கடலில் கன்னிவெடிகள்- ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை மீறி தானிய ஏற்றுமதியை முன்னெடுக்கும் உக்ரைன்
28-11-2023
0
34

ரஷ்யா பல்வேறு இடையூறுகளையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் அவற்றையெல்லாம் மீறி உக்ரைன் தானிய ஏற்றுமதியை திறம்பட செய்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றியும், தானியங்கள் ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உணவுத் துறை அமைச்சர் எனப் பலரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. ஆரம்பத்தில் கருங்கடல் பகுதியின் துறைமுகங்கள் முடக்கப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஐ.நா. சபையும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்ததையடுத்து ரஷ்யா, உக்ரைன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தானியங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக உக்ரைனில் சில துறைமுகங்கள் திறக்கப்பட்டன. இவற்றின் வழியாக வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் ஐ.நா. மத்தியஸ்தால் ஏற்பட்ட உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா பின் விலகியது. ஆனாலும், உக்ரைன் உலக நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்வதில் பின்வாங்கவில்லை. மத்திய உக்ரைனில் இருந்து பஞ்சத்தால் பரிதவிக்கும் பகுதிகளுக்கு தானியங்களை கொண்டு செல்ல நிறைய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தானியக் கிடங்குகளில் இருந்து தானியங்கள் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. ரஷ்யா கடலில் கன்னிவெடிகளை வைத்து கப்பல்களைத் தகர்க்கும் அபாயம் இருந்தாலும் கூட கருங்கடல் பகுதியில் வாணிபம் தற்போது விறுவிறுப்பாகவே உள்ளதாக உக்ரைன்வாசிகள் தெரிவிக்கின்றனர்.