையும் விரும்பவில்லை. அது அதன் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தைப் பாதிக்கும். அதேவேளை சவுதியின் பொருளாதாரத் திட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு தேவை. இரண்டுக்கும் நடுவில் சங்கடப்படுகின்றது சவுதி.